முகப்பு...

Monday, 10 August 2015

மறைமலை அடிகளார் பிறந்ததின போட்டி


அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.

போட்டி விவரங்கள்.

போட்டி - சொற்பொழிவு.

தலைப்பு  - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 20.08.15

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

தமிழ்க்குடில் நடத்தும் காமராசரின் 112வது பிறந்தநாள் கட்டுரைப்போட்டி

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறை:
போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்
குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 20.08.15
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

அறிந்தும்_அறியாமலும்..

மனப்பாறையை அழகு சிற்பமாக செதுக்க உளியாகப் பயன்படும் பகிரப்படாத உணர்வுகள்.. ‪#‎சிலபல_நேரங்களில்‬சிதறடிக்கச் செய்யும் வெடியாகவும் பயன்படலாம்.
****
மரணத்திற்கு மரணமில்லையெனும் உண்மையுணர்ந்து., மரணச்செய்தியை சலனமின்றி ஏற்கத் தெரிந்தவர்களுக்கு‪#‎சிலபல_நேரங்களில்‬ கல்நெஞ்சமென மகுடம் சூட்டப்படலாம்.  

***
ஒருவரின் சொல்லிலும்., செயலிலும் என்ன தவறு இருக்கும் அதை சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணத்தில் அணுகும்பொழுது அவற்றிலிருக்கும் கருத்துகள் கவனிக்கப்படாமல் நம்மையறியாமலேயே புறக்கணித்து ஒதுக்கப்ப(டலாம்)டுகின்றன. 
***
ஏதோ ஒன்றை யாரோ ஒருவர்மூலம் உணர்த்த இயற்கை முற்படுகையில், அதை உணர மறுக்கும் (நம்)அறியாமையே விதியாகிப்போகிறதோ..?!
****
அந்த நேரம் சுவாரசியம் கொடுக்கக்கூடிய எதுவாயினும் படித்து., வேடிக்கைப் பார்த்து அடுத்த சுவாரசியம் கிடைக்கும்வரை அதை மென்று தீர்வு பற்றி கவலைப்படாமல் கடந்து செல்வதே இயல்பாகிவிடுகிற(தோ)து..
smile emoticon

Wednesday, 5 August 2015

நிகழோவியம்...


நிகழ்வுச் சித்திரத்தை
ஜாதி, மத அரசியல் கண்ணாடியணிந்து.,
விருப்பு வெறுப்பு தூரிகையேந்தி
மனதிற்கேற்ற வண்ணமடித்துக் காட்சிக்கு வைக்க..
சந்தைக்கு வரும் சித்திரமோ
தன்னழகை மறை(ந்)த்து
ரசிகனையடைய..
உண்மைத்தன்மையறியாத
ரசிகர்கள்..
ஓவியனின் எண்ண ஒளியில்
ரசித்து மகிழ்ந்து கொண்டாடியும்...
வெறுத்து உமிழ்ந்து ஒதுக்கவும் செய்ய..!
தன் எண்ணத்திற்கேற்ற வண்ணம் சேர்க்காது.. 

ஓவியத்தின் தன்மை மாற்றாது
காட்சிப்படுத்தும் நடுநிலை ஓவியனுக்காய் 

நிகழோவியத்தின்
தவம் தொடர்கிறது...

முரண்...

விதைக்கப்படும் அன்பு
அன்பாக சிலநேரமும்,
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..
விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும்
அன்பாக சிலநேரமும்,
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும்
அறுவடைசெய்யப்பட...
அறுவடை..
விதைக்கப்படும்
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும்
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...

Monday, 6 July 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை 2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி முடிவுகள்

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்,
2015 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களுக்கு இதோ முடிவுகள் விவரம்..
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு : முனைவர் ஜ. பிரேமலதா , சேலம் -(அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. )
இரண்டாம் பரிசு : திருமதி வசந்தா ராமன், காசியாபாத், (தில்லி) - (அன்பின் அவதாரம் தாய்)
மூன்றாம் பரிசு : நர்கீஸ் பானு, ஐக்கிய அரபு அமீரகம்
- (அன்னை ஒரு வரம்)
பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் தமிழ்த்தோட்டத்தில் மலர்ந்து மணம்வீசும் மலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய நடுவரின் சிறு குறிப்பு பரிசுபெற்றக் கட்டுரைகளைப் பதியும்போது அந்தந்த கட்டுரையுடன் பகிரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்தவிருக்கும் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

Sunday, 17 May 2015

மௌனத்தை நோக்கி....!!


காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
என் கோவம் கொன்று, மனதை வென்று
முகத்தோட்டத்தில்
மகிழ்ப்பூவை மலரச்செய்த
அவன்
அன்பு வார்த்தைகளைக் காணவில்லை…!!
ஐயிரண்டு விரல்களால்
அவனை ஆரத்தழுவி ஆறுதல் கூற…
சொல்லொனா சோகத்தை
வெளிப்படுத்திய
துயர வார்த்தைகளைக் காணவில்லை..!
மனம் வலுவிழக்கும் நேரத்தில்
பலமாய் நானிருக்கிறேன் - எனும்
நம்பிக்கை வார்த்தைகளைக் காணவில்லை..!!
சாதிக்கவேண்டுமென
சபதமேற்க வைக்கும்
அவன்
எழுச்சிவார்த்தைகளைக் காணவில்லை…!!
என் எண்ணங்களுக்கு வண்ணம்சேர்த்து
எழுத்தோவியமாய்ப் படைக்க
சிந்தனைகளைத் தூண்டிவிடும்
உற்சாகவார்த்தைகளைக் காணவில்லை..!
உற்றதோழனாய் நானிருக்கிறேன் - என்ற
நட்புவார்த்தைகளைக் காணவில்லை…!
ஊடலுக்கும், கூடலுக்கும் பாலமாய்..
மனதினில் எண்ணி எண்ணி
மந்தகாசப் புன்னகையை தோற்றுவித்து
உரையாடலைத் தொடரும்
காமம் கலந்த காதல் வார்த்தைகளைக் காணவில்லை…!!
அன்பு, காதல், நட்பு, பாசம்
காமம், குரோதம், பகை..
வெறுப்பு, மௌனம் என
எண்ணற்ற உணர்வுகளை
வார்த்தையில் வடித்தெடுத்த
காலமும் சென்றதோ…?!
உணர்வுருக்கள் உதவியுடன்
உணர்வுகளை வெளிப்படுத்தியே
பறந்துதிரிந்த சிந்தனைச் சிறகுகளை
வெட்டி வீழ்த்தி..
வார்த்தைகளை வற்றச்செய்ததோ…
வரமாய் வந்த உணர்வுருக்களுமே..??!
வார்த்தைகளைத் துறந்து வடிவங்களைப்பகிர்ந்து
நிரந்தர மௌனத்தை நோக்கிய பயணமோவிது..??
உணர்வுருக்களின் வருகை வரமா..?! சாபமா..?!