முகப்பு...

Friday, 7 September 2012

சற்றேனும் ஓய்வெடு....!!!



நாலாறு மணியும்
நெஞ்ச சிம்மாசனத்தில் நிரந்தரமாய்
அமர்ந்தவனே..
சற்றேனும் ஓய்வெடு...!!

பந்தியில் பாசம் பரிமாறி
காதல் நீரூற்றி
அமுதுபடைக்கிறேன்
பசி,தாகம் தணிக்க
சற்றேனும் ஓய்வெடு...!!!

மடியெனும் மஞ்சத்தில்
உன் கேசக்குழந்தையோடு
ஐயிரண்டு விரல்களால்
ஆடிப்பாடி..
காதல் கீதமிசைத்து
முந்தியை விசிறியாக்கி
முத்தத்தில் குளிர்வித்து
உறங்கவைக்கிறேன்
சற்றேனும் ஓய்வெடு...!!

உனக்கும் அழகுதான்..
பாரதிசொன்ன
நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்..!!

ஒளிவீசும் கண்களால்
காதல்வலைவீசி
எனை ஆயுட்கைதியாக்கி
மௌனிக்கச்செய்ய
சற்றேனும் ஓய்வெடு...!!

ஞானிக்கழகு மௌனம்..
ஞானத்தையாள்பவனுக்கு
மௌனமும் அழகாகுமா..??

நெஞ்சத்திலமர்ந்து
நினைவில் வருத்துபவனே..
அள்ளியணைத்து ஆரத்தழுவி
நிசத்தில் நாம்
அன்புக்கடலில் மூழ்கி
முத்தெடுக்க
சற்றேனும் ஓய்வெடு...!!


Thursday, 6 September 2012

எழுத்தும் எழுத்தாளனும்...



அன்புத்தோழமைகளுக்கு வணக்கம்..

நீண்ட நாட்களாக எமக்கு எழும் சந்தேகம் இது..படிக்கும் அனைவரும் விருப்பம் மட்டும் தெரிவிக்காமல் தவறாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து செல்லவும்..

         *********************

நம்மிடம் நம்மை அறியாமலேயே ஒரு குணம் உள்ளது. ஒரு எழுத்தாளனின் எழுத்தை அவன் வாழ்வியலோடு ஒப்பிட்டுப்பார்ப்பது.  இது சரியா..?? எழுத்து என்பது சிலநேரம் கற்பனை, சில கண்டது, கேட்டது ரசித்தது, மனத்தை பாதித்த நிகழ்வு, சில தன்னுள் எழும் உணர்வுகள், தனது விருப்பம்..இப்படி எவ்வளவோ அதில் அடங்கியிருக்கிறது. ஒருவனுக்கு மகிழ்ச்சியாகவும், ஒருவனுக்கு சோகமாகவும், ஒருவனுக்கு காதல் சொட்டும் வண்ணமும், ஒருவனது எழுத்தில் காமல் அதிகமாகவும் ஒருவனது படைப்பு இயற்கை எழிலை கண்முன் காட்டுபவைகளாகவும் சில எழுத்துக்கள் சமூக சாடல் சார்ந்ததாகவும், சில ஆன்மீகம்..இப்படி எண்ணிலடங்கா எழுத்துக்களை ஒவ்வொருவனும் தன் சிந்தனைக்கேற்ப கொடுக்கிறான். அது அவனது கற்பனா சக்திக்கேற்ப வெளிப்படுகிறதே தவிர அதுவே அவனில்லை.  கோபம், சோகம், காதல், காமம், துன்பம், பாதிப்பு, எதிர்பார்ப்பு, விருப்பு, வெறுப்பு, ஏக்கம்மகிழ்ச்சி, வஞ்சம் என எத்தனையோ உணர்வுகளை பிரதிபலிக்கிறான். எனினும் அவனது எழுத்துக்களை அவனாக கற்பனை செய்வது நம்முடைய இயல்பாகிறது.  மகிழ்ச்சியை அதிகம் கூறினால் மகிழ்வாக இருக்கிறார்கள் எனவும், சோகம் அதிகம் கூற சோகம் அவர்களை வாட்டுகிறது எனவும், காதல் கூற காதல்வசப்பட்டார்கள் எனவும், காமம் சார்ந்தெழுத காமுகனாகவும் சிந்திப்பது சரியா..?? கணவன், மனைவி, மாமியார் என குடும்பச்சூழலை சுட்டிக்காட்டியெழுதினால்  கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனரோ எனவும் சிந்தித்து எழுத்தாளனின் சிந்தனைச் சிறகுகள் அவன் விரும்பியோ, விரும்பாமலோ வெட்டப்படுகின்றன என்பது என் கருத்து..இதைப்பற்றிய மற்ற எழுத்தாளர்களும், விரும்பிப்படிக்கும் வாசகர்களும் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தங்களுடைய எண்ணங்களைப் பகிர ஒரு புரிதல் ஏற்பட்டு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே இந்தப்பதிவு..

அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிரவும்..நன்றி.


Wednesday, 5 September 2012

ஆசிரியர் தினம்...



எனக்கு அகரம் கற்பித்து முதல் ஆசானாய் விளங்கிய என் அன்னைக்கும், இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்தி இன்றுவரை ஆசானாய் விளங்கிவரும் தந்தைக்கும், பாசங்களைக் கற்றுக்கொடுத்த உடன்பிறப்புகளுக்கும், கல்வி மட்டுமன்றி பல கலைகளையும் கற்றுக்கொடுத்த பள்ளி ஆசிரியர்களுக்கும் {குறிப்பாக ஆசிரியை சாவித்திரி எங்களுக்கு  பூத்தொடுக்கவும், தலை பின்னுவதற்கும், சேமிக்கவும் வகுப்பில் சொல்லி கொடுத்தார்} தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி என கற்பித்த ஆசிரியர்களுக்கும், நட்பெனும் பாடத்தை நாளும் கற்பித்துவரும்  நண்பர்களுக்கும், வாழ்க்கைப்பாடத்தை வாரி வழங்கிவரும் உறவுகளுக்கும், இல்லறத்தை நல்லறமாய் கற்பிக்கும் இல்லத்தாருக்கும், எம்மை எழுதத்தூண்டிய உறவிற்கும், எமது எழுத்துக்களில் உள்ள குறைகளை மனம் வருந்தாமல் குறிப்பால் கோடிட்டுக்காண்பித்து எம் பிழைகளை திருத்தி ஆசானாய் விளங்கும் நட்புறவிற்கும், எமது எழுத்துக்களில் ஆங்காங்கே குறை கண்டிடினும் நிறைகளைக் குறிப்பிட்டு எமை ஊக்கப்படுத்தி ஆசானாய் விளங்கும் தோழமைகளுக்கும், குறைகளை நேரிடையாக எடுத்தியம்பி எம் எழுத்துக்களை நான் செம்மைப்படுத்திக்கொள்ள உதவியாக இருந்து ஆசானாய் விளங்கிவரும் தோழமைகளுக்கும் , கற்றுக்கொடுக்க வயது தடையில்லை என எம்மை விட வயதில் குறைவானாலும் எமது சந்தேகங்களை அவ்வப்பொழுது தீர்த்துவைக்கும் இணையத்து சகோதரர்களுக்கும் இப்படி என் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் வாழ்க்கையெனும் மரத்தில்  வெற்றிக்கனியைப் பறிக்க  ஏணிப்படிகளாய் இருந்து ஆசானாக விளங்கிவரும் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றியினையும், வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்..



Monday, 3 September 2012

கருகும் மொட்டுக்கள்...

கட்டுரை எழுதிப்பழக விரும்பியதால் இந்த முயற்சி. குறையிருப்பின் தோழமைகள் சுட்டிக்காட்டி, கட்டுரை நடைபற்றிய தங்களது பார்வையைப் பகிரவும். நன்றி..
                                  ***********************************************


தீவிரவாதம்: அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக நினைத்து,மக்கள் சக்திக்கு எதிராக செயல்படும் இவர்கள், தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கும் போராட்ட முறைகளின் அடிப்படையில் தீவிரவாதி,நக்சலைட்டு என அழைக்கப்படுகின்றனர்.

தீவிரவாதத்திற்கு நாடு,மதம்,இனம்,மொழி என எந்த வேறுபாடும் கிடையாது. அதற்கு தேவையானது பணம். பணத்திற்காக உயிர்ப்பலி மட்டுமே. பிறரின் உணர்வு, பந்தம் பாசம் என எதைப்பற்றிய கவலையுமின்றி எதையும் செய்யத் துணிந்தவர்கள்.

நக்சலைட்டுகள் நக்சலைட் என்பவர்கள் கம்யூனிசம் சார்ந்த ஒரு குழுவினர் சாரு மஜும்தார் மற்றும் காணு சன்யால் கம்யூனிஸ்ட் சேர்ந்தவர்கள் தொடங்கிய ஒரு குழுதான் அது என கூறப்படுகின்றது.அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் சார்ந்த பொதுவுடமை அமைப்பு என்று தன்னை கூறிக் கொண்டாலும்,ஊடகங்களால் தீவிரவாதிகள் என்றே அடையாளப் படுத்தப்படுகின்றனர். அரசை பொறுத்தவரை தங்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் அனைவரும் தீவிரவாதிகளே. இவர்கள் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினாலும் பொதுமக்களும் பாதிப்படையத்தான் செய்கின்றனர். அப்படியெனில் இவர்கள் செயல் தீவிரவாதம் அன்றி வேறு என்ன..??
பின்னனி: தீவிரவாதத்திற்கான அடிப்படைக்காரணம் வறுமை,போதிய கல்வியறிவு இல்லாமை, வேலையின்மை போன்றவைதான். தனது படிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாத கூட்டத்தினரால் மனம் கவரப்படுகிறான். சிலநேரம் அரசின் செயல்பாடுகளினாலோ,சமூகத்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் தன்னார்வத்தோடு இச்செயலை கையிலெடுக்கிறான்.
படித்து பட்டம் வென்று அறிஞனாக விளங்குவான் என்ற இவனின் பெற்றோர்களது கனவு பகல் கனவாகவே பலிக்காமல் போய்விடுகின்றது. பணம்படைத்தவன் தன் நிலை தாழாதிருக்கவும்,அரசியல்வாதி தன் பதவியினை நிலையாக தக்கவைத்துக் கொள்ளவும் பின்னும் சதிவலையில் சிக்கிக்கொள்வதென்னவோ தீவிரவாதியென முத்திரை பெற்ற இவன்தான். சிலநேரம் விதியும் இவன் வாழ்வில் விளையாடத்தான் செய்கிறது. தனக்கான அங்கீகாரம் நிராகரிக்கப்படுவதால்,விதிவசத்தால் இச்சதிக்கு ஆளாகிறான்.யாரோ எங்கோ உல்லாசமாக இருக்க எமனோடு போராடுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட இவன் இவனையறியாமலேயே இரையாகி விடுகிறான்.

கோடி,கோடியாக வருமானம் வந்தாலும் இவன் அவ்வப்பொழுது காட்டினிலும் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான். பலநேரம் அந்நிய நாட்டின் சதிக்கு ஆளாகி,விரும்பிய நேரத்தில் விரும்பிய வாழ்க்கை வாழமுடியாமல்,குடும்பம்,உறவு துறந்து இவன் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ளவும் செய்கிறான்.  விதியின் சதியால் தான் செய்த சதியில் இவனே சிக்கி அனாதைப்பிணமாய் எங்கோ மரணிக்கவா இப்பிறவி எடுத்தான்....??

இவன் செய்த சதியால் இவனது வாரிசுகளும் ஆயுதம் எடுப்பார்கள் அல்லது சதிக்கு ஆளானவர்களால் அழிக்கப்படுவார்கள் என்பதை அறியாதவனா..?அறிந்தும் அறியாதவனாய் இருக்கிறானே.....?

தன் கொள்கைக்காக தற்கொலைப்படையில் இணைந்து தன்னையே அழித்துக்கொள்ளவும் தயாராக இருக்கும் வலிமையான மனத்தை வாழ்வதற்காக பயன்படுத்தாமல் விரயமாக்குவது ஏன்..??

இவனது சதிச்செயலினால் வாரிசிழந்து வாடும் வயோதிகர்கள்,
கணவனையிழந்து நிர்க்கதியாய் நிற்கும் பெண்கள்,தாயிழந்து தவிக்கும் பால்மனம் மாறா பச்சிளங்குழந்தை.,தன் கோரிக்கைக்காக பணயக்கைதியாய் இவன் கொடுமைகளை அனுபவிக்கும் அரசு அதிகாரி என,பாரபட்சமின்றி பந்தபாசத்தின் ஆழம் அறியாமல் பலிவாங்கும் இவன் அகோர பசிகொண்ட அரக்கனோ....??

தீவிரவாத செயலினால் நம் உள்ளத்தை உருக்குலைத்து நம் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கும் சில சம்பவங்கள் இங்கே ...

1.1993 மார்ச் 12 அன்று மும்பையில் நடந்த தொடர் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஆகவும்,காயமடைந்தோர் எண்ணிக்கை 750ஆகவும் அமைந்தது..

2. 1998 பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு - கோயம்புத்தூரில் தீவிரவாதிகளால் பல்வேறு இடங்களில் பல்வேறு வாகன்ங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுமூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆகவும்,காயமடைந்தோரின் எண்ணிக்கை 200ஆகவும் அறிவிக்கப்பட்டது.

3. 2006 ஜூலை 11 அன்று மும்பை இரயில் மற்றும் இரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட 7 தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் உயிரிழந்ததாகவும்,714 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் குறிப்பிட்டன.

4. 2011 ஜூலை 13 மும்பை ஒபேரா ஹவுஸ்,சாவேரி பசார்,தாதரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பின் எண்ணிக்கை 26ஆகவும்,காயமடைந்தோரின் எண்ணிக்கை 130ஆகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5.2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நட்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் தோராயமாக 202உயிரிழப்பும்,காயமடைந்தவர்கள் 308மாக இருந்த்து..

6. 2012 ஆகஸ்ட் 1ம்தேதி,மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, பாலகந்தர்வ அரங்கத்தைச் சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இருந்தாலும், இந்த குண்டு வெடிப்புகளால், உயிர்சேதமோ, பெரிய அளவில் பாதிப்போ ல்லாவிட்டாலும் அச்சத்தையே விளைவிக்கிறது. (தினமலர் நாளிதழில் பதிவானது)


மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் பார்வையிடலாம். இங்கு கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரு சிறு எடுத்துக்காட்டே.. நக்சலைட்டு, தீவிரவாதியென பட்டம் பெற்று உலகத்தையே கலங்கடிக்கும் இவன்,இரயில் கவிழ்ப்பு, பேருந்தில் குண்டு,விமான கடத்தல்.,கட்டிடத் தகர்ப்பென விதவிதமாய் சதிசெய்து பலரின் உயிரை குடித்து பலரது வாழ்வு நாசமடையக் காரணமாகவும் விளங்கும் செயலினால் இவன் சாதித்ததுதான் என்ன...??
இப்படி தாய்ப்பால் குடித்த இவனுக்கு சகமனிதனின் குருதி சுவைக்கும்  எண்ணமும் வந்ததேனோ....??
வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
விதியென
சதிக்கு காரணம் கூறுபவன்......!!
மனிதனாகக் காரணம்
தேடாததேனோ........??
மலர்ந்து தன் தோட்டத்தில் மணம் வீசுவான் என்ற பெற்றோர்களின் கனவுமிங்கே இவனது சதிச்செயலினால்,மலராமலே கருகிய மொட்டுக்களும்தான் எத்துனை.எத்துனை...??
விதியின் விளையாட்டோ...??
வீணர்களின் சதியோ...
விழித்துக்கொள்வாய் வீரனே..!!
விழலாகி வீணாகிப்போகும் நின் வாழ்வை மணம் வீசி மலரச்செய்து மனிதம் காப்பாய் மானிடனே.......!!

எனது பொன்மொழிகள்..:)


அன்புக்குரியவர் மீது நாம் கொள்ளும் கோபம்கூட மயானபூமியில் கிட்டிய ஞானமாய் நீர்த்துப்போய் விடுகிறது விரைவில்
---காயத்ரி.
*******
நாம் செலுத்தும் அன்பை ஏற்கும் மனநிலையில் ஒருவர் இல்லாதபொழுது அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அவரின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது
---காயத்ரி
*******
ஒரு நேரம் மனதைப் புரிந்தவர்களாக விளங்குபவர்கள் கூட,
ஒரு நேரம் புதிராக காணப்படுவதுதான் மனிதனின் இயல்போ..??
---காயத்ரி
******
நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கத் தவறுகிறோமே ஏன்....!!?? 
--- காயத்ரி
******
ஒருவர் நம்மிடம் உண்மை பேசும்போதுதான் (அது கசந்தாலும், வலித்தாலும்) அவர் நமக்கு வகுத்த எல்லை என்ன என்பதையறியவும்,நாம் எந்த எல்லையில் இருந்துவருகிறோம், அந்த எல்லை சரிதானா என்ற சுய பரிசோதனை செய்துகொள்ளவும் உதவுகிறது.
---காயத்ரி.
******

Sunday, 2 September 2012

”தூரிகைச் சிதறல்....”: நாளைய நம்பிக்கை...!!!

”தூரிகைச் சிதறல்....”: நாளைய நம்பிக்கை...!!!

கவியில் கம்பனாய்..
குறியில் அர்ச்சுனனாய்..
சாதுர்யத்தில் சாணக்கியனாய்..
ஞானத்தில் சம்பந்தனாய்
தர்மம் காப்பதில் தர்மனாய்...
தூய்மையில் அன்னமாய்..

”தூரிகைச் சிதறல்....”: “தமிழ்க்குடில்”

”தூரிகைச் சிதறல்....”: “தமிழ்க்குடில்”