Thursday, 10 October 2013

மரணத்திற்கு பின்னே...!!

மரணத்தை நோக்கிய
வாழ்க்கையெனும்
இரயில் பயணத்தில்..

சேருமிடத்தையடையும் வழியை
எவர்தான் அறிவார்..?

இரயில் சக்கரத்தில்
சிக்குண்டு சிதைந்து..
இரத்தமும்,சதையும்
இரும்புத்தண்டவாளத்தில்
வரையும் ஓவியத்திலா..?

ஆற்றின் சுழலில் சிக்குண்டு
மூச்சுத்திணறியா..??

மதிகெட்டு மதுவிற்கடிமையானவனின்
வாகனத்தில் அடிபட்டு
மூளை சிதறியா..??

வறுமை,காதல், தோல்வி, ஏமாற்றம்
வரதட்சிணைக்கொடுமையென
எத்தனையெத்தனையோ அனுபவங்களை
எதிர்கொள்ள மறுக்கும்
கோழைகள் எடுக்கும் கயிற்றிலா..??
விசத்திலா..??

எவரிடமோ பணம் வாங்கி
எவரையோ கொல்லும்
கூலிப்படையிடத்திலா..?

குண்டுவெடிப்பிலா..??

விதவிதமாய் விருந்தினராய்
வந்திருக்கும் நோயினாலா..??

எதுவுமே அறியாத  - இந்த
வாழ்க்கைப்பயணம் முடிவதற்குள்
உறவுகள், நட்புகள்
வாழ்க்கையை படிப்பிக்கும் ஆசான்களும்
எதிரிகளுமாய்..
எத்தனையெத்தனை
பயணிகள்..?!!

எத்தனையெத்தனை
அனுபவ நிறுத்தங்கள்..??!!

இறங்கும் இடம்வருவதற்குள்
இரயிலே தமதென அங்கலாய்க்கும்
அகங்காரத்துடன் சிலர்...

இந்தப்பயணம் தேவையா
அறுவெறுப்புடன் சிலர்..

பயணம் வரமென
ஒவ்வொரு நொடியின்
மணத்தையும் நுகர்ந்தபடி சிலர்..

சாபமாய் அமைந்ததென
பயணத்தை சாடியபடி சிலர்..

பயணத்தைக் கடப்பது
காலத்தின் கட்டாயமென
சேருமிடத்தை எதிர்பார்த்து
தத்துவம் பேசியபடி - சிலர்
மேற்கொள்ளும் பயணத்தில்..

சூழ்ச்சியே தமதாய்க்கொண்டு
பிறர்கேட்டில் மனம்மகிழும் சிலர்..

இ(ற)ருக்கும் வரை
பிறருக்குதவிடும் சிலர்..

பிறருக்காக தன்நலன்
கருதாது தியாகமே உருவாக சிலர்...

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி புகழ்தேடும் சிலர்..

உழைப்பே உயர்வென சிலர்
பிறர் உழைப்பை தனதாய் கருதும் சிலர்..

நாட்டிற்காக நாமென சிலர்..
நாடே எனக்காகவென சிலர்..

தாயிற்காக இல்லாளை
எள்ளி நகையாடும் கணவனாய் சிலர்...

காரிகைக்காய் கருவில் சுமந்தவளை
கால்பந்தாய் நினைக்கும் சிலர்..

ஆயிரமாயிரம் அனுபத்துடன்
கோடிக்கணக்கான பயணிகளை
சுமக்கும் வாழ்க்கை இரயில்
நிறுத்தத்தை சென்றடையுமா..?
நிறுத்தாமல் மோதிநிற்குமா
அறியாத இந்தப்பயணத்தில்
பயணிகளாய் நாம் போடும் ஆட்டம்தான்
எத்தனையெத்தனை..?

மறுபடியும் அடையமுடியா
வாழ்க்கையினை
வஞ்சம் சூது தவிர்த்து
மகிழ்வுடன் வாழ்ந்திருக்கலாமோ
பிறர் போற்ற
பிறருக்காக வாழ்ந்திருக்கலாமோ....??
மரணித்தவன் மனம் கதறுகிறது
மரணித்தபின்...!!
மகிழ்வுடன் வாழ
மறுபிறப்பு கிடைக்காதாவென
ஏங்கியேத் தவிக்கிறது
இருக்கும் போது வாழாத
இறந்தவனின் மனம்...!!!


20 comments:

 1. மரணத்தின் பின்னே... என்று முன்பே சிந்திக்கவைத்த
  சிறந்த கற்பனைக் கவிதை தோழி!

  எண்ணவைத்து மலைக்க வைக்கும் எழுத்தாற்றல் கண்டு வியக்கின்றேன்!
  வாழ்த்துக்கள்!

  த ம.2

  எனது வலைத்தளப் பக்கம் வாருங்களேன்... மகிழ்வேன்!
  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை மெருகேற்றட்டும்..நன்றி. அவசியம் வருகிறேன். :)

   Delete
 2. வணக்கம்

  மறுபிறப்பு கிடைக்காதாவென
  ஏங்கியேத் தவிக்கிறது
  இருக்கும் போது வாழாத
  இறந்தவனின் மனம்...!!!

  கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தோழமையின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..:)

   Delete
 3. அறியாத இந்தப்பயணத்தில்
  பயணிகளாய் நாம் போடும் ஆட்டம்தான்
  எத்தனையெத்தனை..? // உண்மைதான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. முடிவில் வரிகள் உண்மை...

  ReplyDelete
 5. அக்கா...
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அட...நன்றி தம்பி..(கவிதைன்னு சொன்னதுக்கு அட...:)

   Delete
 6. இருக்கும் போது வாழாத மனம் - இறந்த பின் வாழத் துடிக்கின்றது!.. நல்ல கற்பனை!.. சிந்தனைக்கு விருந்து!..

  ReplyDelete
 7. மரணித்தபின்...!!
  மகிழ்வுடன் வாழ
  மறுபிறப்பு கிடைக்காதாவென
  ஏங்கியேத் தவிக்கிறது
  இருக்கும் போது வாழாத
  இறந்தவனின் மனம்...!!!

  ஆழமான சிந்தனையுடன் கூடிய
  அற்புதப் பதிவு
  முடித்த விதம் அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ..தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.._/\_

   Delete
 8. மிகவும் அருமையான ஆக்கம்.

  //மகிழ்வுடன் வாழ்ந்திருக்கலாமோ
  பிறர் போற்ற பிறருக்காக வாழ்ந்திருக்கலாமோ....??//

  இதைப்படிப்பவர்களாவது, இறப்பதற்கு முன்பே இதைப்பற்றி சற்று நினைத்து தங்களை மாற்றிக்கொள்ளலாம்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. மரணத்தை நோக்கி செல்லும் வாழ்க்கையெனும் இரயில் பயணத்தில், பயணத்தின்போது சம்பவிக்கும் சம்பவங்கள் அனைத்தையும் இரயிலைவிட நீளமாக கோர்க்கப்பட்டிருக்கும் வரிகள் அனைத்தும் அருமை.

  வாழ்கைப்பயணத்த பயணிக்கும் விதத்தில் பயணிக்காமல் "பயணம் முடிந்தபின் சிந்திக்கும் பயணித்தவரின் மனம்". அருமை.

  வாழ்க்கைப்பயணமானது ஏதாவது ஒரு விதத்தில் முடிவதென்றாலும் இதுபோன்ற அற்புதமான வரிகளுக்கு முடிவென்பதே கிடையாது. என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் வரிகள் இது. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இரயில்நீள படைப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆனந்த்...:) முடிவில்லா வாழ்க்கைப்பயணம்போல் தங்களது தொடர்ந்த ஊக்கம் எமது படைப்புகளை தொடரச்செய்யட்டும்..நன்றி. :)

   Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__