முகப்பு...

Monday, 21 July 2014

#அறிந்தும் அறியாததும்..

யாரோ ஒருவரின் 
பொறுப்பற்ற செயலால் உண்டாகும் 
வீண் அலைச்சல், 
விரயமாகும் நேரம்..
வெட்டி செலவுகளுக்கு
நேரம் சரியில்லையென
தன் நேரத்தின்மீது பழிபோட்டு
அமைதிகொள்ளும் மனம்...
****
ஆயிரமாயிரம் பாடத்தையும், 
அனுபவத்தையும் 
அன்றாடம் காலம் கற்பித்தாலும்..

கற்பிக்கப்பட்டதை விடுத்து, 
மாயக்கண்ணாடியணிந்து 
விரும்பிய பக்கத்தையே படிக்கிறோம் 
வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து..
****
உண்மைகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக நேரத்திற்கு விற்கப்படுமிடமாய் தொல்லைக்காட்சிகள்.
****
விரும்பியவைகளும், 
விரும்பியவர்களும் 
விலகிநின்று வேடிக்கை பார்க்கத்துவங்கும்போது,
விலகிநிற்கும் காலனை 
விரும்பியழைக்கும் மனம்...!
****

Friday, 18 July 2014

மழலையர் உலகம்..


மழலைகள் தேவதைகள்தாம்
மறுக்கவில்லை..
அவர்கள் வாழும் உலகம்
தேவதைகளால் மட்டும் ஆனதல்ல..!
தேள்களும், தேனீக்களும்
மனிதநேயம் கொண்டவர்களும்,
மனநோயாளிகளும் கலந்துவாழும்
உலகமென்பதை மறக்கவேண்டாம்...!
நேர்மறையென்னும் 

கவிதை கூறியே
கற்பனையில் வளர்க்காது
எதிர்மறையும் இருக்குமென்ற
யதார்த்தம் கூறியே..
தேவதைகள் சாத்தான்களை
எதிர்கொள்ளும் மன சக்தியை
கொடுத்தே இயல்பாய் வளர்ப்போம்..!!

Tuesday, 1 July 2014

காதல் கிறுக்கல்...

தன்னையும், என்னையும் 
எண்ண நேரமில்லா நீயும்..
உன்னையே எண்ணும் நானும்...
வார்த்தை தவிர்த்து..
மௌனத்தில் மனம் பகிர்ந்து...
கண்களில் காதல்பேசி..
நாலாறுமணியும் நகராதமர்ந்து...
இருமனம் ஒன்றாகிக் கனியும்
காலத்தை எதிர்நோக்கியேக்
காத்திருக்கும் காதல்..!! 


*********
அறிவுச்சிறையிலிட்டாலும்
மனக்கதவை உடைத்து
வார்த்தைக்கு
முற்றுப்புள்ளிவைத்து
சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது
கண்ணீர்முத்துக்கள்...!! 

*******