முகப்பு...

Wednesday, 10 October 2012

சாதனை..!!



கொஞ்சுமெழில் விஞ்சிநிற்கும்
மழலைமுகம்..
சுருண்ட கார்குழலும்
சுந்தரிக்கு அழகு சேர்க்க.

கல்வியில் கலைவாணியாய்
நடனத்தில் மாதவியாய்
தஞ்சை ஓவியமாய்.
கலைமகளின் ஆசிபெற்ற
கன்னியவள்
கலைப்பயணத்தில்
கலாச்சாரமும் வேலிபோட..

”
சாதி”க்க
துடிப்பவளுக்கு
”
சாதி”யும் தடையாக....

ஆதர்ச தம்பதியாய்
விளங்கவே..
பதிக்கேற்ற சதியாகி
கலைக்கு சதியாகும் அன்னை...

பதியின் மதியும் விதியாகி
விளையாட்டை விரும்பும்
கன்னியிவளின்
கலைப்பயணத்தில்
படிக்கல்லே தடைக்கல்லாய்..

விரும்பி கலைமேடையேற
துடிப்பவளுக்கு
விரும்பா கலாச்சார
வேடமணிவிக்கும் பெற்றோர்கள்..

சாதி மதித்து விதிக்கு
இரையாவாளோ..??

சாதி முறித்து
கலைப்பயணத்தில் சாதிக்க...
வீறுகொண்டெழுவாளோ..??
விதிநொந்து வீழ்வாளோ...???

Tuesday, 9 October 2012

கருத்த மச்சான்...

நெஞ்சத்தில குடிகொண்டு
நெஞ்சுக்குள்ள காதலத்தான்
நீ விதைச்சு
நித்தமும் தாலாட்டுப் பாடி என்ன

கண்ணுறங்க வைக்கும்
என் ஆச மச்சான்...
கதிரவனும் உதிக்கும் நேரமாச்சு
கண் திறந்து பாரு மச்சான்
என் ஆச கருத்த மச்சான்...!!

காதல் முத்தத்த
கன்னத்துல கொடுக்கசொல்லி
வீசும் வேப்பங்காத்த
விரசாக தூதனப்பி
உன் எண்ணத்ததான்
எழுப்பிடறேன்
எழுந்திருச்சு வா
என் ஆச கருத்த மச்சான்..

வெரசாக நீயெழுந்து..
அன்னாட வேலையத்தான்
வெவரமா பாத்திடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

உடம்பத்தான்
கட்டுக்கோப்பா வச்சுக்கிட
நீச்சத்தண்ணி நீ குடிச்சி
நேரத்தோட உடற்பயிற்சி செய்யவேணும்
என் ஆச கருத்த மச்சான்....!!

கொல்லப்புறம் போயி நீயும்
கொடிமலரை பறிக்கையிலே
பூவை என்ன நெஞ்சுக்குள்ள
பூவாக நினைக்கோணும்
என் ஆச கருத்த மச்சான்...

தேனுறிஞ்சும் வண்டகண்ட
நீ
தேன் குரலால் என்ன
அழைச்சிடனும்
என் ஆச கருத்த மச்சான்..!!


ஆத்துத்தண்ணில
அமுங்கிக்குளிக்கையில
கரையோரம் நிக்கும்
என்ன அப்பப்போ
ஓரக்கண்ணால
கண்டுகிடனும்
என் ஆச கருத்த மச்சான்...

ஆத்தாவை வணங்கித்தான்
வேலைக்கு கிளம்பும்
நீ...
யாரும் அறியாம
என் உள்ளம் குளிர
முத்தமொன்ன பறக்கவிடனும்
என் ஆச கருத்த மச்சான்......!!

யாருக்கும் அஞ்சாம
நீயும்
வேலயத்தான் பாத்து
நேர்மைக்கு உதாரணமா
விளங்கிடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

தப்பத்தான் தட்டிக்கேட்க
தயங்கிடாத
உம்புகழ தரணி பூரா பேசிடனும்
என் ஆச கருத்த மச்சான்....!!

லஞ்சம் வாங்கும்
பஞ்சப்பயலுக்கு சிம்ம சொப்பனமா
விளங்கனும்
என் ஆச கருத்த மச்சான்.....

ஆறடிச்சா வூடு வந்து சேந்திடனும்
அக்கம்பக்கம் புள்ளைங்களுக்கு
அறிவுக்கண்ண திறக்க
நீயும் உதவிடனும்
என் ஆச கருத்த மச்சான்.....!!

சாதியில்லா சமத்துவ
ஊரத்தான் உருவாக்கிடவும்...
வறுமையில்லா
தேசத்தை உருவாக்கிடவும்...
வளமான உன் உழைப்பை
வஞ்சனையில்லாம நீ
கொடுக்க
உலகமே உனப் பாத்து
வியந்துபுடணும்
என் ஆச கருத்த மச்சான்....!!

இத்தனையும் செஞ்சுமுடிக்க
எம்மவராசன் நீயும்
வெரசா..
கண் திறந்து பாருமச்சான்
கதிரவனும் வந்தாச்சு...
என் ஆச கருத்த மச்சான்.....!!



Monday, 8 October 2012

இறை...



 மூடிய விழிகளும்
விரைத்த உடம்பும்,
கோர்த்த கரங்களுமாய்
ஏகாந்தமாய் இறை உணர
எத்தனிக்கும் வேலைதனிலே...

எண்ணம் விழித்திருக்க
சிதறும் சிந்தனைகளும்
சிந்தும் கண்ணீரும் தடைபோட..

உள்ளிழுக்கும் சுவாசமும்
இதயத்தை அழுத்த
இழுப்பது எது..
அழுத்துவது எது...
இறை நாடுவது எது..
எண்ணத்தை சிதறடிப்பது எது..
ஏதுமறியாமல்

விழிநீரும் வழிந்தோட..
சிவந்த விழிகளுடன்
சிம்மவாகினி
செவ்விதழ் நாயகியை
இதயத்தாமரையில்
இருத்திப்பார்க்க
எத்தனிக்கும் எம்முயற்சியும்
ஈடேறுமோ..???


Sunday, 7 October 2012

உணரப்படாத வலிகள்...


இன்றைய வெறுப்பில்
மற(றை)ந்திருக்கும் நேற்றைய அன்பு
நினைவிற்கு வருவதில்லை...!!
******
உண்பவனுக்கு..
சோற்றில் மறைந்திருக்கும்
உழவனின் வியர்வைத்துளி  தெரிவதில்லை..
******
பூமாலையின் அழகில்
இறுக்கப்பட்டிருக்கும்
காம்புகளின் வலி தெரிவதில்லை..
******
வெண்மைநிற ஆடைக்குப்பின்
மறைந்திருக்கும்
வெளுத்தவனின் வலி
உணரப்படுவதில்லை...
 
******
நீச்சல் குளத்தில் குளிப்பவனுக்கு
குழாயடியில்
குடிநீருக்குப் போராடுபவனின்
வலி தெரிவதில்லை...
******







Thursday, 4 October 2012

பள்ளியெழுச்சி...!!


இதயத்தில் அமர்ந்து
காதலில்
காதலை
காதலால் தாலாட்டி
உறங்கச்செய்பவனே...!!
தென்றலில் கலந்து
கன்னம்வழி
எண்ணம் தீண்டி..

நின் இதயத்தில்
இருப்பவள்
இதழ்பதித்து
இயம்புகிறேன்..

கனிவும்,காதலும்
கொண்டோனே...!!

எண்ணங்களுக்கு
வண்ணம் கொடுத்து
கடமையினை
நிறைவேற்ற
கனவுகள் கலைந்து
கண்மலர் திறப்பாய்...!!!


Tuesday, 2 October 2012

ஓட்டம்...!!


பார்ப்பதற்கு
வேலையுமில்லை
நிற்பதற்கு
நேரமுமில்லை..
காலைமுதல்
மூச்சிரைக்க ஓடித்திரிந்து
கலைத்து..
உடல் ஓய்ந்து
ஓய்வெடுக்க...

ஓடத்துவங்கியது
சிந்தனை..
செய்ததென்ன..
செய்வதெதற்கு..??

ஓடியெதெதற்கு...
ஓடியதெங்கே..
ஓடுவது யாருக்காக..
ஓடவைப்பது எது....
ஓடுவது வாழ்க்கையா..
வாழ்வது வாழ்க்கையா..??
சாதித்தது என்ன..??

பலருமிங்கே
பலனறியாமலே ஓட..
ஓட்டமே வாழ்வாய்..
ஓடியபடியே..!!

ஓட்டமும் நிறுத்தி
வாழ்வையறிவதெப்போது..??
வாழ்வதெப்போது...??

தொங்கிய நாக்கில்
சிந்தும் உமிழ்நீருடன்
ஓய்வெடுத்தபடி
உற்றுநோக்கும் நாயும்
வினவுகிறதோ நம்மிடம்..!!


துணை...


பலவீனப்படுத்தும்
கண்ணீர் துடைக்க
உன் கரங்களை நீட்டாதே..!!

சாய்ந்துகொள்ள...
தன்னம்பிக்கை கொடுக்கும்
உன் தோள்கொடு..

கரம் பிடித்து
வழிநடத்து....!!
துடைக்கப்படாத
கண்ணீர் முத்துக்களால்
வெற்றிப்பயணத்திற்கான
மலர்ப்பாதையமைக்கிறேன்
தோழமை உன் துணையுடன்....!!!