முகப்பு...

Thursday, 15 December 2011

அப்பா.....



அன்று,
உன்னை எனக்கு அம்மா அடையாளம் காட்ட.,
நீயோ
இந்த உலகை எனக்கு அடையாளம் காட்டினாய்.

என் சின்னக்கை பிடித்து...
சிற்றூரை உலாவரும் வேளையில்.,

என் பொற்பாதம் பூமியில் படக் கூடாதென
உன் மேனியில் சுமந்து சென்றாயே..

ஐயிரண்டு திங்கள் எனைச்சுமந்த
என் அன்னையையும்
சுமந்தவனாயிற்றே..!

நீ
வெறும் நீரருந்தி உறங்கினாலும்
நாங்கள் நெற்சோறு சாப்பிட
உழைத்தவன் நீ.

நீ
உழைத்துக் கலைத்து ஓய்ந்து போய் வந்தாலும்,
என் புன்னகை கண்டு
பெருமிதம் கொள்வாயே..!!        

எனக்கு படிப்பறிவளிக்க
பலபேரிடம் யாசித்தாயே..

நீ அடையாத இன்பத்தை நான்
அடைய வேண்டுமென நீ பட்ட
துன்பம் யாரறிவார்??

நான் வளமோடு வாழ,
நீ
விழித்த இரவுகளுக்கும், வடித்த கண்ணீருக்கும்.
வையகத்தில் விலை கொடுக்க முடியுமா??

அன்று
இந்த  உலகை எனக்கு அடையாளம் காட்டிய
நீ,

இன்று
இந்த உலகம் என்னை அடையாளம்
காண நீ அடைந்த வேதனைகள்தான் எத்தனை?

இன்று
பல முதிர்கன்னிகளுக்கு,
எட்டாக்கனியாக இருக்கும் திருமணத்தை,
எனக்கு அமைத்துக் கொடுக்க,
நீ
எடுத்தது மறுபிறவி அல்லவா ??

மணமுடிந்து நான் மணாளனுடன்
செல்கையில் நீ மறைந்திருந்து,
வடித்தது ஆனந்தக் கண்ணீரானாலும்,
அது என் இரத்தத்தை அல்லவா உறையச்செய்தது?

துன்பத்திலும் கண்ணீரைக் காணாத
என் தந்தையின் கண்கள் இன்று
கண்ணீர் வெள்ளத்தில்!!

அன்று எழுத்தறிவித்தபோது
ஆசானாக விளங்கினாய்..
என்னுடன் விளையாடி மகிழும்போது
நண்பனாகத் தோன்றிய   நீ,

இன்று
இறைவனாகவும் திகழ்கிறாய்..
தந்தையே,
இப்பிறவியில் நான் அடைந்த பேரு..
இனி எப்பிறவி எடுப்பின் கிட்டும் ??



No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__