முகப்பு...

Friday, 20 June 2014

இயற்கைக்கு எதிராகும் பக்தி..!!!

பக்தி.  இவற்றிற்கு அவரவர் பார்வையில் அர்த்தங்கள் பல. நான் பக்தி பற்றி அலசவோ, பகுத்தறிவு பற்றி தெரிவிக்கவோ இவற்றை எழுதவில்லை.  பக்தி என்ற பெயரில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை (பாதிப்புகளை) பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்.

ஆலயம்...  இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் எனக்கூறினாலும், பணம் கொடுப்போருக்கு பிரசாதம், பழம், பூ, இறைவனுக்கு போட்ட மாலை என வழங்கி சிறப்பாக கவனிக்கப்படுவார்கள்.  இங்குதான் உலகவிசயங்கள் அனைத்தும் அலசி ஆராய்ந்து, அவரவர் வீட்டு  இருப்புநகை புடவைகளின் அழகு பற்றிய அலசல், விருப்பு வெறுப்புகளை கலந்தாலோசிக்கும் இடமாக இருப்பது ஒருபுறமிருந்தாலும் இவற்றையெல்லாம் பற்றி தற்சமயம் ஆராயவேண்டாம். :) 
பொதுவாக ஆலயம் என்றவுடன் மனதை ஒருநிலை தியானத்தில் கொண்டு வர உதவும் ஓரிடமாகவே கருதத்தோன்றும்.

ஆனால் இன்று அப்படித்தோன்றுகிறதா....??!!? 

முன்பெல்லாம் ஆலயத்திற்கு செல்லும்பொழுது, வீட்டிலிருந்தே ஒரு கிண்ணத்தில் எண்ணெய், திரி எடுத்துச்சென்று கர்ப்பக்கிரஹத்தில் இருக்கும் விளக்கில் ஊற்றிவருவோம்.   இறைவனது சன்னதியில் நம்வீட்டு எண்ணெயும் சேர்ந்த மன திருப்தி.  வீட்டில் இருக்கும் மலரை தொடுத்து ஒரு பிரம்புக்கூடை அல்லது வாழையிலை இப்படி எடுத்துசென்று கொடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் மாறி கூடவே ஒரு அகல்விளக்கு தனித்து எடுத்து சென்று ஏற்றிவருவது கடைபிடிக்கப்பட்டது

அடுத்து ஆலயத்திலேயே சின்ன சின்ன அகல்விளக்குகளில் நெய்(நெய் என்ற பெயரில் அவர்கள் ஊற்றிவைத்திருப்பது என்னவாக இருக்கும் என்ற ஆய்விற்கு வரவேண்டாம்) திரி போட்டு விற்பனை துவங்க, இந்த பக்தியினால் வியாபாரம் இனிதே ஆலயங்களில் தொடர்ந்தது. நெகிழிகளின் ஆபத்துகளை இயற்கை ஆர்வளர்கள் பலரும் அறிவுறுத்தி வரும் இந்த வேளையில், சின்ன சின்ன ப்ளாஸ்டிக் குப்பிகளில் எண்ணெய் விற்பனை செய்வது ஒப்பந்தம் அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு முன்பு விற்பனை நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே. ஆலயத்தில் இருக்கும் ஒரு விளக்கில் எண்ணெய் ஊற்றினால் போதாது தனித்தனியாக அனைத்து சன்னதியிலும் தனித்து ஏற்றினால்தான் பக்தியா..? குறைகூறவில்லை. ஆலயத்தில் ஆங்காங்கே வீசப்படும் சிறு சிறு ப்ளாஸ்டிக் குப்பிகளும், அதன் மூடிகளுன் தூய்மையை கெடுக்கும் என்பதை பக்தி மறைத்ததா..?? ஒரு சூடத்திற்காக ஒரு ப்ளாஸ்டிக் பை. அந்த சூடத்தையும் வீட்டிலிருந்தே எடுத்துவந்தால், ஆங்காங்கு போடப்படும் குப்பைகள் குறையலாம்.

ஒவ்வொரு சன்னதியிலும் (சன்னதிக்கு எதிரே ஒரு மேசை வைத்திருப்பார்கள் இருப்பினும்) அவரவர் விரும்பிய இடங்களில் அகல்விளக்கு ஏற்றி ஆலயத்தில் வழுக்கும் வகையில் எண்ணெய் சிந்தி, கரிபடியச்செய்வது ஏன்..? 

வீட்டிற்கு காய்கறி வாங்குவதற்கே நெகிழிப்பைகள் தவிர்க்க அறிவுறுத்திவரும் இன்றைய காலகட்டத்தில், இறைவனுக்கு எடுத்து செல்லும் மலர்கள் நெகிழிப்பைகளில்தான் எடுத்துவரப்படுகின்றன. அந்த பைகள் ஆங்காங்கு பிரகாரத்தில் வீசப்பட்டு காலில் சிக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பலரும் புனிதமாக கருதப்படும் இறைவனது சன்னதியின் கோபுரத்தில் சொருகி வைக்கின்றனர்.  சென்னையில் ஒரு பிரசித்திபெற்ற ஆலயத்தில் நந்தி சன்னதியின் கோபுரத்தில் அடுக்கடுக்காக நெகிழிப்பைகள். (நானே ஓரிரு முறை அனைத்து நெகிழிப்பைகளையும் அப்புறப்படுத்தியிருக்கிறேன்.)  இருப்பினும் அடுத்தநேரம் செல்லும்பொழுது அதே இடத்தில் பைகள்.  

பக்தி என்ற பெயரில் ஆலயங்களை புகைபடியச்செய்வதும், தரைவழுக்கும்படியாக எண்ணெய் ஊற்றுவதும், ப்ளாஸ்டிக் குப்பிகளையும், சூடம், ஊதுபத்தி பிரித்தகுப்பைகளை ஆங்காங்கு வீசுவதும், நெகிழிப்பைகளை அங்கங்கே வீசியும், கோபுரத்தில் சொருகிவைப்பதும் தான் பக்தியா..??

தனிமனித உணர்வுகளை குறைகூறியோ, பக்தி வேண்டாம், இறைவனே இல்லை என்ற வாதத்தை முன்வைத்தோ இந்த பதிவை வழங்கவில்லை. அது தனிமனித உணர்வு சம்பந்தபட்ட விசயம். இருப்பினும், தங்கள் பக்தி பொது இடத்தில் இதுபோன்று சுற்றுப்புற சூழலை பாதிக்கும்படி இல்லாமல் பார்த்துக்கொள்ளலாமே...??

ஆலயத்தை அசுத்தப்படுத்திவருபவர்கள் சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியே.  அந்தந்த ஆலய நிர்வாகமும் இதுசார்ந்து நடவடிக்கை எடுப்பதோடு தாங்களும் ஆலயத்தை சுத்தமாக வைத்திட  பொதுமக்களோடு இணைந்து செயல்பட்டால் நல்லது.  சிந்திப்பா(பீ)ர்களா..??!!!


Thursday, 19 June 2014

அறிந்தும் அறியாமலும்...

காயம் ஏற்படுத்தியவரால் கூடசில பல காயங்கள் ஆற்றப்படா(முடியா)மல் புரையோடிவிடுகின்றன..
****
தன்னை விரும்பாத வீட்டிற்கு
அழையா விருந்தாளியாய் செல்லும்
மரணம்..
விரும்பியழைப்பவரை
அலட்சியப்படுத்தி
ஏமாற்றத்தைப்பரிச்சாய் வழங்குகிறது(தே)..!
**********
கானல் நீரருந்தி தாகம் தணிப்பதுபோல்
வேடமணிந்த அன்பிலும்
ஆறுதல்கொள்கிறது (பலரது) மனம்..

Wednesday, 18 June 2014

புதியதோர் உலகம் அமைப்போம்..!!

மூச்சையடக்கி கல்விக்கடலில் மூழ்கியே
அறிவுமுத்தை அள்ளியெடுக்க 
விழைந்திடும் குழந்தைகளுக்கு வழங்கிடாது...

வணிக உலகிலே
அதிகவிலைகொடுக்கும் வணிகருக்கே
அள்ளிவழங்கி...
வாழ்க்கையை வணிகமாக்கும்
கல்வித்தந்தையில்லா..
புதியதோர் உலகையமைப்போம்...!!

மனிதம் துறந்து,
உணர்வுகள் மரத்து
மனிதனை மனிதன் கொன்றே
முன்னேற விரும்பிடாத 
புதியதோர் உலகையமைப்போம்...!!

இறைக்கு  நிகராம்
மருத்துவருமே
மனம் நெகிழ்ந்து
யாவர்க்கும் சமமான மருத்துவமளித்து
மனிதம் போற்றிடும் மகத்தான
புதியதோர் உலகையமைப்போம்...!!

பிரபஞ்சத்தின் புனிதமாம்
தாய்மை மதித்து..
பெற்றோரை வணங்கி பேணிக்காத்தே
காப்பகமில்லா...
புதியதோர் உலகையமைப்போம்...!!

இயற்கையைப் போற்றிப்பாதுகாத்திடும்
மனங்கள் நிறைந்த
புதியதோர் உலகையமைப்போம்...!!

வாழ்க்கைத்தோட்டத்தில்
அன்பு,பாசம், மனிதமெனும்
அரியமலர்கள் அனைத்தும்
நறுமணம் வீசிடச்செய்யும்
புதியதோர் உலகையமைத்திடவே
தொடரும் எம் பயணத்தில்
இணைந்தே பயணிக்க
இன்முகத்துடன் அழைக்கின்றேன்...
இணைந்த கரங்களுடனே
இன்னல்களை எதிர்கொள்வோம்..
எங்கும் மகிழ்ப்பூ மலரச்செய்யும்
புதியதோர் உலகையமைப்போம்...!!

Thursday, 13 March 2014

புதிராட்டம்...!!


ஊருக்கு நேரணி
உள்ளுக்குள் எதிரணி...
உள்ளுக்குள் நேரணி,
ஊருக்கு எதிரணி..
எதிரணியும்,நேரணியும்
ஓரணியென...

நேரணியும், எதிரணியும்
ஓரணியுமாய்..
அன்றாட ஆட்டத்தை
அற்புதமாய் அறங்கேற்றுகிறது..
தம் தம் இடம் அறியாமலே..!!

நேரணியா, எதிரணியா
இவ்வணி எவ்வணியென
உள்ளம் எழுப்பும் கேள்விக்கு
உள்ளார்ந்து கிட்டாது
புதிராகக் கிட்டிடும் விடையுமே..!!

ஆடும் அணியினரே அறிந்திடாத
புதுமையான ஆட்டமிதில்...
வெற்றியும், தோல்வியும்
ஆட்டத்தையாடும் அணியினருக்கல்ல
ஆட்டுவிக்கும் படைத்தவனுக்கே..!!

இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!

Thursday, 6 March 2014

விடியல்....


நேற்று(06.03.14)  தில்லி தமிழ்ச்சங்கத்தில் ”விடியல் பார்வையற்றோர் இசைக்குழு” நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. திருச்சியைச் சார்ந்த விடியல் இசைக்குழுமத்தில் அனைவரும் பார்வையற்றவர்கள். சகோதரர் வரதராசன் தமிழ் பட்டதாரி.(பி.ஏ.,பி.எட்., ).  ”சாகும் வரை தமிழ் படித்து சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்...” என்ற வாசகத்தைக்கொண்டுள்ளது இவர்களது முகப்பு பேனர்.  மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் பார்வை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர் இந்த குழுவினர்.  சகோதரர் வரதராஜனின் தமிழ்ப்பற்றும், அவரது குரல்வளமும் வியக்கவைக்கிறது.  பார்வையில்லை என்ற எண்ணம் இருப்பதாகவேத் தெரியாமல் மிகவும் தன்னம்பிக்கையுடன் இவர்கள் நிகழ்ச்சி இருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.  பெரிய பெரிய இன்னிசைக்குழுவினரின் தேதிகள் கிடைக்கக் காத்திருக்கும் பலர் இவர்களின் இசைக்குழுவையும் நாடிப்பார்க்கலாமே..! பிரபலமான பாடகர்களும் தன் நிகழ்ச்சியில் தமக்கு முன்னே இருக்கும் பாட்டுப்புத்தகம் வைத்து பார்த்துப்பார்த்துப் பாடுவார்கள்.  இவர்கள் தங்கள் மனப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை அகக்கண்களால் பார்த்துப் பாடுகின்றனர்.

குழுவில் இருக்கும் அனைவரது குரல் வளமும் வரமாகவேத் தோன்றுகிறது.  சகோதரிகள் அருணா மற்றும் காந்திமதி அவர்களின் குரல்வளம், வழங்கியவிதம் அனைத்தும் அருமை என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்தக்கூடியதல்ல.  சகோதரி அருணா பாடிய முகுந்தா முகுந்தா பாடலில் அவர் குரல்மாற்றிப் பாடியவிதம் மனதைக்கவர்ந்தது.

சகோதரர் வரதராஜன் “காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடலை” பெண் குரலில் பாடியபொழுது பாராட்ட வார்த்தைகளற்று பிரமிக்கவே முடிந்தது.  மனம்நெகிழ்ந்து வரும் கண்ணீர்முத்துக்களை உணர்வு இழையில் மாலையாக்கி பாராட்டுகிறேன். 

நிகழ்ச்சிகளுக்கிடையில் சகோதரர் வழங்கிய ஒரு செய்தி..”பார்வையற்றவர்களை சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகள் என அழைக்கின்றனர்.  மாற்றுத்திறன் என்பது பார்வையற்ற என்ற பொருளை கொடுக்காது.  எனவே பார்வையற்றவர்கள் என்று கூறுவது தவறாகாது...அப்படி அழைக்க சங்கடப்படவேண்டாம்” என்றுகூறினார். இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தில்லி தமிழ்சங்கத்தை பாராட்டுவதோடு விடியல் இசைக்குழுவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, என்றும் இளமையானவளாம் தமிழன்னையைப்போல் இவர்களும் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியும், வெற்றியும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் வழங்கவேண்டுமென வேண்டி வாழ்த்துகிறேன்.  

Wednesday, 5 March 2014

அறிந்தும் அறியாமல் சிதறியது..:)

கண்களை விற்று சித்திரம் வாங்கி இரசிக்க முடியாததைப்போல் வாழ்வதற்காக ஓடும் நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து வாழ்கிறோம்...
**
அறிந்தே முட்டாளாவது, குழந்தையிடத்தும், அன்புடையவர்களிடத்தும்..:)
**
காயப்படுத்தக்கூடாது என உறுதியெடுக்கும் அந்த நிமிடமே மற்றுமோர் ஆயுதம் கூர்தீட்டப்பட்டு நம்மையறியாமலேயே கையிலெடுக்கப்படுகிறது மௌனமாகவோ, வார்த்தையாகவோ ..

**
”ஒன்றுமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை, வெளிக்காட்டப்படாத அன்பு, மருந்திடப்படாத உடை(த்து)ந்து நொறுக்கப்பட்ட மனம் மறைந்திருக்கலாம்.. :)
**
ஆறிய காயத்தின் வடுக்களை காண சகிக்காமல், காயம் உண்டாக்கியவர்களால் மீண்டும் கீறப்பட்டு இரத்தத்தால் அழகுபடுத்தப்படலாம் :)
**
இன்று எங்கோ யாருக்கோ ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வு, என்றோ ஏற்(படுத்தப்)பட்ட காயத்தின் வடுக்களை கீறி இரத்தம் கசியச் செய்யலாம்..
**