முகப்பு...

Wednesday, 27 June 2012

மௌனம்....!!!


மௌனத்தையடைய 
மௌனமாய் மௌனத்தை நாட....
மௌனத்தையடையுமுன்
மௌனத்தையறிந்து மௌனத்தை நாடினால்
மௌனத்தை அடைவதெளிதாகுமே....!!


மௌனமென்பதென்ன..?
மௌனமாய் இருப்பது மௌனமா...?
மௌனமென உணர்வது மௌனமா....?

நானிருப்பது மௌனமா..?
மௌனத்தில் நானிருக்கிறேனா..?

மௌனத்தை நாடிய எனை
மௌனம் மௌனமாய் வினவ...
மௌனத்தையடையும் முயற்சியில் 
மௌனமாய் நானும்....!!!

Sunday, 24 June 2012

தவம்....



காலையில் பிறந்து,
வண்ணமயமாய் பூத்துக்குலுங்கி..
கண்களுக்கு அழகூட்டி
மணம் வீசி
மனம் கவர்ந்து
மாலையில் மரித்து .
அனைவரையும் மனம் வாடச்செய்து...



ஒரே நாளில் ஜனித்து, மரணிக்கும்
மலரின் ஒருநாள் பிறப்பை நோக்கி
தவமிருக்கும் செடியாய்...

வனியில்
சை தவிர்த்து
ன்சொல் பேசி
கை செய்து
ண்மையுணர்ந்து
க்கம் குன்றாமல்
ண்ணத்தில் திண்ணமாய்
இறைகாணும் க்கமுடன்
ம்புலனடக்கி.
ருமித்து
ம்காரம் உரைத்து...
வியம் பேசாதிருந்து..

அஞ்ஞானம் துறந்து..
மெய்ஞ்ஞானம் உணர தவமிருக்கும்
எனை எனக்கு உணர வைத்து
ஆட்கொள்வாயோ...?

Saturday, 23 June 2012

அருவம்...



எண்ணத்தை எழுத்தாக்கி
எழுத்துக்கு உயிரூட்ட யெத்தனிக்க..

எண்ணமெலாம் ஆட்கொண்டிருக்கும் உனை
எழுத்தில் வடிப்பதும் இயலுமா...?!!!


சொற்களில் அடங்காச் சித்திரமே..
பிரபஞ்சத்தை இயக்கும் பேராற்றலே..!!
எதுகையும், மோனையும்
உனை
ஏட்டுக்குள் அடக்கிடுமா..??

உணர்வால் உணர்ந்து

உணர்வால் உணர்த்தவேண்டிய உனை
உவமான, உவமேயத்தில்
உருவகப்படுத்தத்தான்  முடியுமா..??

அருவமான உனை

உருவத்தில் கண்டு அகமகிழ
அனைத்திலும் அனைத்துமாகி 
என்னகத்தே  குடிகொண்டவன்
எனை 
உன்னகத்தே அழைப்பதெப்போது..??

Thursday, 21 June 2012

புதிர்........!!



உன் உதட்டோர இகழ்ச்சியும்
ஒற்றைச் சொல்லும்
ஓராயிரம் ஊசியாய் இறங்க...
வழியும் இரத்தமும்
உன் பெயரைக் கூற..
இதயம் வடிக்கும் இரத்தமழையில்
உனை குளிர்விக்கிறேன் நானும்...!!!



நொடியில் நீ கூறும்
அன்பான வார்த்தை
மலராய் மனதை வருட..
காயம் ஏற்படுத்தியவனே
காயத்திற்கு மருந்தாகவும் விளங்கி
புரியாத புதிராய்த் தோன்றுகிறாய்..!!!

அன்பையும் புதிராய் வழங்கும்
நீ
அன்பை
அன்புடையவருக்கு
அன்புடன் பகிரவேண்டும்..
என் விருப்பமும் நிறைவேற்றுவாயா....??