முகப்பு...

Monday, 10 October 2011

"நிழலாகிய நிசங்கள்"


அவளறியா வேளையில்,
அவளையடைந்து அவளுணர்ந்த காதலை,

அவனுக்குணர்த்த நாணமுற்று,
மனதினில் மறைத்து.,

அலைபேசி அழைக்கும்போதெல்லாம்,
அவனாக இருக்குமென,
அடிக்கொருதரம் பார்த்து ஏங்கும் மனம்..

அவனிடம் பேசுவதாக,
அவளுக்குள் இருக்கும் அவனிடம் அவளே பேசி,
சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டு...
அவளுக்குள்ளே வாழ்கிறாள்...

மனதினுள் மருகி இருதலைக்கொள்ளி எறும்பாய்.,
பரிதவித்த பெண்ணின் மனம் யாரறிவார்?

நெஞ்சில் உள்ளவன் நெறிஞ்சி முள்ளாய் உறுத்த,
நிமிடமும் நெருப்பாய் சுடுகிறது...
அவன் பாராமுகம் காட்டும்போது.

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்கிறது....
உள்ளிருக்கும் அவனை நினைக்கையில்.

அவனை எண்ணி,
அவள் உறங்கா நாட்களை,
அந்த நிலாத் தோழியும் கூறுவாளே..!

காதல் கொண்டவனை கட்டியணைக்க,
நீருக்கு ஏங்கும் நெற்பயிராக மனது.
மனதிற்கும், கலாச்சாரத்திற்கும் போராட்டம்.,
வென்றது அவள் கலாச்சாரம்...

கலாசாரத்தைக் காப்பாற்றிக்
கண்ணீரை தனதாக்கி,
அவளுக்குள் உதயமான காதல்
அவளுக்குள்ளேயே அஸ்தமனமும் ஆகிறது..

நிசமான காதலும் இங்கே
நிழலாகிக் கனவாகிறது....

Saturday, 1 October 2011

மருத்துவமனை....






ஆழ்மனத்தின் அமைதியை அமைதியாய்
அமர்ந்து மனம் தேடுகிறது..



மனம் விரும்பும் மனதை மனம் அருகில் 
கொணர நினைக்குமிடம்..

கண்ணுக்குத் தாயாய் காட்சியளிக்கும்
செவிலித்தாய்..

காக்கும் கடவுளாய்த் தோன்றும்
மருத்துவர்..

சொட்டு சொட்டாய் உயிர்த்தண்ணி
உணவாய்..

எமனின் பாசக்கயிறா? ஈசனின் காக்கும் கயிறா?
என அஞ்சத்தோன்றும் மருத்துவரின்
இதயத்துடிப்பு மானி ?! 

இறைவனை அடைவோமா இல்லை இல்லத்தை அடைவோமா??
வினவும் மனம்..

எம்மதமும் சம்மதம் என எண்ண வைக்கும் நேரம் அது.
அங்கே முகமறியாதவனின் குருதி தனக்கேறும் சமயம்..



சொர்க்கத்தையும், நரகத்தையும் 
ஒரு சேர பார்க்க நேருமிடம்..

மனதை  மனம் இனங்காணும் இடமிது..


அவன் பணம் காய்க்கும் மரமாய் விளங்குமிடம்
மருத்துவர்களுக்கு..

இங்கு தேவை பணமா? மனமா?
எழுகிறது வினா..

பணத்துடன் கூடிய மனம், மனதுடன் கூடிய பணம்..
இரண்டுமே தேவைப்படுமிடம்..

பணமட்டுமே வாழ்வில்லை என உணரவைக்கும் போதிமரம் அது
நோயாளிக்கு மட்டும்..!!!

Wednesday, 28 September 2011

"நிகழ்தகவு..."



என் விடியல் கூட உன்னை
எண்ணியே தொடங்குகிறது..

நித்தமும் உன்னை எண்ணி
விழித்தபடி உறங்கி...
உறங்கியபடி விழித்து... 

பசித்தும் உணவருந்தாமல்
தவித்தபடி நான்..

நாளெல்லாம் பேசினாலும்
பாலையில் விழுந்த நீராய் மனம்..

நெருப்பிலிட்ட புழுவாய் மனம்
உன்னுடன் பேசா நேரத்தில்...

உறக்கத்திலும் உன் பெயரை உச்சரிக்கும் மனம்..

உன் அன்பான 
குறுஞ்செய்திக்கு 
பகலவனைக் பார்த்த சூர்யகாந்தியாய்
மனம்.

என் சிந்தை முழுவதையும் 
ஆட்கொண்டிருக்கும் 
நீ..

கல்லுக்கும் உயிர்கொடுத்து 
உணர்வு கொடுக்கும் 
வித்தை அறிந்தவன்.. 

இந்தப் பெண்ணை மட்டும்
கட்டையாக எண்ணுவது ஏனோ?

உன் அறிவுச்சுடரில் 
என் கண்கள் மட்டுமல்ல...
என் மனமும் செயலிழந்து 
மௌனம் சாதிக்க..

நீயோ என்னை... 
மௌன ஞானியாக சித்தரிக்கின்றாய்..
பூகம்பத்தில் நடுங்கும் பூமியைப்போல்
என் தேகமும் நடுங்குகிறது.,
உன் குரல் கேட்ட பரவசத்தில்...

தொலைவில் உள்ள உன்னைகூட 
அருகில் அமர்த்திப் பார்க்கிறது மனம்..

இப்படி...
யாதுமாய் என்னை வியாபித்திருக்கும்..
உன்னை அனுதினமும் பிரியாதிருக்க
மனம் விரும்பினாலும்...,
புத்தி எச்சரிக்கிறது.

புத்திக்கும், மனத்திற்கும் 
நடக்கும் போராட்டத்தில் 
பல நேரம் மனம் வெல்கிறது..
சிலநேரம் புத்தி வெல்கிறது..

புத்தியும் மனமும்... 
மாறி மாறி வென்று கொண்டு.,
என்னைக் கொல்லாமல் கொல்கிறது 
உன் நினைவு..

இப்படி கனவுலகில் வாழ்ந்து., 
நான் அருந்த நினைப்பது கானல் நீரோ??

கனவுலகில் வாழ்ந்து,
கானல் நீரைப்பருகி
தாகம் தீர்க்க நினைக்கிறேனோ நான்?


Monday, 12 September 2011

வெட்டியான்



இடுகாட்டில் பிணத்தை எரிக்கும்
வெட்டியான்.,
நிறைவேறா ஆசையுடனும், வேகாத நெஞ்சுடனும்
எரிந்தும், எரியாமலும்
மேலெழும்பும் சவத்தை,
தடியால் தட்டி எரிக்கும் காட்சி..,

வாழும்போது வாங்கிய அடி போதாதென.,
இறந்தபின்னும் எவனோ ஒருவன்
நம்மை அடிக்க..இறந்தும் அடிவாங்கும்
ஈனப்பிறவியா நம்முடையது???

நித்தமும் பிணத்தை எரித்து,
இறப்பிற்கு பிறகு,
எதையும் எடுத்துச்செல்ல முடியாது
என்ற வாழ்க்கை சூட்சுமத்தை உணர்ந்தும்.,

தன் வாழ்ககைக்காக..
அடுத்தவன்
மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்
வெட்டியான்!!!!!    
இதுதான் வாழ்க்கையா??


Saturday, 27 August 2011

திருமணம்.....


இருமனம் இணையுமாம்..
திருமணத்தில் கூறுகிறார்கள்.

திருமண பந்தத்தில்...
ஆண்
தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக்
கூறினால்  அது "விருப்பம்"
அதுவே,
பெண் கூறினால் "வாயாடி"

ஆண்
தன் உடையலங்காரம் மாற்றிக்கொண்டால்
"நாகரீகம்"
பெண் மாற்றிக்கொண்டால்
"அடக்கமின்மை"

ஆண்

தன் புகுந்த வீட்டில் ஒட்டாமல் விலகி இருந்தால்
"கூச்ச சுபாவம்"
பெண் விலகி இருந்தால்
"குடும்பத்தில் ஒட்டாதவள்" 

தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால்
பெண்ணுக்கு கிடைக்கும் பட்டம் "மலடி"

இருமனம் பிரிந்து தனி மனமானால்
பெண்ணுக்கு கிடைப்பது "வாழாவெட்டி"
என்ற பெயர்.

ஆணுக்கு முன்னால்
பெண் இறந்து விட்டால்
பெண்ணுக்கு கிடைக்கும் பரிசு "சுமங்கலி"

பெண்ணுக்கு முன்னால்

ஆண் இறந்து விட்டால்
அங்கேயும்
பெண்ணுக்குத்தான் பரிசு..."கைம்பெண்"

ஆரண்யத்தில் ராமனும்தானே தனித்திருந்தான்?
சீதை அசோகவனத்தில் இருக்கும்போது...
”அக்னிபரீட்சை” என்னவோ  சீதைக்கு மட்டும்.

சூதாடியதென்னவோ தருமர்தான்,

”அவமானமும் தண்டனையும்” திரௌபதிக்கு.

இப்படி இருமனம் இணையும்,
திருமண வாழ்வில்,
அனைத்து
"பரிசை"யும் பெண்ணுக்கே வழங்கி 

மகிழ்வித்துப் பார்க்கும்
விந்தையானது நம் சமூகம் !!!!!!!!

   

Wednesday, 17 August 2011

மகனுக்கு இரங்கல்.....



மகனே,
கருவில் பத்து மாதம்
இருக்க வேண்டிய நீ,
எட்டு மாதத்தில் எட்டிப்பார்த்தது....
எமனிடம் செல்வதற்குதானா ??


உன் இறப்பைக்கூட அறியாமல்,
இறுமாப்புடன் இருந்த என்னை...
பெற்றெடுத்த உனக்குப்
பால் புகட்ட முடியாத பாவியாக்கிச் சென்றாயே!

குதூகலமாய் உன்னுடன்
தாய்வீடு செல்லவேண்டிய என்னைத் ,
தனியாக செல்லவிட்டாயே!!

என் தவிப்பரியாதவர்கள்,
உன்னைப்பற்றி துக்கம் விசாரிக்க,
விவரமறியாத...
என்னை விழி பிதுங்க வைத்தாயே!



உன் பிறந்ததினத்தைக் கொண்டாட வேண்டியவளிடம்
உன் பிணத்தையல்லவா கொடுத்து
உன் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கச் சொன்னார்கள்..

உன் சவத்தைக் கண்டு,
கண்ணீர் விடக்கூடத் தோன்றாமல்
சித்தம் கலங்கி சிலையாய்  நின்றேனே!!



நீ
விளையாடி மகிழவேண்டிய,
உன் பாட்டன் வீட்டிலேயே,
உன்னை மண்போட்டு புதைத்தார்களே!

சடங்கு முடித்து,
சந்தோசத்தை இழந்து...
செய்வதறியாது சித்தம்
கலங்க வைத்தாயே!!!

யார் அழுதாலும்,
நீ
அழுவதாய் உணர்ந்து
பாலூட்ட நினைத்து, வீங்கிய மார்பில்..
வீணாகிப் போகும் பாலை
வீசி எரிந்து பாவம் செய்து,

விடியும் வரை விழித்திருந்து...
விழி சிந்திய கண்ணீரை யாரறிவார்?


பிள்ளையில்லாத் தொட்டிலை ஆட்டி
பாழும் அறைக் காத்தப் பாவியானேன்!!

கணவனிடம் கனிவை எதிர்பார்த்துச்
சென்ற என்னைக் கடிந்து,
பிள்ளையின் இறப்புக்குப் பெற்றவளே
காரணம் என்றவனிடம்.,


சொல்வதறியாது..
துக்கங்களை விழுங்கி,
உள்ளத்தை உரமாக்கி,
முகத்தில்  புன்னகைப் பூட்டி...
இன்று வரை நடித்து வருகிறேன்.,
அரிதாரம் பூசாமல்.,

நீ 
காணாத உன் உடன்பிறப்பிற்காக...
















வண்ணமயில்...


ஓவியனுக்கே,
ஓவியம்
கற்றுக்கொடுத்த
வண்ணமயிலே!!!

உன்னைக்கண்டுதான் 
ஓவியனே
வண்ணம் கலப்பதைக்
கற்றானோ?

அந்தப் பிரம்மனே 
போற்றும்
பேரழகு உனக்கு!

நீ 
நடனமிடும் 
அழகைக்கான,
அந்த நடராசனும்
நாட்டம் கொள்வானே!

உன்  அழகுக்கு முன்னால் 
அந்த 
ரதியும் தோற்றுப்போவாளே!  

உன் மயக்கும் 
அழகினால்,
உன் குரலைக் கூட 
மறக்க வைத்து 
எங்களை மயக்கி விட்டாயே!

அந்த 
மாயக்கண்ணன் முடிமேல்,
ஒய்யாரமாய் 
அமர்ந்து
காட்சி கொடுக்கும்.,
நீயும்,
மாயாவிதான்...