முகப்பு...

Thursday 6 September 2012

எழுத்தும் எழுத்தாளனும்...



அன்புத்தோழமைகளுக்கு வணக்கம்..

நீண்ட நாட்களாக எமக்கு எழும் சந்தேகம் இது..படிக்கும் அனைவரும் விருப்பம் மட்டும் தெரிவிக்காமல் தவறாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து செல்லவும்..

         *********************

நம்மிடம் நம்மை அறியாமலேயே ஒரு குணம் உள்ளது. ஒரு எழுத்தாளனின் எழுத்தை அவன் வாழ்வியலோடு ஒப்பிட்டுப்பார்ப்பது.  இது சரியா..?? எழுத்து என்பது சிலநேரம் கற்பனை, சில கண்டது, கேட்டது ரசித்தது, மனத்தை பாதித்த நிகழ்வு, சில தன்னுள் எழும் உணர்வுகள், தனது விருப்பம்..இப்படி எவ்வளவோ அதில் அடங்கியிருக்கிறது. ஒருவனுக்கு மகிழ்ச்சியாகவும், ஒருவனுக்கு சோகமாகவும், ஒருவனுக்கு காதல் சொட்டும் வண்ணமும், ஒருவனது எழுத்தில் காமல் அதிகமாகவும் ஒருவனது படைப்பு இயற்கை எழிலை கண்முன் காட்டுபவைகளாகவும் சில எழுத்துக்கள் சமூக சாடல் சார்ந்ததாகவும், சில ஆன்மீகம்..இப்படி எண்ணிலடங்கா எழுத்துக்களை ஒவ்வொருவனும் தன் சிந்தனைக்கேற்ப கொடுக்கிறான். அது அவனது கற்பனா சக்திக்கேற்ப வெளிப்படுகிறதே தவிர அதுவே அவனில்லை.  கோபம், சோகம், காதல், காமம், துன்பம், பாதிப்பு, எதிர்பார்ப்பு, விருப்பு, வெறுப்பு, ஏக்கம்மகிழ்ச்சி, வஞ்சம் என எத்தனையோ உணர்வுகளை பிரதிபலிக்கிறான். எனினும் அவனது எழுத்துக்களை அவனாக கற்பனை செய்வது நம்முடைய இயல்பாகிறது.  மகிழ்ச்சியை அதிகம் கூறினால் மகிழ்வாக இருக்கிறார்கள் எனவும், சோகம் அதிகம் கூற சோகம் அவர்களை வாட்டுகிறது எனவும், காதல் கூற காதல்வசப்பட்டார்கள் எனவும், காமம் சார்ந்தெழுத காமுகனாகவும் சிந்திப்பது சரியா..?? கணவன், மனைவி, மாமியார் என குடும்பச்சூழலை சுட்டிக்காட்டியெழுதினால்  கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனரோ எனவும் சிந்தித்து எழுத்தாளனின் சிந்தனைச் சிறகுகள் அவன் விரும்பியோ, விரும்பாமலோ வெட்டப்படுகின்றன என்பது என் கருத்து..இதைப்பற்றிய மற்ற எழுத்தாளர்களும், விரும்பிப்படிக்கும் வாசகர்களும் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தங்களுடைய எண்ணங்களைப் பகிர ஒரு புரிதல் ஏற்பட்டு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே இந்தப்பதிவு..

அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிரவும்..நன்றி.


12 comments:

  1. பிழையான புரிதல்......எழுத்து வேறு எழுத்தாளன் வேறு.. இது தான் என் சிறிய கருத்து

    ReplyDelete
  2. மற்றவர்களின் கருத்தை அறிந்து ஏன் எழுத வேண்டும்...? (உண்மையான குறைகளை ஆராய்ந்து மாற்றிக் கொள்ளலாம்... அது வேறு விஷயம்) இது உங்கள் தளம்... என்ன வேண்டுமானாலும் எழுதலாம்...

    நாம் எழுதும் எழுத்துக்கள் நம்மை சீர்படுத்தினால் போதாதா...? எப்போது எழுத வேண்டாம் / அல்லது முடியவில்லை என்று நினைக்கிறோமோ, நம் பதிவுகளை, நமக்கு பின்னால் வரும் நம் குழந்தைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன் படாது என்று - அப்போது நம் பதிவுகளையே (சிலவற்றை) DELETE செய்யாமல் இருந்தால் சரி... அப்படி தான் நான் எழுதுகிறேன்...

    எழுத மறந்து விட்டேனே...? முதல் வரி "என்னைப் பொறுத்தவரை..." என்று எழுத மறந்து விட்டேனே...!

    ReplyDelete
    Replies
    1. // நம் பதிவுகளை, நமக்கு பின்னால் வரும் நம் குழந்தைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன் படாது என்று - அப்போது நம் பதிவுகளையே (சிலவற்றை) DELETE செய்யாமல் இருந்தால் சரி... அப்படி தான் நான் எழுதுகிறேன்..// உண்மைதான் சகோ..

      //மற்றவர்களின் கருத்தை அறிந்து ஏன் எழுத வேண்டும்...?//
      பலர் இப்படியும் பார்க்கத்தானே செய்கிறோம்..இது சரியா என்பதற்காகவே இந்த பதிவு சகோ..நன்றி சகோ.

      Delete
  3. தன்னைப் பாதித்தவைகளை
    ( அது கேட்டதாக ,பார்த்ததாக, அனுபவித்ததாக, கற்பனையாக )
    படிப்பவர்களும் பாதிக்கும்படி எழுதுவதே எழுத்து
    பாதிப்பின் ஆழமே படைப்பின் உச்சம் எனக் கூடக் கொள்ளலாம்
    அது அனுபவித்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை
    ஆயினும் படிப்பவன் உணரும்படி எழுதுவதே நல்ல
    எழுத்து என்பது என் எண்ணம்
    ஆழமாக யோசிக்கும்.உங்களிடம் அதிகம்
    எதிர்பார்க்கத் தோன்றுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தெளிவான கருத்திற்கு நன்றி தோழமையே..//உங்களிடம் அதிகம்
      எதிர்பார்க்கத் தோன்றுகிறது// கவிதையுலகில் அகரம் படிக்கத்துவங்கியிருக்கும் குழந்தை..முயற்சிக்கிறேன்..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளர்க்கட்டும்.

      Delete
  4. சரியான நேரத்தில் சரியான கருத்தை எழுதியுள்ளீர்கள் தோழி... இதுதான் இன்றைய நிஜம்... ஒருவனுடைய எழுத்தைப்படிப்பவர்கள் அதை அவனுடைய வாழ்க்கை சார்ந்ததாகவே சிந்திக்கிறார்கள்... யாருடைய எழுத்திலும் அவரவருடைய வாழ்க்கை சார்ந்த பிரதிபலிப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே முழு எழுத்தையும் அவருடைய வாழ்க்கை சார்ந்ததாக சிந்தித்தலாகாது. அதே நேரம் ஒருவருடைய எழுத்து முழுவதுமே அவருடைய வாழ்வியல் சம்பந்தப்பட்டது இல்லை என்றும் ஒதுக்கமுடியாது. பெரும்பாலும் ஒருவருடைய வாழ்வியல் பிரதிபலிப்பு கொஞ்சமேனும் அவரின் எழுத்தில் இருக்கும்... அதன் தாக்கம் எவ்வளவென்பது என்ன எழுதுகிறார்கள் என்பதை பொறுத்தது... சரி... எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இப்படி ஒரு பதிவு உங்கள் சிந்தனையில் தோன்றியதற்கு நிச்சயம் எனது எழுத்துக்கள் காரணமில்லை என்று நம்புகிறேன்... :-)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் தெளிவான விளக்கம்..உண்மையுங்கூட..நன்றி.// இப்படி ஒரு பதிவு உங்கள் சிந்தனையில் தோன்றியதற்கு நிச்சயம் எனது எழுத்துக்கள் காரணமில்லை என்று நம்புகிறேன்... :-)// இல்லை தோழமையே..நீண்ட நாள் சந்தேகம் இன்று எழுத்தாக வந்துள்ளது..:)

      Delete
  5. நல்லது. உங்கள் கேள்வியும் நியாமானதுதான். சொல்லியிருக்கும் கருத்துக்களும் கொஞ்சம் சரியென்றே படுவதுதான்.
    என் பதிவு என்னவென்றால்.... எழுத்து வேறு எழுத்தாளன் வேறுதான். ஆனால் படைப்பு வேறு படைப்பாளன் வேறு அல்ல.
    என்னைப்பொறுத்தவரை எது எழுத்து - எது படைப்பு என்ற புரிதல் நமக்கு முதலில் எழவேண்டும்.
    பாரதியின் படைப்பில் இன்றும் பாரதிதெரிகிறானே....
    பாரதிதாசனின் கவிதைகளில் இன்னும் அவனுக்கான அடையாளங்கள் மறையவில்லையே.

    நிச்சயமாக ஒரு படைப்பு என்பது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இன்னும் ஏற்படுத்தும். அது தொடக்கமோ முடிவோ இல்லாதது என்று எனக்குப் படுகிறது. அப்படி இருக்க அதில் ஒரு படைப்பாளன் நிச்சம் கண் சிமிட்டுவான். ஏன் இன்னும் சொல்லப்போனல் ஆவனுக்கான காலம் அவன் காலத்துக்கான சூழல்கள் கலாச்சாரம், பண்பாடு, அரசியல் எல்லாம் வெளிப்படும் என்பதுதான் நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி..._/\_

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__