Tuesday, 5 November 2013

கண்ணீருக்குப்பின்னே...!!!


கடற்கரையில் அமர்ந்த
காரிகையவளின் பார்வையும்
கடலழகை ரசிக்காது
எங்கோ நிலைகுத்தியிருக்க..
எண்ணக்கொந்தளிப்பின்
சாட்சியாய் 
அழுதுச்சிவந்த கண்மலர்கள்..!!

காலையில் படிப்பு,
மாலையில் விளையாட்டு
எனக்கூறிய பாரதியின் - பிற்பாதி வரிகளை 
கடைபிடித்து
பெற்றோர் ஆசையை 
நிறைவேற்றாது
விளையாட்டுப் பெண்ணாயிருந்ததை 
எண்ணியா..??

கன்னிப்பருவத்தில்
களவுபோன மனதையேற்க
குடும்பம், சமுதாயமென
மறுத்து, மறந்த 
துணிவில்லாதவனுக்காய்
ஏங்கியதை எண்ணியா....??

திருமணம் துறந்து
அனைத்துக் குழந்தைகளுக்கும்
அன்னையாய் விளங்கி
கருணையோடு திகழவெண்ணி
தோற்றப் பேதைமையை எண்ணியா..??

திருமணமே
இல்லம் பராமரிக்கவென - இசைந்து 
தொலைக்காட்சியில் தொலைந்து 
தொடரில் வரும் மாமியோரோடு ஒப்பிட்டு
கணவனோடு சண்டையிட்டு
சராசரிப்பெண்ணாயில்லாது..
பிரபஞ்சம் வியக்க
நாலும் கற்றறிந்து 
நிலவிலும், செவ்வாயிலும்
காலடி வைக்கவிரும்பி
முடியாது போகவே
கணவனுக்கும் நல்ல மனைவியாக 
திகழ முடியாததை
எண்ணியா..??

குழந்தை பிறக்காதென்ற
மருத்துவரின் கூற்றை
எண்ணியா.??

கர்ப்பத்தில் 
தரித்தகுழந்தை
தரணி காணாது
கருவறையைக் 
கல்லறையாய் ஏற்றதை
எண்ணியா...?

பிறந்த குழந்தைகள்
ஏட்டளவில் படித்து
மதிப்பெண்கள் மதிப்பாய் - பெற்றால் 
போதுமென எண்ணாது
மனதிற்கு பிடித்தாற்போல் இருக்க 
அனுமதித்து
பொறுப்பற்றத் தாயாக 
இருந்ததை எண்ணியா..??

அலுவலகத்தில்
நிர்வாகத்தின் புலியாக 
விரும்பி செயல்பட..
நிர்வாகியோடு 
தொடர்பு படுத்தி பேசும்
சகாக்களின் எண்ணங்களை
எண்ணியா.??

கண்ணெதிரே நடக்கும்
சமுதாய சீர்கேடுகளை
களைந்தெடுக்க முயல - உரிமையில் 
உணர்வு விளங்கிடப்பட்டு
செயலிழக்க செய்யப்பட்டதை
எண்ணியா...??

இதில் ஏதாவதொரு
எண்ணம் அவளுள் 
கொந்தளித்துக்கொண்டிக்கலாம்...
ஒரு நொடி நின்று 
அவளை உற்றுநோக்கி
கண்ணீரின் காரணமறிய நினைக்க...

தம்முள் எங்கோ மூலையில்
எச்சமிருக்கும்
சோகத்தளிரை 
துளிர்த்தெழச்செய்யுமோ..??!
என்றெண்ணி அஞ்சியே
அனைவரும் கடக்கின்றனர்..
எவருமறியாமலே கரைந்து
கடலில் சங்கமிக்கிறது
அவள் கண்ணீர்...!!
12 comments:

 1. அவளின் சோகங்கள் நிறைந்த வாழ்வைக் கவிதையாக்கி மிகச்சுலபமாக எழுதியுள்ளீர்கள். படிக்கும் எங்களுக்கும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

  படைப்புக்குப் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அ‌ரிது அ‌ரிது பெ‌ண்ணா‌‌ய் ‌பிற‌ப்பது அ‌ரிதென சொல்லப்பட்டுள்ளது அரிதென கருதும் ஒவ்வொருவர் பெண்ணின் மனதிலும் சோகத்திற்கு வெவ்வேரு காரணங்கள் இருக்கலாம் ஆனால் பெண்ணிற்குள்ளிருக்கும் சோகங்களுக்கு இத்தனை காரணங்களா! இப்படியாக ஏதோ ஒரு காரணத்தால்தான் அவளின் கண்ணீர் கடலில் சங்கமிக்கிறது என்பதை சிந்தித்து பார்க்கும்பொழுதுதான் புரிகிறது கடலில் நீர் உப்பானதற்கான காரணம் :(

  அருமையான கவிதை கவிதாயினி காயத்ரி அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆனந்த்..:)

   Delete
 3. sssss...!!

  suttathu ungal varikal sako...!

  ReplyDelete
 4. எவருமறியாமலே கரைந்து
  கடலில் சங்கமிக்கிறது
  அவள் கண்ணீர்...!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா..தங்களுடைய வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.:)

   Delete
 5. எவருமறியாமலே கரைந்து
  கடலில் சங்கமிக்கிறது
  அவள் கண்ணீர்...!!

  ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__