முகப்பு...

Wednesday 2 November 2011

கானல் நீர்.....


ஜனனி  தன்  சீமந்தம் முடிந்து தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு குதூகலமாய் சென்றாள். கனவுகளுடன் தன் குருதியில் உருவாகும் குழந்தையைக் காணும் ஆவலில் நீண்ட நாட்கள் தன் கணவனைப் பிரிந்து இருக்க வேண்டியதையும் மறந்தவாறு அவள்...
நாட்கள் கனவுகளுடன் நகர்ந்தது.  மெல்ல இடுப்பு வலி எட்டிப் பார்க்க, பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றிய கற்பனையில் வலியை மறந்து  ஜனனி. எட்டாம் மாசக் குழந்தை தொட்டில் ஏறாதே, கடவுளே இது பிரசவ வலியாக இருக்கக் கூடாதேஎன ஜனனியின் தாய் பதட்டத்தில்.  துணைக்கு யாரும் இல்லாத நேரம்..  அருகில் இருப்பதோ ஒரே ஒரு அரசு மருத்துவமனை. வேறு வழியில்லாமல் அழைத்துச் செல்ல...

அழகான ஆண் குழந்தையைப்  பெற்றெடுத்தாள்...ஜனனியும்தாயும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க..முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தை, அவர்களின் மகிழ்விற்கு எல்லை ஏது?  அதிக நேரம் நீடிக்கவில்லை அந்த மகிழ்ச்சி...குழந்தையின்  மூளைக்கு இரத்தம் செல்லவில்லையாம்.. செவிலித்தாய்  குழந்தையை அவசரப் பிரிவிற்கு அள்ளிச் செல்ல, ஜனனி மயக்க நிலையில்..தாயோ கவலையின் உச்சத்தில்..நல்லபடியாக குழந்தை பிழைக்க வேண்டுமே என நினைவில் வந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டி நின்றாள்..

ஜனனி  கண்விழித்தவுடன், அம்மா குழந்தை எங்கே? சிகிச்சை நடைபெறுகிறது..இரண்டு நாள் நீ பால் கொடுக்க கூடாதாம்..மருத்துவர் சொன்னார்..ஏன்? அதிர்ந்தாள் ஜனனி..குழந்தை உடல் பாதிக்குமாம்..பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லையே..உள்ளூர வருந்தினாலும்,  அம்மா கவலைப் படக்கூடாதே எனஇரண்டு நாள் தானே என்று தன்னை சமாதானப்  படுத்திக்கொண்டாள்..அம்மா ஏன் முகத்தில் கவலையாக இருக்கிறாய் ஜனனி கேட்க, அப்படியெல்லாம் இல்லை..சற்று சோர்வாக   இருக்கு அவ்வளவுதான்

அன்று மதியம்  ஜனனியின் மாமனாரும்,மாமியாரும் வர, அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஜனனி குழந்தையைப் பார்த்தீர்களா என கேட்க, ஹம்ம் பார்த்தோம்..என்று கூறியபடியே..உங்களுக்கு வேறு மருத்துவமனையே கிடைக்கவில்லையா..அனைவரும் வந்து செல்லும் இந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து..இப்படி எங்களையெல்லாம் இங்கே வரவழைத்து விட்டீர்களே என கடிந்தார் மாமனார். புன்னகையுடன் அமைதியாய் ஜனனி.

மாலை அனைவரும் வீடு திரும்ப, கார் வரவழைத்து அனைவரும் அமர்ந்தபிறகு, ஜனனி  அம்மாவிடம், குழந்தையை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என புருவம் உயர்த்த, “குழந்தை இன்னும் இரண்டு நாள் இங்கு சிகிச்சை பெற வேண்டுமாம்..நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்..நான் வந்து கவனித்துக் கொள்கிறேன் வா அம்மாவைப் பின் தொடர்ந்து காரில் அமர்ந்தாள்.
வீட்டு வாசலையடைந்த  ஜனனி குழந்தையில்லாமல்  தான் மட்டும் தனியாக செல்வதை எண்ணி வெறுமையாய் உணர்ந்தபடியே உள்ளே நுழைய எத்தனிக்க என்ன ஜனனிமா  உன் புள்ள இறந்துட்டானாமே..? பாவம் தளச்சம்புள்ளைய இப்படி பறிகொடுத்திட்டியே தாயி...
ஐயோ பாட்டிம்மா, மெதுவா பேசுங்க.அம்மா காதுல விழுந்தா சண்டைக்கு வந்துடுவாங்க..குழந்தை இறக்கவில்லை..நல்லாத்தான் இருக்கான்..நாளைக்கு அழைச்சிக்கிட்டு வந்திடுவோம். ஜனனியை ஒருமாதிரி பார்த்தவாறே உள்ளே சென்ற பாட்டி..எவ்வளவு அழகான பிள்ளை இப்படி சவமா வந்திருக்கானே அழுகுரல்  கேட்க, உள்ளே விரைந்து சென்ற ஜனனி அந்தக் காட்சியைக் கண்டதும் சிலையாய் உறைந்து நின்றாள். பையிலிருந்து இறந்த குழந்தையை வெளியில் எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா..

இப்படி உத்துப் பாக்காத தாயி அழுதிடுமா என பக்கத்து வீட்டுப் பாட்டி கூற, அம்மா இறந்த தன் குழந்தையைக் கையில் கொடுக்க..நெருப்பிலிட்ட புழுவாய் மனம் துடிக்கிறது..அழக்கூடத் தோன்றாமல் மனம் கணக்க, அப்படியே உட்கார்ந்து அமைதி காத்தாள்..இரண்டு பாட்டியும் குழந்தைக்கு செய்ய வெண்டிய சடங்குகளை செய்து முடித்து வீட்டின் கொல்லைப்புறத்தில் குழந்தையைப் புதைத்தும் ஆயிற்று.. தன் உணர்வை வெளிப்படுத்தக் கூடத் தெரியாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள் ஜனனி.

கொல்லைப்புறம் செல்லும்போதெல்லாம், குழந்தையின் முகம் கண்ணில் தோன்றுகிறது..இரவில் குழந்தை அழும் குரல் கேட்டால் தன் குழந்தை அழுவதாய் உணர்ந்து பாலூட்ட எத்தனிக்க, அழுதது தன் குழந்தை இல்லை என தன்னுணர்வு பெற்று., பின் இரவெல்லாம் விழித்து கண்ணீரில் கரைந்த இரவுகள் காலமெல்லாம் நினைவில் வருகிறது.

அவள் நினைவில் வந்து உறுத்துவது குழந்தையின் இறப்பு மட்டுமல்ல.
தன் குழந்தையைப் பரிகொடுத்ததுக் கூடத் தெரியாமல் இருக்கும் ஒரு தாயிடம் ஆறுதலாய் பேசக் கூடத் தோன்றாமல் ஆசாரத்தை மனதில் கொண்டு அரசாங்க மருத்துவமையில் சேர்த்ததற்காக சண்டையிட்ட தன் மாமனார், மாமியாரின் மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் இப்படியும் மனிதர்களா என்ற விரக்தியும் மேலோங்கி நின்றது....

பாசமில்லா இடத்தில்,  பாசத்தை எதிர்நோக்கும் இவள் கானல் நீரை அருந்தக் காத்திருக்கும் பேதையோ....??

இப்படி பாசமற்ற மனிதர்களிடம் பாசத்தை எதிர்பார்த்தது அவள் குற்றமாஅல்லது பாசத்தை எதிர்பார்ப்பவளிடம் பாசத்தைக் காட்டாதது அவர்கள் குற்றமா?





4 comments:

  1. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில்
    பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக
    விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete
  2. எல் கே...தங்கள் கருத்துக்கு நன்றி..தொடர்ந்து வருகை தரவும்..

    ReplyDelete
  3. நல்ல சிறுகதை அக்கா

    ReplyDelete
  4. நன்றி கலை.நாமும் சிறுகதை முயற்சி செய்தால் என்ன என்ற ஆர்வம்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__