குழந்தைப்பேறு...!! இந்த வார்த்தைக்குதான் எத்தனை சக்தி நம்மிடையே. திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இந்த நாளை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. நினைத்துப்பார்க்கும்போதே நம்மை பரவசப்படுத்தும் ஒரு உணர்வு பிள்ளைப்பேறும், தாய்மையும். பெண்மையின் பெருமையை பெண்மைக்கே உணர்த்தும் விசயம் இந்தக் குழந்தைப்பேறு.
வெளியில் இருந்து பார்க்கும்பொழுது, அவங்களுக்கு கர்ப்பப்பை இருக்கு. பெத்துக்கறாங்க இதில் பெரிசா என்ன இருக்கு..? என சற்றே அலட்சியமாக பேசக்கூட வைக்கும் சிலரை.
உணர்வு ரீதியான விசயத்தை நாம் எதாலும் நிரூபிக்க முடியாது. உணரப்படவேண்டிதை நிரூபித்தும் சாதிக்கப்போவது எதுவுமில்லை. ஒரு மகனைப் பெற்றத் தாயாலேயே, தன் வாரிசை ஈன்றெடுக்கப்போகும் ஒரு மருமகளை உணரமுடியாத ஒரு விசயத்தை ஒரு கணவராக, சகோதரனாக, மைத்துனராக, நண்பனாக உணர முடியுமா..?
திருமணம் ஆன சிலநாட்களிலேயே புதுப்பெண்ணின் மனம் அறியாமலே, என்ன ஏதேனும் நல்ல செய்தி உண்டா எனும் கேள்வி அவளை நாணச்செய்யும். அவளுக்குள்ளும் உடனே குழந்தைப்பேற்றை அடையவேண்டும் என்ற ஆசை இருந்து அது நிறைவேறாத நேரத்தில் இந்தக்கேள்வி அவளை வருத்தமடையச்செய்யும். சிலநாட்கள் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட பிறகு நிதானமாக குழந்தைப்பேற்றை அடையலாம் என்றிருப்போருக்கு இந்தக்கேள்வி எரிச்சலையும், வெறுப்பையும் அளிக்கும். எங்குமே கேள்விகள் கேட்பது சுலபம்தான். ஆனால், அப்படி இடம்பொருள் அறியாது கேட்கப்படும் கேள்விகள் எதிராளியை எத்துனை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதை உணரத்தவறுகிறோம்.
நாம் அறிந்தது எல்லாம், பெண் பிள்ளைகளுக்கென தனித்த உணர்வுகள் ,எதிர்பார்ப்புகள், திறமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆசைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட வயது வந்துவிட்டால்.. பெண் பருவமடைந்துவிட்டாளா என்ற கேள்விகள் கேட்கப்படவேண்டும். பருவமடைந்து குறிப்பிட்ட வருடங்களில் திருமணத்திற்கு வரன் வந்ததா என்றும், திருமணம் ஆனவுடன் குழந்தையில்லையா என்றும் இப்படி ஏதேனும் கேள்விகளைக் கொண்டே, அவளை அவளே உணரமுடியாதவாறு செய்துவிடுகிறோம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெண்மையின் சிறப்பை முதலில் அவள் உணர வாய்ப்பு அளிக்கப்படவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.
குழந்தைப்பேறு என்பது மனதிற்கு உலகத்தில் எதனாலும் ஈடுசெய்யமுடியாத ஒரு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வு. அதை அனுபவிக்கத் தவறுகிறார்கள் பெண்கள். காரணம், இதுபோன்ற நிர்பந்தமான சூழலில் குழந்தை பெற்றுக்கொள்வதால் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
குழந்தையை என் குழந்தை என உணர்ந்து ஒவ்வொரு நொடியும் உள் நிகழ்வை ரசித்துப் பேறுகாலத்தில்கூட அதன் வரவை எதிர்பார்த்து, மகிழ்ந்து உற்றவர்கள் உடன் இருக்க அன்புக்கரங்கள் கண்ணம் வருட இதமான சூழலில் குழந்தைப்பேறு நிகழ்ந்திடின் புது உலகில் உணர்வு பூர்வமான உணர்வை மட்டும் கண்டு வருகை தரும் குழந்தை நிச்சயம் உணர்வை மதித்து அன்பை உணரத் தவறாது.
ஆனால் நாமோ, கருத்தரித்த நாள் முதலே பெயர் சொல்ல ஆண்வாரிசு வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும், எங்க வம்சத்தில் முதல் பிள்ளை ஆண் என்ற கூற்றைக்கூறி, அவளை சுமக்கும் காலத்தில் இருந்தே பிறக்கும் பிள்ளை ஆணாகப்பிறக்க வேண்டுமே என்ற கவலையையும் சேர்த்தே சுமக்கத்தூண்டுகிறோம். அதோடு பிறக்கும்போதே முதல் ஆண்பிள்ளையானா கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவான் என்று நம்மையறியாமலே ஒரு எதிர்பார்ப்பை விதைத்து விருட்சமாக்கி வருகிறோம். விளைவு, எதிர்காலத்தில் குழந்தையை நம் எதிர்பார்ப்பு விருட்சத்தில் காய்க்கப்போகும் பணமெனும் கனிக்காக தயார்படுத்தி பழக்கப்படுத்தத் துவங்குகிறோம். அதுவும் கனியை குறிவைத்தேப் பயணிக்க, கனி அதிகம் விளைச்சல் கொடுக்குமிடத்தை நோக்கி ஓடவே..பிறகென்ன இருக்கவே இருக்கிறாள் குற்றங்களை சுமப்பதற்கென்றே பெண் எனும் பிறவி. அவ வந்தா..பிள்ளை அம்மா, அப்பாவை கவனிக்கலனு அவளை சொல்லலாமே. பாசத்தைவிட பணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை வயிற்றில் இருக்கும் போதே விதைக்கத் துவங்குகிறோம்.
ஒரு பெண் கரு சுமக்கும் காலத்தில் அனுபவித்து, பேறுகாலத்தில் வலி உணர்ந்து ஒவ்வொரு நொடியும் அந்த வலியை இன்பமாக அனுபவித்துப் பெற்று உடனே அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிடும்போது அவளுக்கு அந்த நொடி வாழ்நாளில் கண்டிருக்கமுடியாத மகிழ்ச்சியாக இருக்கும். வலியோடு பெற்றவள் வலியை வழியனுப்பி மகிழ்ச்சிக்கு வரவேற்பளிக்க அக்குழந்தையும் பாசத்தை உணர்ந்து உணர்வோடு உறவாடத்துவங்கும்.
நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் மனைவியிடம் சற்றே கூடுதல் அணுசரனையாக இருந்திடின், பிள்ளை மனைவியின் பின்னால் சென்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை ஆண் சந்திக்கிறான். ஒரு பக்கம் இப்படி எனில், ஒருபக்கம் அந்தகாலத்துல நாங்க எல்லாம் பெத்துக்கலியா என்று ஒரு அலட்சியப் பேச்சைப்பேசும் மூத்த பெண்கள், எங்க அம்மா பெத்துக்கலியா நீ மட்டுமா அதிசயமா பிள்ளை பெற்றுக்கொள்ளப்போற என்ற கணவனின் பேச்சு, குழந்தைப் பேற்றுக்கான காலத்தில் அதைப்பற்றி அறியாத நிலையில் சொல்லமுடியா உணர்வில் ஒருவித பயம், என்ன குழந்தை பிறக்குமோ என்ன சொல்வார்களோ என்ற அச்சம், மேலும் குழந்தை கொடி சுற்றிப்பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்ற பிறந்த வீட்டாரின் மூடநம்பிக்கை அனைத்துமாக அவளை கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் உருக்குலைய வைத்து பலமிழக்க வைக்கிறது.
மனம் பலமிழந்து இருக்க உடல் எப்படி ஒத்துழைக்கும்..? அந்த வலியை அனுபவிக்காது பிரசவம் என்பதை ஒரு போராட்டம் போல் கருதி, கத்தி.. குழந்தைப் பிறந்தவுடனே அள்ளியெடுத்து, உள்ளிருந்த குழந்தையிடம் உணர்வுகள் மூலம் உரையாடி தன் உறுப்பினால் உணவளித்தவள், தன் கருப்பையின் ஈரம் படிந்த குழந்தையை அணைக்கக்கூடத் தெம்பில்லாது மயங்கிவிடுகிறாள்.
செவிலித்தாய் குழந்தையை தூய்மை செய்து, உறவினர் கைகளுக்குப் போய் பிறகே, இவள் பார்க்க நேரிடுகிறது பல இடங்களில். கண் திறந்தவுடன் அவள் கேட்பது என்ன குழந்தை..? காரணம் அவள் அப்படித்தானே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள்...??!
வெளிநாட்டவர்களின் பிரசவத்தில் ஒரு சில விசயங்கள் புரிகின்றன. எனக்குப்பிறகு என் பெயர் சொல்ல ஒரு ஆண் வாரிசு, என்னை கடைசிகாலத்தில் காப்பாற்றுவதற்கு ஒரு வாரிசு என எதிர்பார்ப்புகளை அவள் நெஞ்சத்துள் விதைத்து , குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவோ சமூகத்தில் என்ன சொல்வார்களோ என்ற அவசரத்திற்கோ பிள்ளை பெறாமல் அவர்களுக்கென ”அவள் பெற்ற பிள்ளையாக இல்லாது அவள் பிள்ளையாய் ” உணர்ந்து, அனுபவிக்கிறாள். பிரசவ நேரத்தில் கணவன் உடன் இருந்து, அவளை அன்புடன் உற்று நோக்கி அவளுக்கு நானிருக்கிறேன் என்று இருக்கும் காட்சிகளும், உடையப்படும் பனிக்குடம் தன் மகிழ்ச்சி மழைக்கு முன் விழும் தூறலாய் உணர்ந்து,குழந்தையை வெளித்தள்ளும் முக்கலைக்கூட கத்தாது மெல்லிசையாய் வெளிப்படுத்தும் விதம், பிரசவ வலியைக்கூட புன்னைகையேந்தி வரவேற்று ஒவ்வொரு நொடியும் அனுபவித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள். தொப்புள்கொடிகூட துண்டிக்கப்படாத குழந்தையை,தன் கருப்பையின் ஈரத்தோடு எடுத்து அணைத்து, முதல் சீம்பால் அளித்தவுடன், மார்பகத்தை அடையாளம் காண பயிற்சியெடுத்ததுபோல் கண்ணைக்கூட திறவாது, தன் அன்னையிடத்தே பால் குடிக்கும் குழந்தையின் வாய் பட்டவுடன் பூரிப்படையும் அவள் தன் மார்போடு அனைத்து இவ்வுலகிற்கு வரவேற்பு சொல்வது, நிச்சயம் அவர்களின் பிள்ளைப்பேற்றின்மீது ஒரு மதிப்பையே அளிக்கிறது.
இங்கு இதைப்பகிரும் நோக்கம் நம் பெண்கள் உணர்வுடன் பெற்றுக்கொள்ளவில்லை எனக்கூறவில்லை. தவறானப் புரிதல் வேண்டாம். பிரசவத்தை கிரஹித்துக்கொள்ளும் திராணியற்றவளாய் வலம் வருகிறாள். அவளை உணரவிடாது உறவும், சமூகமும் அவள் மனதை ஆளுமை படுத்தி ஒரு வட்டத்தில் நிற்கப் பழக்கிவிட்டது. சற்றே வட்டத்தை பெரிதுபடுத்துவோம். எத்தனை குழந்தைகள் பெற்றிருக்கிறோம், எங்களுக்கு இல்லாத அனுபவமா..? என்று கேட்பதை நிறுத்தி எப்படிப்பெற்றோம் என்பதை யோசிப்போம். பெண்களின் சக்தியை இழக்கச்செய்யாது பலப்படுத்துவோம்.
உயிரை உணர்வுடன் ஈன்றெடுக்க அப்பெண்ணிற்கு உறுதுணையாய் இருப்போம்.. உணர்ந்து நடப்போம்..!!
*****
மிக அருமையான பதிவு!
ReplyDeleteநூறுவீதம் உண்மை. உணர்வை உணர்வோடு மதிக்க
உறவுகள் உண்னதமாகிடும்!..
வாழ்த்துக்கள் தோழி!
மிக்க மகிழ்ச்சி தோழி.. _/\_ :)
Deleteமிக அருமையான பதிவு.
ReplyDeleteஉயிரை உணர்வுடன் ஈன்றெடுக்க அப்பெண்ணிற்கு உறுதுணையாய் இருப்போம்.. உணர்ந்து நடப்போம்..!!
*****
நன்றாக சொன்னீர்கள்.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.._/\_ :)
Deleteமிகவும் அருமையான பகிர்வு அக்கா...
ReplyDeleteஒரு குழந்தையைச் சுமக்கும் பெண்ணின் மனதை நோகடிக்காமல் மனசை நேசிக்கச் சொல்லியிருக்கிறீர்கள்... இன்னும் கூடுதலாய் எழுதியிருக்கலாம் அவர்களின் மனவலியை...
நன்றி தம்பி... கருத்தரித்த நாள் முதலான உணர்வுகளை சொல்ல நிறைய இருக்கு. பிரசவ நேரத்து அனுபவம் மற்றும் நம் பொறுப்புகள் மட்டும் பகிர்ந்துள்ளேன்..உன் தூண்டுதலில் இன்னொரு சமயத்தில் முழுவதுமாக எழுத முயற்சிக்கிறேன்..:)
Deleteஅருமை, நல்லத் தெளிவான அவசியமான கருத்து. இதுவரை பலரும் பார்க்காத கோணத்திலும் அலசியிருக்கிறீர்கள். நன்று
ReplyDeleteமிக்க நன்றி சுமன்..:)
Delete