முகப்பு...

Thursday, 16 August 2012

சுதந்திர தினம்...

சுதந்திர தினத்தன்று, விதவிதமான உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளும் பலவிதமான பதிவுகள்..சுதந்திர தினத்திற்கு மனமாற வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள், மனம் ஒப்பவில்லையெனினும் வாழ்த்தியதற்காக வாழ்த்துபவர்கள், வீறுகொண்டெழத் தூண்டும் வகையிலான உணர்ச்சிமிகு கவிதைகள், சமூகத்தையும், ஆட்சியாளர்களையும் சாடும் பதிவுகள். தன்னுடைய முகநூலில் அடையாளப் படத்தை தேசியக்கொடியாக வைக்கும் சிலர், கறுப்பு தினமாக அறிவிக்கும் பதிவுகள், அதை எதிர்க்கும் பதிவுகள். அறிவுரை கூறும் பதிவுகள்...சுதந்திர நாடுதானா இது என வினாவெழுப்பும் பதிவுகள், அலட்சியமாக எள்ளி நகையாடும் வகையிலான சில பதிவுகள்...அப்பப்பா ஒரே நாளில்தான் எத்தனை விதமான பதிவுகள்..உணர்ச்சிகள்...??!!! மனிதர்களின் மனநிலைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இன்று நம் அனைவருக்கும் ஒரே தினம் ..இருப்பினும் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறாக..

நம் பாரதத்தாய் நமக்கு எந்த குறையும் வைக்கவில்லையே...??!! அனைத்தும் கொடுத்திருக்கிறாள். ஒரு தாய் தன் பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்து கொடுத்து ஒருவர் வசதியாகவும், ஒருவர் வசதியின்மையாகவும் இருந்தால் அதற்கு தாய் எப்படி பொறுப்பாக முடியும்..? பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மைதானே காரணம்..அதுபோல்தான், நமது தேசத்திலும் குறைகள் பல இருக்கிறது எனில் ஆட்சியாளர்கள், எனக்கென்ன என மெத்தனமாக இருக்கும் பொதுமக்களே காரணமாக இருக்கமுடியுமே தவிர இதில் பாரதத்தாய்க்கு என்ன பங்கு..? 

சுதந்திர தினத்தன்று நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாம் மற்ற நாட்களில் நமது தேசம் என்ற எண்ணத்துடன் இதுவரை செய்தது என்ன என சிந்தித்திருப்போமா..?? இவன் ஆட்சி செய்தால் அவனைச் சார்ந்தவர்கள் குறை  கூறுவார்கள். அவன் ஆட்சி செய்தால் இவனைச் சார்ந்தவர்கள் குறை கூறுவார்கள்..பொதுமக்களாகிய நாம் பொதுவாக இருந்து என்றாவது சிந்தித்தது உண்டா..?? யார் ஆட்சி செய்து, நாம் யாருக்கு ஆதரவாக இருந்தாலும் ஏமாற்றப்படுவதும், பாதிக்கப்படுவதும், நன்மையடைவதும் நாம் தான் என்ற பொதுச்சிந்தனையுடன் எந்த விசயத்தையாவது நோக்கியிருக்கோமா..? அப்படியிருக்க சாடுவது மட்டும் ஏன்..?? முதலில் நமது தேசத்தில்..நாம் குறையென நினைப்பது, உடனடித் தீர்வு காணவேண்டிய பிரச்சினை, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை என பிரச்சினைகளை பட்டியலிட்டு பொதுவாக அதைத் தீர்க்க போராடியிருக்கிறோமா..அல்லது முயற்சி செய்திருக்கிறோமா..ஊழலை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியது எந்த ஜாதி, மத, இன பத்திரிக்கை, கட்சி  என அதை விமர்சனம் செய்வோம்..அல்லது அந்த ஊழல் கண்டுபிடித்தது யார்..எந்த ஜாதி, மதம், கட்சி என பேசி பிரச்சினை திசை திருப்பியிருக்கோமே தவிர ஒரு பிரச்சினையின் தீவிரம் என்ன..எப்படி கையாளலாம்..ஏன் இதுவரை முடியவில்லை..அதற்கு தடையாக இருப்பது யார்..என்று ஆராய்ந்து ஒற்றுமையாக போராடியிருக்கோமா..?
உதாரணம்:  
முல்லைப்பெரியார்..கொஞ்சநாள் அதைத்தீவிரமாக முகநூல் மற்றும் ஊடகம் என எழுச்சியாக பேசினோம்..முடிவு..??
கூடங்குளம்.: அதே நிலைதான்
கல்வியின் இன்றைய நிலை.
காவிரிப்பிரச்சினை.: 

இப்படி தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க..எய்தவன் எங்கோ  இருக்க அம்பை நோவதேன்..? பிரச்சினை நம் பொறுப்பின்மை, ஆட்சியாளர்களின் அலட்சியம் என இப்படியிருக்க பாரதத்தாய் சுதந்திரம் அடைந்து என்ன பிரயோசனம் என கேட்கிறோம்..ஒரு பெட்ரோல் விலை உயர்வு எனில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வேலைநிறுத்தம் செய்து அவர்கள் கோரிக்கையை சரிசெய்துகொள்ளவில்லையா..?? லாரி ஓட்டுநர்கள் ஒரே நாளில் வேலை நிறுத்தம் செய்து தன் கோரிக்கையினை நிறைவேற்றிக்கொள்ளவில்லையா..??  நான் குறைகூறவில்லை.  ஒரு பணி சார்ந்து அவர்களிடம் உள்ள  ஒற்றுமை, தேசம் சார்ந்த ஒற்றுமை நம்மிடையே இல்லாமல் போனது நமது குற்றம்தானே..?? ஒரே நாளில் தீர்வு ஏற்படும் பிரச்சினைகள் அல்லதான் இருப்பினும்..அதன் தீவிரம் பொறுத்து நாமும் நம்முடைய முயற்சி, போராட்டம் தீவிரப்படுத்த வேண்டுமல்லவா..?? செய்தோமா.? எங்கோ நடக்கிறது என கூடங்குளப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம். சொல்லப்போனால் அதன் முழு விளைவு, ஆபத்து இன்னும் பலருக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை..அதற்கு ஆதரவாக சிலர், எதிர்ப்பாக சிலர்..இப்படி நம்மிடையே முரண்பட்ட சிந்தனைகளும், போராடத்தயங்கியும், எனக்கென்ன என்று மெத்தனமாகவும் பல உணர்ச்சிகளை வைத்துக்கொண்டு பாரதத்தாயை ஏன் சாடவேண்டும்..??

நம் தாய் அந்நியர்களிடமிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசித்த இந்த நாளை  இந்தியக்குடிமகளாகவும், அவளின் புதல்வி என்ற பெருமையுடனும் அவளை வணங்கி மகிழ்கிறேன்..வாழ்க பாரதம்...!!

Tuesday, 14 August 2012

தாயுமானவள்...!!!



தாயென அழைக்க சூலில்
தவம் நீயிருந்து
வரமெனக்கு அளிக்க
தரணிக்கு வந்தவளே....

யானையின் மணியோசையாய்
வருமுன்னே
வம்சத்திற்கு மகிழ்ச்சியை
வழங்கிய(குப)வளே..

புவிதொடுமுன்
பூலோகம் கேட்டு ரசித்த
உன் குரல்
இசைக்கிறது காதினிலே....

மலரான நின் மென் தேகத்தின்
முதல்தீண்டலில்
பட்டாம்பூச்சியாய்
பறந்ததென்மனமே.....

நீ சுவைத்த 
கொங்குமெனக்கு
பெண்மையின்
பெருமையுணர்த்த...

உனைசன்னல்வழி
நோக்கியநின் தந்தையுமே..
புன்னகையில் பூரிப்பை புலப்படுத்த...

நீ கொடுக்கும் மகிழ்ச்சிதனை
வர்ணிக்கும் வார்த்தையில்லை
நானறிந்த மொழிதனிலே....

படிக்கும் வேளையிலே
கலைமகளாய் காட்சியளித்து….
வினாவாயிரம் எழுப்பி
விடையறியாமல்
விழிக்குமெனை
வினோதமாய் பார்த்து ரசிப்பவளே..

என் எழுத்தின்
ரசிகையாக...
அறியாமை விளக்கும்
ஆசானாக....
துள்ளித்திரிந்து விளையாடி
தோழியாக..
அம்மாவென்றழைத்து
மகளாக மகிழ்வித்து...

பிணிகொண்ட வேளையில்
செய்த பணிவிடையால்
நின் தாய்க்கு தாயாகி..
தாயின் பிரதிபிம்பம்
மகளென உணர்த்தியவளே..!!

யாதுமாய் விளங்கி
யாவற்றையும் வழங்குபவளே..
வசந்தத்தை வாரிவழங்கும்
வண்ணமலரே..
தாயுமானவளே
உனை வாழ்த்துகிறேன்.....!!



Sunday, 12 August 2012

கவிதை....


                                   
கவிதை எழுத எண்ணினேன்...
என் மனமெல்லாம்
நீயே
நிறைந்திருக்க....
உன்னையன்றி
நான் தனியாக
சிந்திப்பதேது ..??
உன் பெயரை
எழுதினேன்..
கவிதையாய் 
காட்சியளித்தது....!!!

அமைதியின் வலிமை...!!!



அழகுச் சிற்பமாய்
என்னை அறிமுகப்படுத்த..
அவன்
அறிவெனும் உளியால்
உடல்வருத்தி
செதுக்குகிறான்…….!!

இரவு பகல் பாராமல்
முன்னேற்றம்
சிந்திக்கும் அவனுக்குத்தான்
எத்தனை
பாசம் என்மீது..??

என் எழுத்தை
எட்டிநின்று ரசித்து..
வருந்தாமல் குறைசுட்டி
குன்றின்மீதான விளக்காய்
நான் ஒளிர..
தீக்குச்சியாய் எரிகிறான்....!!

அறிவுக்கண் திறக்க
எனை அறிவுறுத்தி
கோபத்திலும் பாசம்காட்டும்
குணாளனவன்...!!

வாழ்க்கைப்பயணத்தில்
வழிகாட்டி..
வழித்துணையாய் எனை
வட்டமிட்டு வழிநடத்தும்
வல்லவன்......!!

காதலை விதைத்து
காதலை அறுவடை செய்யும்
கலைஞன்…!!

அமைதியின் வலிமையை
அயராது போதிப்பான்...
அன்பிற்கிலக்கணமாய்
திகழ்ந்து
ஆளுமையில்
மன்னனாய் விளங்குவான்..!!

என்னை எனக்குணர்த்தி
முழுமையடைய
முழுமனதோடு போராடுபவன்..!!

எண்ணத்தில்
எண்ணும்போதே
எதிரே காட்சியளிப்பான்..
எங்கும் நிறைந்து
யாதுமாய் தோன்றி
எனை செதுக்கும்
சிற்பியவன்.......!!




Thursday, 9 August 2012

அவள்....!!!


கருணையின் வடிவானவளை.
கவிதைவடிக்க
எண்ணினேன்...
கவிதைக்கே கவிதையா..??
கவிதையும் நகைக்க....

பிரம்மன் வழங்கிய பாறையில்
கலைமகள் செதுக்கிய
சிற்பமவள்....!!

எழுத்தில்
எண்ணத்தை திண்ணமாய்
எடுத்துரைப்பாள்..

முகத்தில் பொலிவு..
கண்களில் கருணை..
பேச்சில் வசீகரம்....

கலைமகளின் அருளினால்
கர்வம் துறந்த
அன்புப்பெட்டகம்..
மனிதத்திற்கே மனிதம்
கூறும் மனிதருள் மாணிக்கம்.....

இல்லையென்ற வார்த்தைக்கு
இல்லையென கூறும்..
இல்லத்துக்கு அரசி..
இனிமைக்கு சொந்தக்காரி...
இன்பத்தை வாரி வழங்கும்
அன்புத்தாய்....

வலியில்லா வாழ்க்கைக்கு
வழிகாட்டி - மருந்தாய்
மனிதம் வழங்கி
வளியாய் வலிதீர்க்கும்
வசீகரப்பெண்மணிக்கு....!!!



Wednesday, 8 August 2012

என்னவன்...!!


என்னவனே...!!
நீ
எனை
அம்மு என அழைத்து
உன்மீது அன்பொழுகச்செய்து...

செல்லம் என அழைத்து எனை
சினுங்கச்செய்து.....
தங்கம் என அழைத்து
எனை காதலில் துவளச்செய்து....
அடியே என அழைத்து
அணைக்கத்தூண்டி....

ஒவ்வொரு அழைப்பிலும்
ஓராயிரம் உணர்வுகளை
உணர்த்துபவன்….

மரியாதையில் விளிக்க
கோபத்தில் நீயிருப்பது
குரலில் ஒலிக்க….!!

சிவந்த
உன் கண்மலர்களில்
முத்தமிட்டு
கோபம் தணிக்க
எத்தனிக்கும் என் மனம்…
உன்னருகில் இல்லாத எனை
எள்ளிநகைக்கிறதே
என்செய்வேன்.......??


Sunday, 5 August 2012

நட்பு.....!!!



பிறவித்தோட்டத்தின்..
வாழ்க்கைப்பயணத்தில்
நட்பெனும் விதைவிதைக்க...

பூந்தோட்டமாய்
விளங்கும் பயணம்..
மணம் வீசி மனம் கவரும்
மல்லிகையும், மரிக்கொழுந்துமாய் சிலர்..!!
பறிக்கும்போது தைத்து
சூடும்போது மகிழ்ச்சியளிக்கும்
ரோசாமலருமாய் சிலர்..!!

கண்கவர் கனகாம்பரமுமாய் சிலர்..
மணமில்லாவிட்டாலும்
மலருக்கான அழகுதான் குறையுமா....?

குளிர்ச்சியூட்டும்
தாமரையாய் சிலர்..!!
மலர்களோடு 
கனிகளும் கனிந்திருக்கும் தோட்டத்தில்..
சுவையூட்டும் 
வாழையும், பலாவுமாய் சிலர்.....!!

இனிப்பும்,புளிப்பும் கலந்த
மாங்கனியாய் சிலர்...!!
தலைமுறை தாண்டி பலனளிக்கும்
பனையும், தென்னையுமாய் 
நீண்ட பயணத்தில் துணையாய் சிலர்...!!

கசந்த வேம்பின் சுவைதவிர்த்து 
குணம் விரும்ப
குளிர்ச்சியூட்டி, இதமளிக்கும் 
தென்றலாய் சிலர்...!!

என் தோட்டத்தில் 
விதவிதமாய் கனிகளை விளைவித்து
மலர்களை மலரச்செய்த
நட்புகளுக்கு......
நன்றியெனும் நீரூற்றி..
அன்பெனும் எருவுஞ்சேர்த்து..
அழகிய மலர்ச்செடியை 
நட்பின் தோட்டத்தில்
நானும் பதியமிடுகிறேன்.. ....!!!