முகப்பு...

Tuesday, 30 July 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 1

அன்புத்தோழமைகளுக்கு மனம்கனிந்த வணக்கம். _/\_  வலைச்சரத்தில் இரண்டாவது நாளான இன்று  நான் கண்டு ரசித்த வலைப்பூத் தோட்டத்தில் பூத்திருக்கும் சில மலர்களை இயக்குநர் விசு அவர்களும், நானும் இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.  
காயத்ரியும், விசுவும்.(ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே.. யார் மனதையும் காயப்படுத்த அல்ல) 
காயத்ரி : வாங்க விசு சார். வணக்கம்..நல்லா இருக்கீங்களா..?விசு : வணக்கமா.. நான் நல்லா இருந்தா என்ன பண்ணப்போற நல்லா இல்லேன்னா என்ன பண்ணப்போற.. நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு நல்லா இல்லேன்னா நல்லா இல்லாதத கண்டுபிடிச்சு நல்லா ஆக்கிடுவியா..இல்ல  நல்லா இருந்துகிட்டே  நல்லா இல்லேன்னு சொன்னா.. நல்லா இல்லேன்றதில் இருக்கும்  நல்லா இருப்பதை கண்டுபிடிச்சு  நல்லா இருப்பதை நிலைநிறுத்திடுவியா..??
காயத்ரி: ம்ம்...என்ன சார் செய்யறது...நல்லா இருக்கிற நான் நல்லா இல்லாம ஆயிடுவேனோன்னு இருக்கு இப்ப.

விசு : விடும்மா..இதுக்கே இப்படியா..ஆமா என்ன எதுக்கு இப்ப கூப்பிட்ட..?
காயத்ரி: எங்கள எல்லாம் நல்லால்லாம ஆக்கத்தான்..அய்யோ மன்னிச்சுக்கோங்க சார்..ஏதோ மனசில உள்ளது அப்படியே வாய் தவறி வந்திடுச்சு..!!

நம்ம வலைச்சரத்துல வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தனும்.இன்னிக்கு வலைச்சரத்தில் நான் அறிமுகப்படுத்தப்போகும் முதல் நாள் என்பதால் உங்க மூலம் முதல் பதிவரை அறிமுகப்படுத்தலாமேன்னு கூப்பிட்டேன்..

விசு: அப்படியாம்மா..ரொம்ப சந்தோசம்..பண்ணுக்கும்,வாழப்பழத்துக்கும், பயித்தியக்கார ஆசுபத்திரிக்கும்னு கூப்பிடாம இதுபோன்ற ஒரு நல்ல விசயத்திற்கு அழைச்சதுல சந்தோசம்மா.. யாரு அந்தப்பதிவர் சொல்லு அறிமுகப்படுத்திடலாம்.

காயத்ரி : ரொம்ப நன்றி சார். இவரைத்தான் அறிமுகப்படுத்தனும் நீங்க..
விசு : இரும்மா அவரைப்பற்றி என்ன எழுதியிருக்க, அவர் என்ன எழுதியிருக்காரு ஒரு முறை படிச்சிட்டு வரேன்..கவிஞர்.தமிழ்க்காதலன்  காலதேவனின் கைக்குழந்தையாய்  பூமித்தாயின் மடியில் தமிழ்த்தேடி,தவமிருக்கும் இவரின் இதயச்சாரல்...   நம்மையெல்லாம் கவிதை மழையில் குளிர்விக்கும்  குற்றால அருவி...!! இவரது எந்தப்பதிவை எடுத்துரைப்பது எதை விடுவது தெரியவில்லை.இதயச்சாரலில் கவிதை மழை மட்டுமா வீசும்...?!

சிலை உடைப்பு..., சமூகம் பற்றிய சிந்தனையைத் தூண்டும் பதிவு,
””இந்திய தளபதி” (சுபாஷ் சந்திர போஸ்) 
//
இன்றும் எங்கள் இரத்தத்தில் இளஞ்சூட்டை
தணியாமல் தகிக்க வைக்கும் புரட்சியே..! வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் வாழ்க்கை செதுக்கிய செம்மலே...! பாரதத்தின் தவப்புதல்வ...!!
புகழுக்கு மயங்காத புரட்சியின் புத்துயிரே..!
புழுக்களின் கூடாரத்தில் குலவியாய் கொட்டியவனே..! வழுக்களின் சூழ்ச்சியை வஞ்சகத்தை திட்டியவனே..!// 

இவரது ஒவ்வொரு வார்த்தையும் நேதாஜி அவர்களை நம்மில் உயிர்ப்பித்து இருக்கச்செய்கிறது.  
இறையாண்மை என்றால் என்ன..??  அனைவரும் கேள்விப்பட்ட வார்த்தைதான். இருப்பினும் எத்துனை பேருக்கு விளக்கம் தெரியும் என்பது தெரியவில்லை. இறையாண்மை பற்றியும் இன்னும் பல கேள்விகளையும் கேட்டு,பதிலையும் இதயச்சாரலில் அளித்துள்ளார் தமிழுக்காய் தவமிருக்கும் கவிஞர்.தமிழ்க்காதலன். 

”அவனும், அவளும்..” அவனின் அவளைப்பற்றி  அப்படி என்னதான் அவளின் அவன் கூறியிருக்கிறான்..??!!! 

காயத்ரி : என்ன சார் படிச்சிட்டீங்களா..? அப்படியே நாலு நல்ல வார்த்தை சொல்லி ஒவ்வொருவரையா அறிமுகப்படுத்துங்க சார். 

விசு : ஏம்மா, உனக்கு அப்படி என்னதான்மா என்மேல கோவம்..?

காயத்ரி : ஏன் சார் அப்படி கேட்கறீங்க..உங்கமேல மதிப்பும், உங்க எழுத்தில் ஈடுபாடும் கொண்ட என்னப்போய் இப்படி கேட்கறீங்க..

விசு : ஏம்மா ஒரு சந்தேகம், என்ன எதுக்கு இதுக்கு தேர்ந்தெடுத்தன்னு தெரிஞ்சுக்கலாமா..?

காயத்ரி : அவனும், அவளும்.. பதிவைக்கண்டதும்அறிமுகப்படுத்த நீங்கதான் சரியான நபர்னு நினைச்சேன் சார் அதான்..??!!!

விசு :படிச்சேன்மா. கவிஞரைப்பாராட்டனும்னு மனசெல்லாம் பரபரக்குது. ஆனா..
//அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை
அவள் அறியாது அவளற்ற அவளாக
அவள் இருக்க அவளுக்குள் அவளாய்..//
இதைப்படிச்சதும், அவனின் அவளை நினைச்சு பொறாமையடையறதா..? இல்ல அவளுக்குள் இத்தனை அவளான்னு பெருமூச்சு விடறதா...?? அவனையும், அவளுள் அவனாக இருக்கும் அவளையும் படிச்ச பிறகும் எப்படிம்மா அறிமுகப்படுத்த மனசு வரும்.. இதப்படிச்சா அவங்கவங்களோட அவனின் அவளின் நினைவுதான்மா வரும்.  எனக்கே தல சுத்தறமாதிரி இருக்கு.  எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைம்மா..
அவனோட அவள் அவனின் அவளாகவே அவனுக்காகவே இருக்கட்டும்னு வாழ்த்திட்டு நான் கிளம்பறேம்மா.

கவிஞர்.தமிழ்க்காதலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் தங்கள் எழுத்துப்பணி என்றும் தொடரட்டும்.. :)

காயத்ரி: சார் இன்றைய மற்ற பதிவர்களையும் அறிமுகப்படுத்திடுங்களேன்.

விசு : வேண்டாம்மா, இன்னிக்கு இந்த ஒரு அறிமுகமே எனக்கு ஒரு மாசம் அலுவலகத்தில போய் ஓய்வெடுக்கனும்போல இருக்கு. அவளின் அவனை கொஞ்சம் அசைபோட்டுப்பார்க்கறேன் ஓய்வா இருக்கும்போது,  நீயே மற்றவங்களையும்அறிமுகப்படுத்திடும்மா.. ரொம்ப நல்லா இருப்பே.

காயத்ரி : சற்றே ஏமாற்றத்துடன், சரி சார்..நீங்களே அறிமுகப் படுத்துவீங்கன்னு நினைச்சேன். உங்க உடல்நிலையைக் கருத்தில்கொண்டு (மனநிலையையும்தான்) நானேஅறிமுகப்படுத்தறேன். வருகைக்கு ரொம்ப நன்றி சார். _/\_
விசு சாரோட வேண்டுகோளை ஏற்று மற்ற பதிவர்களையும் நானே அறிமுகப்படுத்திடறேங்க இன்னிக்கு.

*****

ந.வு. துரை அவர்களின் கனவுகள் மெய்ப்படவேண்டும் வலைப்பூவில் கதை, கவிதை, ஹைக்கூ எனகலக்கிவரும் இவரின்கனவுகளில் வறுமையையும், தாய்மையையும் மனம் உருகவைக்கும் வரிகள்.
//நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
              
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில//

வாங்களேன் தொடர்ந்து படிப்போம் நனையுதே மாராப்பு...


ந.வு. துரை அவர்களின் மற்றோரு வலைப்பூவான மரபுக்கனவுகள் என்ற வலைப்பதிவில் இருவரியில்சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம் எனகுறள் எழுதியிருக்கிறார்..

அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது [338]
ந.வு. துரை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*****

சாய்ரோஸ் அவர்களின் கதம்ப மாலை  பெயருக்கேற்பமணம்வீசும் மல்லிகையாய்க்கவிதைகள், அழகூட்டும் ரோஜாவாய்சமூகப்பகிர்வுகள். மனம்கவரும் செம்பருத்தியாய் காமசூத்திரம் ,முல்லைப்பூவின் மணமாய் சமையல் குறிப்புகள் சிலிர்பூட்டும்மரிக்கொழுந்தாய் நையாண்டி.. அமானுஷ்யமா (ஆமாங்க அவரோடவலைப்பூவின் புகைப்படமே அப்படித்தான் இருக்க.) :) அரசியல்னுகதம்பமாய் தன் பூங்காவனத்தை அலங்கரித்து வந்து செல்பவர்களைமணம் வீசும் மலர்களினால் மனம் கவர்கிறார்.  அனைத்துப்பூக்களின் மணம் சுவாசிக்கும் நேரமின்மையால் ஒரு சிலபூக்களைக்கூறுகிறேன்.   

பேரணி என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்
பேரணி, மாநாடு, மண்ணாங்கட்டியெல்லாம் எதுக்கு?.  இதற்குஅவர் விளக்கியிருக்கும் காரணங்களைக்காண்போமா..வாங்களேன்..அவரின் பூந்தோட்டம்சென்றுவருவோம்..!

நையாண்டிகள் எத்தனை முறைப்படித்தாலும் நம்மை மறந்துசிரிக்கவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... நையாண்டி..எப்படித்தான் யோசிப்பாங்களோ..?

சாய்ரோஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*****
பாலை மண்ணில் விழுந்த கிராமத்து  விதையான 'பரிவை'சே.குமார்  தன் எண்ணங்களை வார்த்தைகளினால் வசந்த ஊஞ்சல் கட்டி மனசு  தளத்தில் அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்,கிராமத்து நினைவுகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள்  என அனைத்தையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைத்துள்ளார்.  இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் மணம் மாறாமல் பரிவையில் பிறந்திருக்கும் மற்றொரு பாரதிராஜாவோ என நமையெல்லாம் சிந்திக்கத் தூண்டுமளவு யதார்த்த நடையில் அசத்தியிருக்கிறார்.இவரின் சிறுகதையில் கோட்டாமி தனித்திருக்கும் பெண்ணைப்பற்றி ஊரார் என்னவெல்லாம் பேசுவார் என்பதை கோட்டாமியில் இயல்பாக கூறியிருக்கிறார். அதில் ஒரு வரி...
 //அவர்களுக்குப் எப்படித் தெரியும் நான் இழந்த என் மகள் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன் இந்த அபலையின் அன்பில் என்பது...'// 
கவிதையிலும் சளைத்தவர் இல்லை - 'பரிவை' சே.குமார். இவரது
கிராமம் பேசுகிறேன்...  என்கிற கவிதை இன்றைய நிலையை எடுத்துக்கூறி கண்ணீரை வரவழைக்கும் பதிவு. 
//பல வீடு பூட்டியிருக்க
சில வீடு திறந்திருக்க
இப்பவும் இங்க
கொஞ்சம் உயிர்ப்பிருக்கு...// 

தம்பி குமார் அவர்களின் மனசில் தொடர்ந்து மண்ணின் மணம் வீசிக்கொண்டிருக்க வாழ்த்துகள்.

வலைச்சரம் மூலமாக அறிமுகமான நட்புக்களின் எழுத்துக்களைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி தட்டிக் கொடுத்து இன்னும் அருமையான படைப்புக்களை படைக்கச் செய்வோம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்..

Monday, 29 July 2013

வலைச்சரத்தில் - தூரிகையின் அறிமுகம்..

எனதன்பு வலைப்பூ தோழமைகளுக்கு எனது பணிவான வணக்கம்.  வலைச்சரத்தில் ஒரு மலராய் இருந்துவரும் எம்மையும் இந்த ஒரு வாரம் இங்கிருக்கும் மலர்களையெல்லாம் தொடுத்து மாலையாக்கி வலைச்சரத்தை அலங்கரித்து  மணம்வீசச் செய்வதற்காக அழைத்திருக்கும்  நண்பர் அன்பின்சீனா அவர்களுக்கு  எமது நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். _/\_ 

பூமாலையின் அழகினை ரசித்தும், அதன் வாசம் சுவாசித்தும் மகிழும் அனைவருக்கும் மாலையினைத் தொடுக்கும்திறன் இருக்குமா..??! சந்தேகமே.... இருந்தும் தொடுத்துப்பார்க்க ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள். அழகாய தொடுத்து அலங்கரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறேன் .  அனைத்து மலர்களையும் சரத்தில் இணைக்க இயலாவிடினும் நான் கண்டு ரசித்த மலர்களை சரத்தில் கோர்க்க முயல்கிறேன்.   யாம் தொடுக்கப்போகும் பூச்சரத்தில் சில மலர்கள் விடுபட்டுப்போயிருப்பின் விடுபட்ட அந்த மலர்கள், மணத்திலோ அழகிலோ குன்றியது இல்லை என்பதை அனைவரும் அறிவோம். அந்தமலர்களை எடுத்து அலங்கரிக்கத் தவறியதற்காக எம்மை  பொருத்தருளவும்.  

எம்மைப்பற்றி எடுத்துக்கூறுமளவு அதிகம் எதுவுமில்லை. எழுத்துப்பள்ளியில் ஆசிரியர்களாகவும், எழுத்துலகில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களும்   வீற்றிருப்போர் மத்தியில்  எழுத்தாணியை கையில் எடுத்துக்கொண்டு அகரம் படிக்கத் துவங்கும் எண்ணத்தோடு   இப்பொழுதுதான் எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவி நான்.:)

எமக்குள் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து, நான் எழுத்துலகிற்கு வருவதற்குக் காரணமாயிருந்த நண்பர் கவிஞர்.திரு.தமிழ்க்காதலன்  அவர்களுக்கு இந்த நேரத்தில் எமது மனமார்ந்த நன்றியினை  தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். _/\_ அவரைப்பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் எமது அடுத்துவரும் அறிமுகத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

எம்மைக் கவர்ந்த எழுத்தாளர் எழுத்து சித்தர் ஐயா.திரு.பாலகுமாரன் அவர்கள்.  அவரது நூல்களை விமர்சனம் செய்யும் அனுபவம் இல்லாத காரணத்தால் அவரது படைப்புக்களை இன்றளவும் பிரமிப்புடன் படித்துவரும் பல வாசகர்களில் ஒருவராய் இருந்துவருகிறேன்.  அவர் எழுதிய நூல்களை இது நன்றாக இருக்கிறது என சுட்டிக்காட்டும்படி இல்லாது அனைத்தும் மிக அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இருப்பினும் எம்மை மிகவும் பிரமிக்க வைத்த நூல் உடையார்.  நமது சோழ வரலாற்றை அனைவரும் எளிமையாக படித்து மேற்கொண்டு அறிந்துகொள்ளும்படியான ஆவலைத் தூண்டும் படியாக அமைந்திருக்கிறது.  தூரிகையில் சிதறியிருக்கும் எமது சிந்தனைச்சிதறல்களில் எம் மனங்கவர்ந்த பதிவுகளில்  இருந்து சில தங்கள் பார்வைக்காக பகிர்கிறேன்.  படித்து எம் எழுத்துக்களை செம்மைப்படுத்திக்கொள்ள தங்கள் கருத்துக்களை வழங்கவும். 

கவிதைகள்: 

தான் மையல்கொண்ட மனதாளும் மன்னவனின் புகழ் என்றும் நீங்காது நிலைத்து, பூமித்தாயும் தன்மீது பொறாமை கொள்ளும்படியான மகவை ஈன்றெடுக்க விரும்பும் காதலியின் சின்ன சின்னப்பேராசையாய் அவளது நாளைய நம்பிக்கை..
தன் அன்புக்குரியவரின் உள்ளத்தினை அவன் கண்களைக்கண்டறிய அவனை அருகே அழைக்கும் காதலியின் உணர்வுத்துளிகள்
அரியபல விசயங்களை அறிவித்திட முயற்சிக்கும் ஆசானின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாது அறிவிளியாக இருக்கும் மாணவியின் மனதின் வெளிப்பாடாய்..
கதைகள்:
மறுஜென்மம் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டால் குடும்பத்தாரின் நிலை என்ன..?? இறந்தவளைப்பற்றி இந்த சமூகம் எப்படி பேசுகிறது என்பதை கண்டுணர்ந்து தற்கொலை முடிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வு..
கட்டுரை  பண்டிகையும்,தொலைக்காட்சியும்..!!   தொலைக்காட்சி தேர்ந்தெடுக்கும் புதுமுகக்கதாநாயகிகள்,  பிரபலங்களைப் பொறுத்து,  அந்த தொலைக்காட்சிகள்தான் முடிவு செய்கின்றன  இன்றைய பண்டிகைகளின் சிறப்பை.

முதல் நாள் சுய அறிமுகப்படலம் என்பதால் எமது தூரிகைத்தோட்டத்தில் பூத்த சில மலர்களை வலைச்சரத்தில் வழங்குகிறேன். வாருங்கள்... வாசித்து பூவின் மணம் பற்றித் தங்கள் மனம் திறந்து கருத்தை அளியுங்கள்... நாளை முதல் மற்ற தோட்டங்களில் பூத்திருக்கும் என் மனம் கவர்ந்த மணம் வீசும் மலர்களைக் கண்டு ரசித்து அவைகள் மூலம் வலைச்சரத்தை அலங்கரிக்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது போல் துறைக்கு சிலராய் உங்களுடன் பகிர்ந்து என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்கிறேன். அறிமுகமாகும் நண்பர்களுக்கு, அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J