முகப்பு...

Tuesday, 20 November 2012

ஓவியக்கவிஞன்..





வர்ணங்களால்
எண்ணங்களைத் தீட்டி
வார்த்தையில்லா காவியம் படைத்து
கவிதையெழுதத் தூண்டி
கவிஞனை உருவாக்கும் ஓவியன்....!!!

எண்ணங்களில்
வர்ணம் தவிர்த்து
வார்த்தைஜாலம் சேர்த்து
கவிதை வடித்து
ஓவியம் தீட்டத்தூண்டி
ஓவியனை உருவாக்கும் கவிஞன்...!!!

கலைமகளின் புத்திரர்களாம்
கவிஞனும்,ஓவியனும்
கவலைதனை நீக்கும் வைத்தியர்கள்..!!!



Sunday, 18 November 2012

சொர்க்கத்தின் வாசல்..



விசுவநாதன், விசாலாட்சி தம்பதி கண் மூடி சிவன் சன்னிதியில் பிரார்த்திக்க யார் பேர்ல அர்ச்சனை..? அர்ச்சகரின் குரல் கேட்டு..சின்னவன் பேருக்கு சாமி. சிவா, பரணி நட்சத்திரம். அர்ச்சகர் சங்கல்பம் செய்தபடியே நகர. கடவுளே என் மகன், மருமகள் நல்லபடியா இருக்கனும். 
இந்தாங்கோ பிரசாதம்என்ன விசாலாட்சி அம்மா இன்னிக்கு என்ன விசேசம்? “

என் மகனும், மருமகளும் இன்னிக்கு அமெரிக்கா போறாங்க சாமி அதான் அர்ச்சனை பண்ணிட்டு போலாம்னு வந்தோம்.
அப்படியா ரொம்ப சந்தோசம்.  அவன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதீங்கோ..
சரி சாமி நேரமாச்சு நாங்க கிளம்பறோம்.” என்றபடி கோவிலில் இருந்து கிளம்பினர்.

மூத்தவன் ரவிக்கு படிப்பிற்கேற்றவாறு நல்ல உத்தியோகம் கிடைக்க மனைவி, குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசிக்கத் துவங்கிவிட்டான்.  இரண்டாமவன் சந்துரு ஐந்து வருடமாக துபாயில் மனைவி, மகனுடன் வசிக்கிறான்.

மூன்றாமவன்தான் சிவா கடைக்குட்டி அம்மாவின் செல்லப்பிள்ளை.  காலேஜ் போனாலும் அம்மா அம்மா என சுற்றி சுற்றி வருவான்.  சென்ற மாதம்தான் சங்கரியோடு திருணம் நிகழ்ந்தது.  சங்கரி பணக்கார வீட்டு பெண், படித்தவள் இருப்பினும் கொஞ்சமும் அந்த பகட்டு இல்லாமல் அத்தை, மாமா என அனைவரிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்பவள் இப்பொழுது சிவா வேலை பார்த்த நிறுவனமே அவனையும், மனைவியையும் அமெரிக்கா அனுப்புவதின் விளைவு இன்றைய பயணம் .

விஸ்வநாதனும், விசாலாட்சியும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும், குழந்தைகள் படித்து வேலைக்கு செல்லத்துவங்கியதும் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். வசதிக்கு குறைவில்லை. மருமகள்களும் வந்துசெல்லும் நேரம் மட்டுமன்றி அவ்வப்பொழுது அழைத்துப்பேசி, இந்தியா வருபவர்களிடம்  அத்தை, மாமாவிற்கு தேவையானதை அனுப்பி வைத்தனர்.

மாலை..சிவா, சங்கரி கிளம்பும் நேரமும் வர..விசாலாட்சி தன் மனக்கவலையினை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வழியனுப்ப முயற்சித்தாள்.

அம்மா, அப்பா நாங்க கிளம்பறோம் எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க..என இருவரும்  காலில் விழ நல்லபடியா போயிட்டு வாங்க என கண்ணீர் மல்க ஆசீர்வதித்தாள் விசாலம்.  உடம்ப கவனமா பார்த்துக்கோங்க.  எதுவா இருந்தாலும் எந்த நேரம்னாலும் போன் பண்ணுங்க.  பிரபுகிட்ட சொல்லியிருக்கேன் அவனும் அப்பப்போ வந்து பார்த்துப்பான். நான் தினம் போன் பண்றேன்.

மாமா, அத்தை நாங்க கிளம்பறோம் என்ற சங்கரியிடம் பிரியாவிடைகொடுத்தபடியே,
நாங்களும் ஏர்போர்ட் வரேன் சொன்னா ஏன் வேண்டாங்கிறே..??”
அப்படி இல்லேம்மா அங்க வந்து என்ன செய்யப்போறீங்க..வாசலோட திரும்பனும் எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்ன்னுதான் வேண்டாம் சொல்றேன்.
சரிப்பா இரண்டு பேரும் கவனமா போயிட்டு வாங்க..கடவுள் என்னிக்கும் துணையிருப்பார்.

அன்றிரவு முழுவதும் மகனைப்பிரிந்த ஏக்கத்தில் விசாலம் உறங்காமல் விழித்திருந்தவள் அதிகாலை சற்றே கண்ணயர.. கணவனின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவள் அவர் யாருடனோ போனில் பேசுவதைக் கண்டு யாருங்க நம்ம சிவாவா..? என ஆவலாய் கேட்டாள். அவள் பக்கம் திரும்பி ம்....என்றவர் “இருப்பா அம்மாகிட்ட கொடுக்கறேன். என்றார்.
“சிவா,எப்படிப்பா இருக்க..நல்லபடியா போய் சேர்ந்தியா.வீடு நல்லா இருக்கா..யாரும் ஏர்போர்ட் வந்தாங்களா”என அடுக்க... “எல்லாம் வசதியா இருக்கும்மா.நீங்க கவலைப்படாதீங்க.”என்றதும் சரிப்பா என சங்கரியிடமும் விசாரித்தவள் சற்றே மனநிம்மதியுடன் காணப்பட்டாள்..

இவர்களது பாசம் இப்படியே போனில்  தொடர்ந்தது.  அவர்களது பரபரப்பான வாழ்வில் ஆறுமாதம் ஆறுவாரம்போல் கடந்தது. ஒரு நாள் இரவு திடீரென அப்பாவிடமிருந்து அழைப்பு....

“என்னப்பா இந்த நேரத்தில்...?”சற்றே திகிலுடன் சிவா வினவ.. “அம்மாவிற்கு மாலையில் இருந்து நெஞ்சு வலிப்பா. நம்ம டாக்டர் வந்து பார்த்துட்டு போயிருக்கார். நாளை ஹாஸ்பிடல் அழைத்துவர சொல்லியிருக்கார் ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்கனுமாம்.”
“அய்யோ...இப்ப எப்படிப்பா இருக்காங்க...நாங்க பேசலாமா..?”

“இல்லப்பா மாத்திரை சாப்பிட்டு தூங்கறா.. நீ கவலைப்படுவே உன்கிட்ட சொல்லவேணாம்னு சொன்னா. எனக்குத்தான் பயமா இருந்திச்சு அதான் போன் பண்ணேன். சரி நீ வருந்தாத. நாளை ஹாஸ்பிடல் போயிட்டு அங்கிருந்து போன் பண்றேன்.”

சங்கரியிடம் அம்மாவின் உடல்நிலை குறித்து வெகுநேரம் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை..

போன் சத்தம் அலர..அதிர்ந்து எடுத்தவன் “என்னாச்சுப்பா.. பதற்றமாய் கேட்டான்.
“சிவா உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கேன். ரொம்ப சீரியஸாம்.உடனே எல்லார்க்கும் தெரிவிங்கன்னு சொல்லிட்டாருப்பா நம்ம டாக்டரு.எதிர் முனையில் அப்பாவின் குரல் உடைந்திருந்தது. “அய்யோ அம்மா.. என்னப்பா இது.. ஆமா அண்ணாக்கெல்லாம் சொல்லிட்டீங்களா..??”

“இப்பதான் பேசினேன்பா.. பெரியவன் வேல விசயமா ஜெர்மனி போயிருக்கானாம். தொடர்பு கொள்ள முடியல. அடுத்தவன் பிளைட் டிக்கட் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கலன்னு ஒரே அழுகை.”

“அய்யோ... அப்பா இப்ப என்னாலயும் உடனே வரமுடியாதே. நாளை ஒரு அவசர மீட்டிங் இருக்கு. அதுக்கு போகலேன்னா கோடிக்கணக்கில் நாம நஷ்ட ஈடு தரமாதிரி இருக்குமே.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலியே... கண்கள் குளம் கட்ட,“அப்பா... அங்க நம்ம டாக்டருகிட்ட கேட்டு கேமரா ஆன்பண்ண சொல்லுங்கப்பா. அம்மாவைப் பார்க்கனும் போல இருக்கு.” என்றான்.

“இல்லப்பா ஐ.சி.யுவில இருக்கிறதால அனுமதி இல்ல. மூன்று பசங்க இருந்தும் கடைசி நேரத்தில் ஒருத்தர்கூட பக்கத்தில் இருக்க கொடுப்பன இல்லாத பாவியாயிட்டோம் நாங்க...”என விசுவநாதன் கதற.

“அப்பா அழாதீங்க.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”என இவன் கதற...

“என்னாச்சுங்க”சங்கரி சிவாவை உலுக்கி எழுப்பினாள்.

திடுக்கிட்டு எழுந்தவன்.,நான் கண்டது கனவா..??என மணி பார்த்தான். காலை 6 மணி. அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே என குழம்பியபடியே எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

அலுவலகம் சென்றவன்,மேலதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க..
“என்னாச்சு சிவா,சொர்க்கம் மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருக்கோம்.. இன்னும் வேற என்ன வேணுமோ கேளு..அதுக்கு ஏன் ராஜினாமா செய்யனும்..??”என வினவ...

“சொர்க்கம் மாதிரி வசதிகளுக்கு அடிமையாகித்தான் அம்மா,அப்பாவுடன் சேர்ந்து வாழும் சொர்க்கத்தையே இழந்துட்டு நிக்கறோம். போதும் சொர்க்கத்தின் வாசலை அடைத்துவிட்டு சொர்க்கத்திற்கு போகும் வழி தேடறோம் நாங்க எல்லாம்.  கஷ்டப்பட்ட காலத்தில் காசுமேல ஆசை இருந்தது உண்மைதான்..ஆனா அப்பகூட சந்தோசமாத்தான் இருந்தோம். இப்ப காசு, வசதிகள் இருக்கு..ஆனா இந்த உலகுக்கு அழைத்துவந்த அம்மா, அப்பாவை தவிக்கவிட்டு அவங்க மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட போன்ல அழற நரக வாழ்வு எனக்கு வேண்டாம் சார்... எனக்கூறி தன் இருக்கைக்குத் திரும்பியவனை மனைவி சங்கரி போனில் அழைக்க..  “என்னாச்சும்மா..?

மாமா போன் செய்தார்ங்க..அத்தைக்கு ஒன்றும் இல்லையாம். சாதாரண கேஸ்,அப்புறம் உங்களப்பிரிஞ்ச கவலை இரண்டும் சேர்ந்த்தாலத்தானு டாக்டர் சொல்லிட்டாராம். நீங்க கவலைப்பட வேணாம்னு மாமா சொல்லச்சொன்னார் என்றாள் சந்தோஷமாக.
நன்றி கடவுளே என்றவன்,தான் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டதையும்,அடுத்த வாரமே இந்தியாவோடு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் மனைவியிடன் கூற,  ரொம்ப சந்தோசங்க.  உங்க முடிவு மிகவும் சரியானது.  எனக்கும் மகிழ்ச்சி என்றவள் தன் கணவனை நினைத்து பெருமிதப்பட்டவாறே இந்தியாப் புறப்பட என்ன என்ன செய்யவேண்டும் என திட்டமிடலானாள் மனதினுள்...!!!

Wednesday, 14 November 2012

நான் கண்ட தீபாவளி...!!!


வண்ணமடித்த வீடுகளை
சன்னல்களும்,சோபாவும்
புத்தாடையணிந்து அழகூட்ட..

தீபாவளித் தள்ளுபடியில்
விரும்பியழைத்த விருந்தாளிகளாய்
வீட்டு உபயோகப்பொருட்கள்..

சாமந்தியும், ரோசாவும்
சரம் சரமாய் கதவுகளை அலங்கரிக்க..

கோலங்களில் மலர்ந்த மலருக்கு
வண்ணமடித்து...

கண்ணாடிப்பாத்திரத்து நீரில்
கண்ணுக்கழகாய் நீச்சலடித்து
மனம் கவரும் மணம்வீசும் மலர்கள்...

வானவில்லுக்குப் போட்டியாய்
வண்ண வண்ண விளக்குகள்
வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிர..

மேகத்தை முற்றுகையிடும்
பட்டாசுப்புகைகள்..
ஆகாயத்தில் அரங்கேறும்
வானவேடிக்கையில்
இடியும், மின்னலும்
இருக்குமிடமறியாதுபோக...

எங்கும் கண்ணைப்பறிக்கும்
வண்ண உடைகள்..
அலங்கார விளக்குகள்..
வெ(இ)டியோசை...
இறைந்துகிடக்கும் காகிதங்கள்...

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்
குழந்தைகள்..
பட்டாசுகளோடு பவனிவரும் இளைஞர்கள்
இனிப்புவகைகளை இங்குமங்கும்
எடுத்துச் செல்லும் மகளிர்களென
தெருவெங்கும் காட்சியளிக்க...

இத்துனை மகிழ்ச்சியினிலும்
ஏதோ ஒரு இழப்பை உணர்கிறது மனம்...

இரண்டுநாள் முன்பே
இங்குமங்கும் அலைந்து
மருதாணிப்பறித்து மைய அரைத்து
கரங்களை அலங்கரிக்கும் பெண்களில்லாமல்..

அதிகாலையெழுந்து எண்ணெய்த்தேய்த்து
புத்தாடை உடுத்தி
அண்டை அசலாருக்கு
அவர்தம்வீட்டுப்பலகாரங்களை மகிழ்வாய்ப்பகிர்ந்து..
தன்வீட்டுப்பலகாரத்தைப்பட்டியலிட்டு..
புத்தாடையெடுத்த வரலாற்றைப் பேசும்
பெண்களின் குரல்களும்,
குழந்தைகளின் குதூகளமும் இல்லாமல்..

பெரியவர்களின் காலில் விழுந்துவணங்கி
அவர்கொடுக்கும் பணத்தைப் பொக்கிசமாய்
பாதுகாக்காமல்..

பூக்கூடையெடுத்து குடும்பத்தோடு
கோயிலுக்கு செல்லாமல்..

பலவீட்டுப்பலகாரத்தில் ருசிபார்த்து
இது நல்லாருக்குனு சுவைத்துப்பார்த்து தனக்கென
எடுத்துவைக்கும் குழந்தைகளின் செயல்களில்லாமல்..

இருப்பவர்க்கு இருப்பவர்
தகுதியறிந்து தரம்பிரித்துக் கடையில் வாங்கிய
அலங்கார அட்டைப்பெட்டியில் அடங்கியிருக்கும்
உலர்ந்த பழங்களும், இனிப்புகளும்
எள்ளிநகையாடுகின்றன சுவைப்பவர் இன்றி...!!



சிதறியவை..

அலட்சியப்படுத்தப்படும் உணர்வுகள்
ஒவ்வொன்றும் மரணித்தாலும்
மறுபிறப்பு எடுக்கிறது
மதிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு...!!!
--------
கண்ணீருக்குக் காரணமானவரே
கண்ணீரின் காரணம் வினவ
கண்ணீரின் அளவு அதிகரிக்கவே செய்யும்...!!
---

Thursday, 8 November 2012

வீடு..


பாசமெனும் கல்லும்,
மண்ணுமெடுத்து..
வியர்வை நீரூற்றிக்குழைத்து..
உள்ளத்து உணர்வுகளுக்கு
அழகிய உருவம் கொடுத்து
உயிரோட்டமாய் வீடமைக்க...

இல்லாள் இல்லா இல்லம்
இல்லமுமாகும...
??

இன்முகத்துடன்
இனியவளாய் இல்லாள் அமைய
வண்ணமிகு சுவற்றினிலே
வாஞ்சையாய்
கிறுக்குவதற்கு
மழலைச்செல்வங்களும்....

வாழ்க்கையில் வழிகூற
வயோதிகப் பெற்றோரும்
உடனிருக்க...

நேர்மைப்பாதையில்
நிமிர்ந்த நெஞ்சோடு
உழைத்துவரும்
ஆடவனின் இல்லத்தோட்டத்தில்

எங்கும் இன்பம் பூத்துக்குலுங்கும்
இன்பநாளுக்காய்
ஏக்கமுடன் காத்திருக்கிறேன்..!!

Saturday, 3 November 2012

இறுதி ஆசை..!!



கண்மலர்களும்
நின் காதல்பார்வையில் கிறங்க..

செவிகளும் உன் காதல்கீதம் கேட்டபடி
ஓய்வெடுக்க...

என் கேசக்குழந்தை
நின் கரங்களில் துள்ளி  விளையாட...

சுவையறியும் என் நாவும்
உனையே  உச்சரிக்க...

ஐயிரண்டு விரல்களும்
உன் கன்னம் வருட

கனிரசம் அருந்திய
உன்னிதழ் சுவைத்து..

உன் தேகம் வீசும்
காதல் சுவாசித்து

நின்காதலில் நெக்குறுகும்
மனம் உனையே எண்ண..

ஏழேழு ஜென்மத்திற்கும்
அச்சாரமாய்  என் காதல் ஏற்று
பானுவும், மதியும் பாரினில் உள்ளவரை
பிரபஞ்சம் நம் காதல் பேச

நெகிழும் என் தேகம்
உன் மடி கிடந்து
உயிர்துறக்க விரும்புகிறேன்...!!!








Friday, 2 November 2012

புரிதல்...


புரிந்தவர்
புரிந்ததை
புரியாதவர்க்கு
புரியும்படி
புரியவைக்க முனைய..
புரியாதவர்
புரிந்தவர்
புரியவைப்பதை
புரிந்துகொள்ளாமல் போக
புரிந்ததை புரியும்படி
புரியவைப்பதெப்படி
புரிந்தவருக்கு புரியாதுபோக
புரிந்தவரும் புரியாதவராய்..!!
*****
https://www.facebook.com/groups/thamizhkkudil/