முகப்பு...

Monday 19 December 2011

தலை தீபாவளி(லி) ……

அது கீர்த்தனாவிற்கு தலை தீபாவளி...எல்லாரையும் போல் அவளும் தன் தலை தீபாவளி பற்றிய கனவுகளுடன் காத்திருந்தவளுக்கு முதல் குழந்தை இறந்த இருபது நாளில் தீபாவளி வர... அப்படி ஒரு பாக்கியம் இல்லாமலே போனது.....
தீபாவளிக்கு நான்கு நாள் முன்பு கீர்த்தனாவின் தாய் வீட்டிற்கு வந்த மாமியார்எப்படியோ கொண்டாட வேண்டிய உன் தலை தீபாவளி இந்த முறை உன் குழந்தை இறந்துவிட்டதால் நமக்கு தீபாவளி கிடையாது.. நீ வீட்டுக்கு வர வேண்டாம் உன் கணவரையும் வர வேண்டாம் என சொல்லி விட்டோம்இந்தா இதை வைத்துக்கொள் என பணியாளுக்குக் கொடுப்பதுபோல் இருநூறு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டு   சென்று விட்டாள்.. கீர்த்தனாவிற்கு துக்கம் தொண்டையடைக்க வழக்கம்போல் அமைதி..கணவர் கனேஷ் ஒரு இடத்தில்,  இவள் ஒரு இடத்தில்.  முதல் குழந்தை பிறந்தவுடன் இறந்த துக்கம், மாமியார் ஒரு ஆறுதலுக்குக் கூட சின்னக் குழந்தை தானே அதுக்காக இப்படி பண்டிகை நேரத்தில் துக்கம் காக்க கூடாது என தன்னை சமாதானப் படுத்தாமல்மாறாக அவர்கள் முந்திக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம் என கூறியது எல்லாம் சேர்ந்து மனத்தை அழுத்த எங்கே தான் அழுதால் அம்மா திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்களே என உள்ளுக்குள்ளேயே அழுகிறாள்..

மறுநாள் கார்த்தி தன் கணவரின் மூத்த சகோதரன் வந்து..கீர்த்தனாவிடம் துக்கம் விசாரிக்க..சிறிது நேரம் பேசிவிட்டு, நாளை மறுநாள் தீபாவளி உன் கணவரும் இங்கு இல்லை..நீ ஏன் அம்மா வீட்டில் இருக்க வேண்டும்? வா வீட்டுக்குப் போகலாம்அங்கு அனைவரும் வந்து இருக்கிறார்கள் என அழைக்க, மாமியாரோ வரவேண்டாம் என கூறிச் சென்றாள்மைத்துனரோ வா என அழைக்க, சுயமாக சிந்திக்க இயலாத நிலையில் கீர்த்தனா..

அம்மா அருகில் வந்து, எப்படியும் ஒரு முறை குழந்தை பிறந்தவுடன் மாமியார் வீட்டுக்குப் போகனும்..எனக்கும் குழந்தை இல்லாமல் உன்னை தனியாக கொண்டு விட சங்கடமா இருக்கு..அவர் கூப்பிடும்பொழுதே  நீயும் செல்என அறிவுறுத்த...வேறு வழியில்லாமல், சுயம் இழந்து மைத்துனருடன் மாமியார் வீடு சென்றாள்.

கீர்த்தனாவா...? தீபாவளி கிடையாதேனுதான்  உன்ன கூப்பிடலை..மாமியார் முகத்தில் இவள் எப்படி இங்கே என கேள்விகுறி..

கார்த்தி,  “நான் தான் அங்க போனேன் எதற்கு அவள் தனியா அங்க இருக்கனும் என  இங்க அழைத்துக்கொண்டு வந்து விட்டேன்என கூற, பதில் கூற முடியாமல் மாமியார் தேவகி.

மறுநாள் அனைவருக்கும் மகிழ்வுடன் தொடங்கிய தீபாவளி அவளுக்கு மட்டும் சோகமாய்...மைத்துனர் கார்த்தி,  அவர் மனைவி ஜானகி,  குழந்தை, கொழுந்தன் ரவி..என அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க..நீ என்னை தேய்த்து குளிக்க வேண்டாம் என தேவகி கூறினாள்.

வழக்கம்போல்  எந்த குறையும் இல்லாமல் தீபாவளியை சிறப்பாகத் தானே கொண்டாடுகிறார்கள்.. !!??

பிறகு என்னை மட்டும் ஏன் வர வேண்டாம் என்றார்கள்..? புரியாத புதிராக மனதில் அவ்வப்பொழுது எழும் வினா....??

சரி கூப்பிடவில்லை இருந்தும் மருமகள் தலை தீபாவளி வீட்டுக்கு வந்து இருக்கிறாள் அதுவும் கணவர் வேறு அருகில் இல்லை.  குழந்தையும் இல்லாமல் தனியாக. அவள் துக்கப் பட்டாலும் ஆறுதல் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டியவர்கள்,  எதற்காக உற்சாகமாக இருந்தும் இல்லை என வெளியில் பேசுகிறார்கள்...?  புரியவில்லை..அந்த நேரத்தில் யார் வந்தாலும் ஒரு புடவை வாங்கித் தரும் தமிழர் பண்பு இங்கே எப்படி இல்லாமல் போனது..மனம் ஏங்குவது அவர்கள் கொடுக்கும் ஒரு புடவைக்காக அல்ல..அவர்கள் அளிக்கும் அங்கீகாரத்திற்காக.  மருமகளை மகளாக வேண்டாம்..ஒரு உயிரும் உணர்வும் உள்ள பெண்ணாகவாவது பார்த்து இருக்கலாமே..இப்படி பல கேள்விகள் தோன்றினாலும்  கேட்பது யாரிடம்?

மதிய உணவின்போது அனைவரும் உற்சாகமாக இனிப்புடன் உணவருந்த..இவளுக்கோ விஷமாக இருக்கிறது ஒரு ஒரு பருக்கையும்..உண்ணவும் முடியவில்லை,  மறுக்கவும் முடியவில்லை. மறுத்தால் தவறாக எண்ணுவார்களோ என்ற அச்சம்...அந்த நேரம் பார்த்து மும்பையிலிருந்து கணவர் கனேஷ்   தொலை பேசியில் அழைக்க..நான் மட்டும் தன்னந்தனியாக இங்கு இருக்கிறேன் என அவர் குரல் தழுதழுக்க...நெஞ்சை யாரோ அழுத்துவதுபோல் கீர்த்தனா உணர,  அதற்குமேல் சாப்பிடுவதுபோல் நடிக்கக் கூட முடியாமல் பொங்கிவரும் கண்ணீரை மறைக்க கை அலம்புவது போல் சென்றுவிட்டாள்.  இந்த நிகழ்வு எதுவும், யாரையும் பாதிக்காததுபோல் அவரவர் கவனம் விருந்து சாப்பிடுவதிலும், தங்கள் உடைபற்றிய பேச்சிலும் இருந்தது.  மனிதர்களில்லா தேசத்தில் தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தாள் கீர்த்தனா.  எத்தனை மகிழ்ச்சியான பண்டிகைகள் வந்தாலும் மனிதர்களின் மனதை புரிந்துகொள்ள உதவியாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் அமைந்து, நெஞ்சைப் பிசைந்த அந்தத் தலைதீபாவளி, கீர்த்தனாவின் மனதில் இன்றும் "வலி" யாகவே...







2 comments:

  1. ஒரு உண்மைச்சம்பவத்தை விவரித்தது போல உள்ளது கதைக்களம்...! அரிதாரம் பூசாத இயல்பான வார்த்தைகள் ....இது போல இன்னும் எழுதுங்கள்.!

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வரவிற்கு நன்றி..தங்களின் கருத்திற்கு நன்றி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__