முகப்பு...

Thursday 20 September 2012

நானும், புறாவும்..




இடம்: சமையலறை சன்னல்.

நான்: புதிதாக குஞ்சு பொறித்த புறா,தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.

புறா: என்ன..??

நான்: இல்லை...எவ்வளவு சுதந்திரமா,எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.

புறா: ஏன்,நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..?

நான்: இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும்  நீயும்  என இருக்கிறாய்.

புறா: நீ....?

நான்: பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து,மாத்திரை,ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.

புறா: அப்படியா..?

நான்: ம்ம். அதோடு கூடவே கவலையும்..

புறா: வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?

நான்: வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..?சிசேரியனா...??என்ற கவலைதான்.

புறா: இயற்கை நியதி மாற்றுவதேன்...??

நான்:விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.

புறா: சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?

நான்: உண்மைதான்.அதோடு விட்டதா..??குளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும்,உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..

புறா: ஏன் இந்த சலிப்பு..?

நான்: இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம்.என் குழந்தை,நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி  இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,உணர்வை மதிக்கத் தவறுகிறோமேநாங்கள் அனைவரும்என்ற ஏக்கம்.

புறா: ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...

நான்: ஏன் உங்களுக்கென்ன..?எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??

புறா: எல்லாம் சரிதான்.ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும்,நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம்,துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..?பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??

நான்: ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..?எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.

வரமாக நினைத்தது வரமா..
வரமில்லையென நினைத்தது வரமா..
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?
வரமென்பதென்ன..
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??




9 comments:

  1. மிகச் சரி
    வரத்தை வரமென அறியாது
    வாங்கிவைத்துத்தான் என்ன பிரயோசனம்
    அற்புதமான கற்பனை உரையாடல்
    மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தோழரே..

      Delete
  2. நவீன வாழ்க்கை கலாசாரத்தை அருமையாக அலசியுள்ளீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இப்படி போட்டி குழப்பிட்டீங்களே...!!! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ...சும்மா ஒரு முயற்சிதான் சகோ.:)

      Delete
  4. நல்ல கற்பனைப் பதிவு.
    அழகாக எழுதியிருக்கிறீர்கள் அக்கா.

    ReplyDelete
  5. புறா: பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??
    வித்தியாசமான உரையாடல்... இருபுற பரிணாமத்தையும் வெளிப்படுத்தியது கூடுதல் சிறப்பு! எவரும் தொடாததொரு சிறந்த முயற்சி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர் தங்கள் கருத்திற்கு..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__