முகப்பு...

Thursday, 26 December 2013

இயற்கை...

தம்முடைய நோய்க்கு, ஒரு தாவரத்தினைக் கண்டறிந்து சாப்பிட்டு   தானே மருத்துவம் பார்த்து தன் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளும் நாய்களின் புத்தி கூர்மை.
****
கண்முன்னே வளர்ந்து ஒய்யாரமாய் பூத்துக்குலுங்கும் தொட்டிச்செடியைக் காண்கையில், கொங்கைசுவைத்தக் குழந்தையும் குதித்து விளையாடுவதைக் கண்டு ரசிக்கும் தாயின் மனதாய் பூரிக்கிறது உள்ளம்..
****
அன்னியரைக் கண்டு அஞ்சும் குழந்தை, தன் அன்னையை இறுக அணைத்துக் கொள்வதுபோல்..
கிடைத்தவிடத்தைப் பற்றிக்கொண்டு தன்னைப் படரச்செய்யும் கொடிகள்.
****
யாரும் வலியுறுத்தாமலே
உணவிருக்கும் இடத்தையறிந்து

அணிவகுத்து முற்றுகையிடும்
எறும்புகள்...!!
****
அரைத்துவழித்து 
பச்சைநிற விழுதை

அழகாய் கரங்களில் 
ஓவியமாய் வரைய 

நிறம் மாறி 
நமையெல்லாம் 
மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மருதாணி.. !
****

Wednesday, 25 December 2013

கவிச்சிற்பி..!!


நின் கரம் தழுவும்
எழுத்தாணி
கலைமகளின்
வீணையாய் காட்சியளிக்க..!

நின் கவிதைக்கு
கலைமகளும்
தன் வீணையிசைக்கத்
தமிழ்மகளும்
தலையசைக்கிறாள்..!

எழுத்தாணியை உளியாக்கி
சிந்தனையை கவிதையாக்கி
சிற்பம் வடிக்கும்
கவிச்சிற்பியே...!

சிந்தனை தோட்டத்தில்
க ’விதை’ விதைத்து
மகிழ்ப் ”பூ”வை மலரச்செய்து..

நின் சிந்தையில் ஊறும்
கவியமுதைப் பருகிப் பசியாறி
மனமகிழ்ந்து...
மனமுவந்து
தமிழுக்கு..
தமிழன்னை வழங்கிட்ட
தமிழையுமே
தமிழ்..
வற்றாது வழங்கிட
நின்புகழ் வானுயரப் பரவிட
நானும் வாழ்த்துகிறேன் ...!

கவிச்சிற்பியின் பிறந்தநாளில்
உனை கவிதையில் வாழ்த்திடும் முயற்சி
சிற்பி வடித்த சிலைக்குமுன்
சிதறிக்கிடக்கும் சிறு துகள்களாய்....
சிந்தையில் தோன்றிய
எம் எழுத்துக்கள் சிதறி...
நின்
கவிதைக்குமுன்
முற்றுபெறாத கவிதையாய்
முடிவுறாமலே திகழ்கிறது...!! 

Tuesday, 24 December 2013

கோலம்..!!

மனதை 
மகிழ்ச்சியில் ஆழ்த்தி 
ஒருநிலை தியானத்தில் 
மூழ்க வைக்கவும்...
சிந்தனையைத் தூண்டச்செய்தும்
தேகப்பயிற்சியாகவும்,
மனப்பயிற்சியாகவும்
மகளிர்க்கு கைகொடுத்தும்..
தன் தனித்திறமையை 
வளர்த்துக்கொள்ள உதவும் 
ஆசானாகவும் விளங்கி..

பார்வையாளரையும்
பரவசப்படுத்தும் அரிய கலை 
கோலம்.. !

துள்ளித்திரியும் மானையும்
வண்ண மயிலையும், 
சுட்டெரிக்கும் சூரியனையும்
வண்ணத்தில் கட்டிப்போட்டு,
குதித்தோடும் அழகு முயலையும்
காய்த்துத்தொங்கும் பாகற்காய்
பூத்துக்குலுங்கும் வண்ணமலரென 
பேதங்களின்றி
ஓரிடத்தே
அறிமுகப்படுத்தும் 
திறமையிந்தக்கோலம்..!

பாவையர்களின் விரல்கள்
அரங்கேற்றும் 
அழகிய நடனத்தில் தோன்றிய
அற்புதக் கோலங்கள்
ஐயாறு தினங்களும்
அலங்கரிக்கிறது தெருக்களை...!!

Sunday, 22 December 2013

நிசப்த ஊஞ்சல்..!!

சுட்டெரிக்கும் கதிரவனும் 
உனைத்தீண்டத் துடிக்க...
உன்மேனி தழுவமுடியா வருத்தத்தில் 
வருணனோ பின்னடைய..
உன் முகத்தின் பொலிவில்
நிலவும் நாண...

நீ 
என் கரம் கோர்த்து 
நடக்கும் வீதிகள் 
நம் வரவுக்காய் காத்திருக்க...

வருணனுக்காய் 
வரமிருக்கிறது மரங்கள்...
நாமிருவரும் ஒதுங்குவதில்
தான் புனிதமடையவே...!

நீ 
தரணிக்கு வந்தது
அவள் தவமென
கலைமகளும் பெருமைகொள்ள...!

நினைச்சுமந்தவளும்
நின்னறிவில்
நித்தமும் மகிழ்ந்திருக்க...

நின் கண்வீசும்
காதல் பார்வையில்
என் கண்மலர்கள் 
கிறங்கித்தவிக்க...

சிதறிக்கிடக்கும் தானியத்தை 
சுவைக்கும் பறவைகளாய் 
உனைத்தீண்ட 
புறத்தே
இயற்கையோடு அனைவரும்
காத்திருக்க...!

நீயோ
விளைந்த நெற்கதிராய்
செறுக்கற்று...
எவரும் வரவியலா
என்னகத்தே
மனமென்னும்
நிசப்த ஊஞ்சலில் நிரந்தரமாய்
ஆடிக்கொண்டிருக்கிறாய்
புன்னகையணிந்தே...!!

Saturday, 21 December 2013

உணர்வுடன் ஈன்றெடுத்த உயிர்..!!

குழந்தைப்பேறு...!! இந்த வார்த்தைக்குதான் எத்தனை சக்தி நம்மிடையே.   திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இந்த நாளை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. நினைத்துப்பார்க்கும்போதே நம்மை பரவசப்படுத்தும் ஒரு உணர்வு பிள்ளைப்பேறும், தாய்மையும்.  பெண்மையின் பெருமையை பெண்மைக்கே உணர்த்தும் விசயம் இந்தக் குழந்தைப்பேறு. 

வெளியில் இருந்து பார்க்கும்பொழுது, அவங்களுக்கு கர்ப்பப்பை இருக்கு. பெத்துக்கறாங்க  இதில் பெரிசா என்ன இருக்கு..? என சற்றே அலட்சியமாக பேசக்கூட வைக்கும் சிலரை. 

உணர்வு ரீதியான விசயத்தை நாம் எதாலும் நிரூபிக்க முடியாது. உணரப்படவேண்டிதை நிரூபித்தும் சாதிக்கப்போவது எதுவுமில்லை.  ஒரு மகனைப் பெற்றத் தாயாலேயே, தன் வாரிசை ஈன்றெடுக்கப்போகும் ஒரு மருமகளை உணரமுடியாத ஒரு விசயத்தை ஒரு கணவராக, சகோதரனாக, மைத்துனராக, நண்பனாக உணர முடியுமா..?

திருமணம் ஆன சிலநாட்களிலேயே புதுப்பெண்ணின் மனம் அறியாமலே, என்ன ஏதேனும் நல்ல செய்தி உண்டா எனும் கேள்வி அவளை நாணச்செய்யும். அவளுக்குள்ளும் உடனே குழந்தைப்பேற்றை அடையவேண்டும் என்ற ஆசை இருந்து அது நிறைவேறாத நேரத்தில் இந்தக்கேள்வி அவளை வருத்தமடையச்செய்யும்.  சிலநாட்கள் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட பிறகு நிதானமாக குழந்தைப்பேற்றை அடையலாம் என்றிருப்போருக்கு இந்தக்கேள்வி எரிச்சலையும், வெறுப்பையும் அளிக்கும். எங்குமே கேள்விகள் கேட்பது சுலபம்தான். ஆனால், அப்படி இடம்பொருள் அறியாது கேட்கப்படும் கேள்விகள் எதிராளியை எத்துனை துன்பத்தில் ஆழ்த்தும் என்பதை உணரத்தவறுகிறோம்.

நாம் அறிந்தது எல்லாம், பெண் பிள்ளைகளுக்கென தனித்த உணர்வுகள் ,எதிர்பார்ப்புகள், திறமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆசைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட வயது வந்துவிட்டால்.. பெண் பருவமடைந்துவிட்டாளா என்ற கேள்விகள் கேட்கப்படவேண்டும். பருவமடைந்து குறிப்பிட்ட வருடங்களில் திருமணத்திற்கு வரன் வந்ததா என்றும்,  திருமணம் ஆனவுடன் குழந்தையில்லையா என்றும் இப்படி ஏதேனும் கேள்விகளைக் கொண்டே, அவளை அவளே உணரமுடியாதவாறு செய்துவிடுகிறோம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெண்மையின் சிறப்பை முதலில் அவள் உணர வாய்ப்பு அளிக்கப்படவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

குழந்தைப்பேறு என்பது மனதிற்கு உலகத்தில் எதனாலும் ஈடுசெய்யமுடியாத ஒரு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வு.  அதை அனுபவிக்கத் தவறுகிறார்கள் பெண்கள். காரணம், இதுபோன்ற நிர்பந்தமான சூழலில் குழந்தை பெற்றுக்கொள்வதால் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.  

குழந்தையை என் குழந்தை என உணர்ந்து ஒவ்வொரு நொடியும் உள் நிகழ்வை ரசித்துப் பேறுகாலத்தில்கூட அதன் வரவை எதிர்பார்த்து, மகிழ்ந்து உற்றவர்கள் உடன் இருக்க அன்புக்கரங்கள் கண்ணம் வருட இதமான சூழலில் குழந்தைப்பேறு நிகழ்ந்திடின் புது உலகில் உணர்வு பூர்வமான உணர்வை மட்டும் கண்டு வருகை தரும் குழந்தை நிச்சயம் உணர்வை மதித்து அன்பை உணரத் தவறாது.

ஆனால் நாமோ, கருத்தரித்த நாள் முதலே பெயர் சொல்ல ஆண்வாரிசு வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும், எங்க வம்சத்தில் முதல் பிள்ளை ஆண் என்ற கூற்றைக்கூறி, அவளை சுமக்கும் காலத்தில் இருந்தே பிறக்கும் பிள்ளை ஆணாகப்பிறக்க வேண்டுமே என்ற கவலையையும் சேர்த்தே சுமக்கத்தூண்டுகிறோம்.  அதோடு பிறக்கும்போதே முதல் ஆண்பிள்ளையானா கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவான் என்று நம்மையறியாமலே ஒரு எதிர்பார்ப்பை விதைத்து விருட்சமாக்கி வருகிறோம்.  விளைவு, எதிர்காலத்தில் குழந்தையை நம் எதிர்பார்ப்பு விருட்சத்தில் காய்க்கப்போகும் பணமெனும் கனிக்காக தயார்படுத்தி பழக்கப்படுத்தத் துவங்குகிறோம்.  அதுவும் கனியை குறிவைத்தேப் பயணிக்க, கனி அதிகம் விளைச்சல் கொடுக்குமிடத்தை நோக்கி ஓடவே..பிறகென்ன இருக்கவே இருக்கிறாள் குற்றங்களை சுமப்பதற்கென்றே பெண் எனும் பிறவி. அவ வந்தா..பிள்ளை அம்மா, அப்பாவை கவனிக்கலனு அவளை சொல்லலாமே. பாசத்தைவிட பணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை வயிற்றில் இருக்கும் போதே விதைக்கத் துவங்குகிறோம்.

ஒரு பெண் கரு சுமக்கும் காலத்தில் அனுபவித்து, பேறுகாலத்தில் வலி உணர்ந்து ஒவ்வொரு நொடியும் அந்த வலியை இன்பமாக அனுபவித்துப் பெற்று உடனே அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிடும்போது அவளுக்கு அந்த நொடி வாழ்நாளில் கண்டிருக்கமுடியாத மகிழ்ச்சியாக இருக்கும்.  வலியோடு பெற்றவள் வலியை வழியனுப்பி மகிழ்ச்சிக்கு வரவேற்பளிக்க அக்குழந்தையும் பாசத்தை உணர்ந்து உணர்வோடு உறவாடத்துவங்கும்.  

நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் மனைவியிடம் சற்றே கூடுதல் அணுசரனையாக இருந்திடின், பிள்ளை மனைவியின் பின்னால் சென்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை ஆண் சந்திக்கிறான். ஒரு பக்கம் இப்படி எனில், ஒருபக்கம் அந்தகாலத்துல நாங்க எல்லாம் பெத்துக்கலியா என்று ஒரு அலட்சியப் பேச்சைப்பேசும் மூத்த பெண்கள், எங்க அம்மா பெத்துக்கலியா நீ மட்டுமா அதிசயமா பிள்ளை பெற்றுக்கொள்ளப்போற என்ற கணவனின் பேச்சு,  குழந்தைப் பேற்றுக்கான காலத்தில் அதைப்பற்றி அறியாத நிலையில் சொல்லமுடியா உணர்வில்  ஒருவித பயம், என்ன குழந்தை பிறக்குமோ என்ன சொல்வார்களோ என்ற அச்சம், மேலும் குழந்தை கொடி சுற்றிப்பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்ற பிறந்த வீட்டாரின் மூடநம்பிக்கை அனைத்துமாக அவளை கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் உருக்குலைய வைத்து பலமிழக்க வைக்கிறது.  

மனம் பலமிழந்து இருக்க உடல் எப்படி ஒத்துழைக்கும்..? அந்த வலியை அனுபவிக்காது பிரசவம் என்பதை ஒரு போராட்டம் போல் கருதி, கத்தி.. குழந்தைப் பிறந்தவுடனே அள்ளியெடுத்து, உள்ளிருந்த குழந்தையிடம் உணர்வுகள் மூலம் உரையாடி தன் உறுப்பினால் உணவளித்தவள், தன் கருப்பையின் ஈரம் படிந்த குழந்தையை அணைக்கக்கூடத் தெம்பில்லாது மயங்கிவிடுகிறாள். 

செவிலித்தாய் குழந்தையை தூய்மை செய்து, உறவினர் கைகளுக்குப் போய் பிறகே, இவள் பார்க்க நேரிடுகிறது பல இடங்களில்.  கண் திறந்தவுடன்  அவள் கேட்பது என்ன குழந்தை..? காரணம் அவள் அப்படித்தானே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள்...??!

வெளிநாட்டவர்களின் பிரசவத்தில் ஒரு சில விசயங்கள் புரிகின்றன. எனக்குப்பிறகு என் பெயர் சொல்ல ஒரு ஆண் வாரிசு, என்னை கடைசிகாலத்தில் காப்பாற்றுவதற்கு ஒரு வாரிசு என எதிர்பார்ப்புகளை அவள் நெஞ்சத்துள் விதைத்து , குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவோ சமூகத்தில் என்ன சொல்வார்களோ என்ற அவசரத்திற்கோ பிள்ளை பெறாமல் அவர்களுக்கென ”அவள் பெற்ற பிள்ளையாக இல்லாது அவள் பிள்ளையாய் ” உணர்ந்து, அனுபவிக்கிறாள். பிரசவ நேரத்தில் கணவன் உடன் இருந்து, அவளை அன்புடன் உற்று நோக்கி அவளுக்கு நானிருக்கிறேன் என்று இருக்கும் காட்சிகளும்,  உடையப்படும் பனிக்குடம் தன் மகிழ்ச்சி மழைக்கு முன் விழும் தூறலாய் உணர்ந்து,குழந்தையை வெளித்தள்ளும் முக்கலைக்கூட கத்தாது மெல்லிசையாய் வெளிப்படுத்தும் விதம், பிரசவ வலியைக்கூட புன்னைகையேந்தி வரவேற்று ஒவ்வொரு நொடியும் அனுபவித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள். தொப்புள்கொடிகூட துண்டிக்கப்படாத குழந்தையை,தன் கருப்பையின் ஈரத்தோடு எடுத்து அணைத்து, முதல் சீம்பால் அளித்தவுடன், மார்பகத்தை அடையாளம் காண பயிற்சியெடுத்ததுபோல் கண்ணைக்கூட திறவாது, தன் அன்னையிடத்தே பால் குடிக்கும் குழந்தையின் வாய் பட்டவுடன் பூரிப்படையும் அவள் தன் மார்போடு அனைத்து இவ்வுலகிற்கு வரவேற்பு சொல்வது,   நிச்சயம் அவர்களின் பிள்ளைப்பேற்றின்மீது  ஒரு மதிப்பையே அளிக்கிறது. 

இங்கு இதைப்பகிரும் நோக்கம் நம் பெண்கள் உணர்வுடன் பெற்றுக்கொள்ளவில்லை எனக்கூறவில்லை.  தவறானப் புரிதல் வேண்டாம். பிரசவத்தை கிரஹித்துக்கொள்ளும் திராணியற்றவளாய் வலம் வருகிறாள். அவளை உணரவிடாது உறவும், சமூகமும் அவள் மனதை ஆளுமை படுத்தி ஒரு வட்டத்தில் நிற்கப் பழக்கிவிட்டது.   சற்றே வட்டத்தை பெரிதுபடுத்துவோம். எத்தனை குழந்தைகள் பெற்றிருக்கிறோம், எங்களுக்கு இல்லாத அனுபவமா..? என்று கேட்பதை நிறுத்தி எப்படிப்பெற்றோம் என்பதை யோசிப்போம். பெண்களின் சக்தியை இழக்கச்செய்யாது பலப்படுத்துவோம்.  

உயிரை உணர்வுடன் ஈன்றெடுக்க அப்பெண்ணிற்கு உறுதுணையாய் இருப்போம்.. உணர்ந்து நடப்போம்..!!
*****

Wednesday, 18 December 2013

தமிழ்க்குடில் - பொங்கல்விழா போட்டிகள்


அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம்.

நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.

 நடத்தபடும் விளையாட்டு போட்டிகள்: 

1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்

2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்

3. அறிவுசார்ந்த விளையாட்டுகள்

4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள்.

இது போன்ற தலைப்புகளில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பிரித்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்து, பிறகு போட்டி நடத்தி பரிசும், சான்றிதழும் வழங்கி சிறப்பித்தல் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து உதவுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

Monday, 16 December 2013

எண்ணச்சிதறல்...


பொம்மையடுக்கி
விளையாடும் குழந்தைபோல்
எண்ணத்தை எழுத்தாய்
அடுக்குகிறேன்...!

குழந்தைகட்டிய வீட்டை
குதூகலத்துடன் கண்டு இரசிக்கும்
பெற்றோராய்...
எழுத்தால் நானெழுப்பிய இல்லத்திற்கு
கவிதையெனப் பெயர்சூட்டி
அன்பால் அள்ளியெடுத்து
மகி(ழும்)ழ்விக்கும் நட்புகள்...!!
*******************
தீர்ப்பு...!!!
எழுதப்பட்ட தீர்ப்பிற்கு 
வாதிடும் வழக்கறிஞர்களாய் 
பணமே வாழ்வென
தீர்ப்பெழுதி;
வாதிட்டு;
தண்டனையேற்கும்(வாழும்)
மானுடம்...!!



Saturday, 14 December 2013

நெல்லிக்கனி...

பச்சைவண்ணத்தில்
பளபளக்கும் மேனியோடு
என் வீட்டு
நெல்லிக்கனியும்
இன்முகத்துடன் எனை நோக்க..

எடுத்துக்கழுவி..
எண்ணெயில் வதக்க
புண்ணாகி சுருண்ட கனிக்கு
மருந்திடாது
மிளகாயும், உப்புமிடித்து
அதன் மேனியில் சேர்த்து வதக்கியும்...

துண்டு துண்டாய் அதன் மேனி
கீறி கதிரவன் கண்ணெதிரே போட
காய்ந்து தன் நீர் வற்றியும்...

நெல்லிக்கனியுடன்
நீர்விட்டு மின்னரவையில்
இஞ்சி,வெல்லம் சேர்த்தரைத்து
அதன் குருதி சுவைத்தும்...

அரைத்து நெய் சேர்த்து
சீனிப்பாகிலிட்டு கிளறியும்..

எத்தனையெத்தனை
கொடுமைகள் செய்திடினும்
இயல்பு மாறாது சுவையளித்து
உடலுக்குப் புத்துணர்வூட்டும்
நெல்லிக்கனியை
அதிசமாய் நானும் வினவ..

சந்தர்ப்பத்திற்கேற்ப
எனை மாற்ற நானென்ன
மானிடனா - என்றுரைக்கும்
கனிக்கு கனிந்த புன்னகைத் தவிர
கடுஞ்சொற்கள் எதுவுமில்லை
என்னிடத்தே...!!

Thursday, 12 December 2013

அறிந்தும் அறியாமலும்....

பிறர் நம்மை ஏமாற்றுவதைவிட 
பலநேரம் நம்மை நாமே 
ஏமாற்றிக்கொள்வதுதான் அதிகம்...:)
*****
தேடாமல் செலுத்தப்படும் அன்பு அலட்சியத்திற்கும் ஆளாகலாம் சிலநேரம்...
*****
​ஒரு அனுதாபப்பார்வையோ ஒரு அலட்சியப்பார்வையோ 
மட்டும் விடுத்து தோள்கொடுக்காது நகர்ந்து செல்வோரிடத்தில் உணர்வுகள் பகிரப்படுவதைவிட பகிராமல் உணர்வுகளை உள்விழுங்கி உரமாக்குவது சிறந்தது.
*****
உறவு பொம்மலாட்டத்தில் நட்பையும், உறவையும் எதிரணியில் நிறுத்தும் நூலை பதவி,புகழ், தகுதி மற்றும் தன்முனைப்பு தம் கரங்களில் வைத்து இயக்குகின்றன. 
*****

Wednesday, 4 December 2013

எண்ணச்சிதறல்..

ஒவ்வொரு புறக்கணிப்பிலும் ஒரு பாடம் கற்பிக்கப் படுகிறது.
பாடத்தைப் படிக்கத்தவறியும், படிக்க விரும்பாமலும், படிக்க மறுத்தும், படித்தும் படிக்காததுமாயும் புறக்கணிப்புகள் வாழ்வில் தொடர்ந்து அனுமதிக்கப் படுகின்றன விரும்பியோ விரும்பாமலோ....!
****
பகிரப்படாத உணர்வுகளின்
கண்ணீர் முத்துக்கள்
விரயமாகாது
மனப்பெட்டகத்திற்கு
பலம் சேர்க்கிறது...!!
****
அலட்சியத்தை
அலட்சியப்படுத்த..
அலட்சியப்படுத்தப்படும்
அலட்சியமே மற்றொரு
அலட்சியத்திற்கு 
அடித்தளம் அமைக்கிறது..!!
****
நீயமைத்துக்கொடுத்த பாதையில் 
உன் 
காலடித்தடம் நான் தொடர..

புதியபாதை உருவாக்கு

எனக்கூறியே 

காணாமல் போகிறாய்....!!

****

Monday, 2 December 2013

என் சுவாசமாய்....!

என் 
சுவாசத்தில் நிறைந்தவனே..
ஒவ்வொரு நொடியும்
உனையே
(சு)வாசிக்கிறேன்...
யாசிக்கிறேன்
உனை 
வாசிக்கத் தவறிய
நொடியினையே...!
யாசித்ததை 
வாசிக்க
சுவாசிக்கிறேன்..
உனை வாசிப்பதற்கான
என் யாசிப்பும், சுவாசிப்பும்
தொடர்கிறது
நீளும் நம் காதல் பயணத்தில்..!!

Sunday, 1 December 2013

சிந்திய வார்த்தை...!!


நான்
கருணையின்றி கொலைசெய்த
வார்த்தைகள்
கண்முன்னேத் தோன்றி
வினாவாயிரம் எழுப்ப...

கோபத்தில் திராவகமாய்
விழுந்த கொடிய வார்த்தைகள்...!
பாசத்தில்  நெகிழ்ந்து
நெஞ்சம் தழுவிய வார்த்தைகள்..
தோழமைகளோடான
கேலி வார்த்தைகள்...
பக்தியில் நெக்குறுகிய
வார்த்தைகள்..
காதலில்
கனிரசம் சிந்திய வார்த்தைகள்..
கருணையில் உருகி
கசிந்த வார்த்தைகள்..
அலட்சியப் படுத்துவோரிடம்
அறிவுரை வார்த்தைகள்...
புரிதலற்றோரிடம்
புரியவைக்க விரயமாகிப்போன
வார்த்தைகளை
மௌனமாய் அடைகாத்திருந்தால்
இயல்பில் இருந்து
என்றேனும்
தன் பலம் நிரூபிக்க
தரணியில் நிலைத்து
முத்தாய் மிளிர்ந்திருக்கலாம்..!

சிந்திய வார்த்தைகளை
மீட்டெடுக்க முடியா சோகத்தில்
கொலைசெய்யப்பட்ட
வார்த்தைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகிறேன்...!