முகப்பு...

Sunday 17 November 2013

இரவு நேரத்தில்...!!


மையிருட்டு வேளையிலே
மங்கையவளும்
பேருந்து நிறுத்தத்தில்
பெருந்தவிப்போடு
தன்னந்தளியவளாய் நின்றிருக்க..

அதிவேகமாய் பயணிக்கும் வாகனங்கள்....
காலதேவனை சபித்தே
நொடிக்கொருமுறை
நேரம் பார்த்தபடி அவள்...!!

அச்சமா, ஆற்றாமையா
இயலாமையா....
கோபமா, சலிப்பா
எதிர்பார்ப்பா, வெறுப்பா
எடுத்துக்கூறமுடியா
எண்ண அலைகள் முகத்தில் பாய...

இடமும், வலதுமாய் பார்த்தே
இடம்மாற்றி நிற்கிறாள்..

அவள் எண்ணம் விழைய முனைந்த
ஆடவனைத் தவிர்த்தே
அவ்விடம் நகர..
மூன்றுசக்கர வாகனமும் முன்னுக்குவரவே
தனித்துபயணிக்கும் தைரியமற்றே
மறுத்து மறுபக்கம் நோக்கவே..

”வர்ரீயா” என்ற வார்த்தைக்கு
வெகுண்டு வசைபாடியனுப்ப..

இவள் மனமறியா
அலைபேசியின் எதிர்முனையோ
தொடர்புகொள்ளமுடியா தூரத்தில்...!!

கடந்துசெல்வோரும்
இவள் தனிமைகண்டே
எவனுக்கு காத்திருக்கிறாளோ இந்நேரத்தில்..!
எத்தனை திமிரிவளுக்கு
வீட்ல கேட்க மாட்டாங்களோ..
கிராக்கி படியலையோ
இரவுராணி இவளுக்கு..!!

அவரவர் எண்ணத்தில்
ஆயிரமாயிரம்
எண்ணவிதைகள் விதைத்தே
விருட்சமாய் வளர்த்து
கல்லூரியில் கிடைக்கா பட்டமதனை
கால்கடுக்க நிற்கும் நேரத்தில்
தந்துசெல்ல..

இவள் தவிப்பையறிந்ததுபோல்
பேருந்து வந்திடவே
வெற்றியடைந்தவளாய்
இருக்கையில் அமர்ந்து
அலைபேசியில் அன்புக்குரியவனிடம்
கெஞ்சலாய் கொஞ்சி..
மாமா..குழந்தை தூங்கியாச்சா..?
பணி அதிகம் பேருந்தை தவறவிட்டேனென
தவிப்புடன் கூறிடவே..
எதிர்முனையின்
அன்பான சமாதானத்தில்
நிம்மதியடைந்து சாய்ந்தமர்ந்தவளை யெண்ணி
சலனமின்றி புன்னகைக்கிறேன்
மனதினுள் மௌனமாய்..!!

என்னவளையும்
என்றேனும், எங்கேனும்,
எவரேனும்
பேசக்கூடும் இவ்விதம்....
நடந்த காட்சிகளின்
சாட்சியான நான்..
எவருக்குப்புரியவைப்பது
அவளின் இதயத்தை...??!

8 comments:

  1. மையிருட்டில் தனித்திருக்கும் மங்கையின் மனத் தவிப்பு!
    எண்ண அலைகளில் கழுந்த கன்னல் கவிதை! நன்று!

    ReplyDelete
  2. நடந்த காட்சிகளின் சாட்சி!..

    என்றைக்குத் திருந்தும் இந்தச் சமுதாயம்?..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__