நவராத்திரியின் பிண்ணனியில் நிகழும் நான் கண்ட சில சம்பவங்களை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.இந்தப்பதிவு யாருடைய நம்பிக்கையையும்,உணர்வுகளையும்
குறை கூறுவதற்காக அல்ல.
சற்று மாற்றி யோசிக்கலாமே என்ற
எண்ணத்தில் பகிர்கிறேன்.
*****
நவராத்திரி என்றவுடன் அழகிய
பொம்மைகள் நம் வீட்டை அலங்கரிக்கும் கொலுவும்,
வண்ண வண்ண புத்தாடைகள், வகை வகையான
சுண்டல் மற்றும் பலதரப்பட்ட நண்பர்களின் சந்திப்பு என நம்மை பல
வகையிலும் மகிழ்விக்கும் நினைவுகள்தாம் நம் நினைவிற்கு வரும்.இதன் பின்னணியில் இருக்கும் சில விசயங்களை பார்ப்போம்.
வட இந்திய
நவராத்திரி: வட இந்தியாவிலும்
நவராத்திரி சிறப்பாக
கொண்டாடுவார்கள். கொலுவைப்பதில்லை.
நவராத்திரியின் இறுதி 4 நாட்கள்
குடியிருப்பின் பகுதிகளில்
கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளின் நடனம், பாட்டு, ஓவியம் என பல
நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
மகிழ்வான விசயம்தான்..எனினும், துர்க்கா பூசையில் குழந்தைகளின் வயதிற்கு மீறிய சினிமாப்பாடல்களின் நடனம், பாட்டு இவை அவசியம்தானா... ?
இசைக்குழுவினரை அழைத்து இசை நிகழ்ச்சி. அவர்களாலும் அதே சினிமா பாடல்களே இசைக்கப்படும். கலை நிகழ்ச்சி என்றாலே சினிமா பாட்டு
மட்டும்தானா..?? நவராத்திரி ஏன்
கொண்டாடுகிறோம் என்பதை விளக்கும் வகையில்
ஒரு நாடகமாக அரங்கேற்றம் செய்யலாம்.
கருத்தாலோசனை, குழந்தைகளுக்கிடையே சிறு சிறு தலைப்பில்
அவரவர் வயதுக்கேற்ப பட்டிமன்றம் என பல நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தலாம். அதோடு ஒரு சம்பிரதாயம் கடைபிடிக்கும்பொழுது அது ஏன் கடைபிடிக்கப்படுகிறது
என்பதை வரும் சந்ததியினர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி
அவர்களை பின்பற்ற செய்யலாம். பல நிகழ்வுகள்
சம்பிரதாயத்திற்கு பின்பற்றப்படுகிறதே
தவிர ஏன் என்று அறியாமலேயே
பின்பற்றப்படுகிறது. எனவே அதன் பிண்ணனியில் விரயமாகும் பொருட்களையோ,
மனித உணர்வுகளையோ
கருத்தில் கொள்ள மறந்து விடுகிறோம்.
அடுத்து, நவராத்திரியின்
துவக்கநாள் முதல் பெண்கள் விரதம் இருந்து அஷ்டமி திதி
சிலரும்,நவமி அன்று சிலரும் விரதம் முடிப்பார்கள். முடிக்கும் சமயம் ஒன்பது
கன்னியாக்குழந்தைகளை(கஞ்சக் என இங்கு அழைப்பது வழக்கம்) அழைத்து
அவர்களுக்கு உணவு அளித்து பிறகு தம் தம் விரதம் துறப்பார்கள். நல்ல விசயம். ஆனால்சில நெருடலான சம்பிரதாயங்களை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்.
விரதம் முடிப்பவர்கள்
அனைவரும் ஒன்பது குழந்தைகளை அழைப்பார்கள்.
எனக்குத் தெரிந்தவரை
அவர்கள் ஒன்பது குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது தேவிக்கு உணவளித்து பிறகு
தாங்கள் அருந்துவதாக சம்பிரதாயம்.
ஒரு குடியிருப்பில் உதாரணத்திற்கு
கன்னியாக்குழந்தை (அதாவது பருவமடையாத பெண் குழந்தைகள்) 40 குழந்தைகள்
இருப்பின் அனைவரும் தம் குழந்தைகளை அனைத்து வீட்டிற்கும் அனுப்ப மாட்டார்கள். 50
வீட்டில் இன்று விரதம் முடிக்கிறார்கள்
எனில் அத்துனை வீட்டிற்கும் 40
குழந்தைகளில் 25 குழந்தைகளே
திரும்ப திரும்ப செல்லவேண்டும்.
அனைவரது வீட்டிலும் பூரி, கேசரி(இங்கு அல்வா
என சொல்வார்கள் வண்ணம் சேர்க்காத ரவை கேசரி), கொத்துக்கடலை
சுண்டல். இதுவே பிரசாதமாக குழந்தைகளுக்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய், அல்லது 5 ரூபாய்..ஒரு சிலர்
சிறிய பரிசுப்பொருட்கள் வழங்குவார்கள். ஹேர்பின்,
பென்சில் போன்று. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்வளவு
சாப்பிடுவார்கள்..?? அதிகபட்சம் 2 வீட்டு பிரசாதம்..மற்றவை அனைத்தும் மொட்டை மாடியிலும்,
மரத்தடியில் மாடு
சாப்பிடும் என போடப்பட்டு ஆங்காங்கே
உணவுப்பொருட்கள்
சிதறியிருக்கும். சக மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய உணவு சம்பிரதாயம் என்ற முறையில் குப்பையிலும், மரத்தடியிலும் கிடப்பதைக்காண
ரத்தக்கண்ணீர்
வராத குறைதான். குழந்தைகள் அனைவரது வீட்டிற்கும் செல்வதற்கான
காரணம் அவர்கள் கொடுக்கும் 5, 10 ரூபாய் மற்றும் தோழிகளுடன் பேசிக்கொண்டு
அங்குமிங்கும் சென்று விடுமுறை கழிப்பது அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு
போன்றே..இதன் ஆழம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் பெரியவர்களாகிய
நாம் அறிந்தவர்கள்தானே. அனைவரும் ஒரே உணவை பலமுறை ஒரே நேரத்தில் வழங்க
அவர்களால் சாப்பிட இயலுமா..?? சாப்பிட மாட்டார்கள் என அறிந்தும்
வழங்குவதன் காரணம் என்ன. தேவிக்கு உணவளிப்பதாக எண்ணுபவர்கள் இதை சிந்திக்காமல் இன்னும் சம்பிரதாயமாக தொடர்வது ஏன்..? இன்னுமொரு
வருத்தம் என்னவெனில் அந்தக்குழந்தைகளை தட்டு எடுத்து வா என கூறி அனுப்புவார்கள்
சிலர். தேவி
வீடு வீடாக தட்டு ஏந்திச் செல்கிறாளா..??
சில யோசனைகள்: அனைவரும் ஒரே நாளில் விரதம் முடிக்கும் காரணத்தினால், குழந்தைகளை அழைத்து தங்கள் சம்பிரதாயப்படி
பூசை முடித்து பிரசாதமாக ஒரு ஸ்பூன் மட்டும் குழந்தைக்கு சாப்பிட அங்கேயே
கொடுத்து வீட்டிற்கு பிஸ்கட்,
பழம்,
உலர்ந்த பழம், அல்லது
பரிசுப்பொருட்கள் என கொடுக்கலாம். விரயமும் ஆகாது அதே சமயம் தங்கள் வீட்டு
பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட்ட மன திருப்தியும் இல்லத்தாருக்கு
கிடைக்கும். அல்லது
ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்த பட்சம் 20 ரூபாய் செலவாகும்.
மொத்தம் 180/- ரூபாய் செலவழிப்பதற்கு பதில் வீட்டிற்கு ஒரு குழந்தை
அழைத்து ஒரே குழந்தைக்கு நல்ல ஆடை அல்லது அதற்கு தேவையான ஒரு பொருளை வாங்கிக்
கொடுக்க குழந்தையும் மகிழும்.
உணவுப்பொருட்களும் விரயமாகாமல்
இருக்கும். அல்லது அனைவரும் கலந்து பேசி தம் தம் வீட்டு பிரசாதத்தை கலந்து
தெருவோரம் யாசிப்பவர்களுக்கு,
ஆதரவற்றவர்களுக்கு என ஒரு இடத்தில் வழங்க
ஏற்பாடு செய்யலாம்.
சம்பிரதாயம்,பக்தி என்ற பெயரில்
சக மனிதனுக்கு கிடைக்கவேண்டிய
உணவுப்பொருட்கள் விரயமாக்கப்பட்டு
வீதியில் கொட்டப்படுவது மனதை வலிக்கச்
செய்கிறது. இவற்றை என் தோழிகளிடம் பேசி புரியவைத்து தற்சமயம் ஒரு சிலர் உணவாக வழங்காமல் பிஸ்கட்,
பழம் என்றே குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள்
என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரவர் சம்பிரதாயத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும்
குறை கூறவில்லை. அதை சற்றே மாற்று வழியில் யோசித்து விரயமாகாமல்
பயன்பெரும் வகையில் செயல்படுத்த முயற்சிக்கலாமே என்றே இந்தப் பதிவு.
தென் இந்திய நவராத்திரி: தென் இந்தியாவின் நவராத்திரியில், நவராத்திரி துவங்கியது முதல் அழகழகான பொம்மைகளை படிகளமைத்து
அழகு படுத்தி தம் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து, வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு நித்தமும் விதவித உணவு வகைகளை வழங்கி உபசரித்து ஒருசில
பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்வது பழக்கம்.
எந்த சம்பிரதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்டது
என்பதை ஆராயவிரும்பவில்லை.அது அவரவர் நம்பிக்கை, பக்தி சார்ந்த விசயம் என்பதால் அந்தப்பக்கம்
போகவேண்டாம். இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க அனைவரும் ஒருசேர சந்திப்பதற்கு
ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதாலும்,இயந்திரத்தனமான நகர வாழ்வில் சற்றே மன மாறுதலைக்
கொடுக்கிறது என்பதாலும்,இன்றளவும் கடைபிடிக்கப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியையே
அளிக்கிறது. வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை
குழந்தைகள் கண்டு களித்தும், நண்பர்கள் வீட்டிற்கு சென்றும், நண்பர்களை தம் தம்
வீட்டிற்கு அழைத்தும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.மிகவும் நல்ல விசயமே.
வட இந்தியாவில் குழந்தைகளை அழைத்து
பரிசுப்பொருள் கொடுத்து மகிழ்விப்பதுபோலவே இங்கும்,
திருமணமான பெண்கள், பருவமடையாத
கன்னிகளை அழைத்து பூசித்து அவர்களுக்கு உடை, மற்ற பொருட்கள்
வாங்கிக்கொடுப்பது வழக்கம். தன் இல்லத்துக்கு
வரும் மங்கையர்க்கு மஞ்சள், குங்குமம்
வெற்றிலைப் பாக்குடன், வசதியிருந்தால்
புடைவையும் வைத்து வழங்கிச் சிறப்பிப்பார்கள். அதன் நோக்கம் இல்லாதவர்களுக்கு இதை காரணமாக வைத்து தம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு வாங்கிக்கொடுப்பதற்காக
ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், காரணம் எதுவாக இருப்பினும் நல்ல செயல் என்பதால் அதை
கடைபிடிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
இருப்பினும், இங்கும் ஒரு சில
நெருடலான விசயங்கள் கண்களுக்குப்படத்தான் செய்கின்றன. வேற்றுமை மறந்து மகிழ்ச்சியாக
இருப்பதற்காக கடைபிடிக்கப்படும் இதுபோன்ற
சில பண்டிகைகளிலும் வேற்றுமையை
காட்டத்தான் செய்கின்றனர். கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள்,
உடைகள் வசதி இல்லாதவர்களாக
பார்த்து வழங்கினால் கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சி,
பெற்றுக்கொள்பவர்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால் நடப்பதோ வேறு. யாரிடம்
அதிகம் வசதிகள் இருக்கின்றனவோ அவர்களையே
திரும்பத் திரும்ப அழைத்து உடை
வாங்கி உபசரித்து அனுப்புகின்றனர் பலர். இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கவும் செய்கின்றனர்.
ஒருவேளை அந்த நேரத்தில் வசதி
குறைந்தவர்களும் வர நேரிடின் தனி தனி பரிசுப்பொருட்கள் உடைகள்
வைத்திருப்பார்கள் தர வாரியாக தருவதற்கு.
எதன் அடிப்படையில் இப்படி தரம் பிரித்து
தம் தரம் தாழ்த்திக்கொள்கின்றனர் தெரியவில்லை. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு
கொடுத்து மகிழ்வதே உண்மையான மகிழ்ச்சியாக
இருக்கும். இல்லாதவர்களுக்கு வழங்கினால், நீங்கள் கொடுத்ததை உபயோகிக்கும் ஒவ்வொரு
முறையும் தங்களை நினைவுகூறுவார்கள்.
அதே வசதியானவர்களுக்கு
மட்டும் பார்த்து பார்த்து உங்களால்
வழங்கப்படும் உடையும், பரிசுப்பொருட்களும்
உங்கள் வீட்டு கொலு பொம்மைபோல் அவர்களது
அலமாரியில் கொலுவீற்றிருக்கும் என்பதை மறவாதீர்கள். சம்பிரதாயத்தை மதிக்கத் தெரிந்த
நாம் இனியாவது சக மனிதனது உணர்வையும் மதித்து மனிதம் வளர்க்க இதுபோன்ற பண்டிகைகளை பயன்படுத்திக்கொள்வோம்.