முகப்பு...

Wednesday, 11 January 2012

இதயத்தின் இதயம்......!!!


என் இதய வீணையில்
நாதம் எழுப்புபவனே....!!

இடம் மாறிய
என்னிதயத்தை
உனதாய் நீயும் போற்றாயோ...?

என்னவனே..!!
என்னிதயம் இருக்குமிடம்
அறியாதவனா நீ...??

உன் மனதோடு
என் மனமும் உரையாட
எனை மனநோயாளியாய்க்
காண்பதேனோ...??

என் மனக்கோட்டையில் குடிகொண்டு
என் மதிமயங்கச் செய்வதுமேனோ.??

உனைச் சுமக்கும்
என்னிதயத்தின்
நிறை தாங்காயோ நீ..??

என்னிறை தாங்கா நீயும்
எனையிறக்கி உனக்காய்
ஏங்கவைப்பதும் ஏனோ...??


சிப்பிக்குள் முத்தாய் உனைப் போற்றும்
என்னிதயம் தஞ்சம் வந்த உன்னிடம்.,
மங்கள நாணணிந்து..
மஞ்சம் வர முடியாமல் போனதேனோ..??


பேரன்பின் பெருங்கடலுள் சங்கமித்துப்
பேரானந்தத்தில் திளைத்து.,

நெஞ்சத்திலும், மஞ்சத்திலும்
உனைச்சுமக்க விரும்பும் நான்...
உன் பேரன்பால்.,
உன் கரு சுமந்து..

பிரம்மனும் பிரமிக்கக்
கட்டபொம்மனாய்,
ஜான்சிராணியாய்
மகவுகளை ஈன்றெடுத்து.,
உன் குலம் தழைக்க செய்யும்
மனமிருந்தும் வரமில்லாமல்
போனதேனோ..??
யார் வாங்கிவந்த சாபமோ....??



Monday, 9 January 2012

மனமென்னும் குதிரை.....



என் 
உள்ளத்து ஆசைகளைக்
கொட்டிவிடத் துடிக்கும்
மனக்குதிரை
உனை நோக்கிப் பயணிக்க.,


நான்
காணுமிடமில்லாம்
நீயே காட்சியளிக்க...

நோக்கும் பொருளெல்லாம்..
உனதாய்த் தோன்ற..

சிந்தையெல்லாம்..
நீயே நிறைந்திருக்க.....

என் மனதாளும் உன்னை.,
உனக்குணர்த்தத் தயங்கும் எனக்குக்
கலைமகள்  அருளியிருந்தாள்.,
காவியமாய் வடித்திருப்பேன்..

அலைமகளும் 
அருளியிருந்தாள்...
உன்னிடம் கூறியிருப்பேன்..

அலைமகளும், கலைமகளும்
ஆசி வழங்காதிருக்க...

கலைமகளின் ஆசிபெற்ற.,
மனமறியும் மொழியறிந்த
நீயே...
அறிவாயா..? என் மனமறிவாயா....??



Sunday, 8 January 2012

நான் யார்...??



நான் யாரென
என்னை நானறிய

எனையறிந்த நீ..
என்னை
எனக்கு உணர்த்தாமல்..

நீயறிந்த என்னை
நான் அறிவது
எங்ஙனம்..??

என் சிவனே விளக்கு..
என் அறியாமையை விளக்கு...
                                   ************************************************

சரீரம்....

 

சாம்பலாகும் சரீரமென அறிந்தே
இவன்.,
பயமில்லா வாழ்க்கை வாழ்கிறான்.....

ஈருடல் ஓருடலானது
இங்கே
இதயம் இணைந்ததாலே.

சாம்பலாகும் சரீரமும்
சுகம் விரும்ப..

அழிவில்லா ஆன்மாவும்
ஆசை ஒழிக்குமா என்ன...???

அழிவில்லா ஆன்மா
என்றே யிவன்.,

அனைத்தும் தனதாக்க 
ஆட்டம் போட்டு.. 
அடுத்தவனை அழித்து 
ஆளுவதற்கு ஆசைப்படுகிறானோ...??

           ***********************************

Saturday, 7 January 2012

தேனீக்கள்……





அனுதினமும் அயராது..
அரும்பாடுபட்டு
மலருக்கு மலர்
மகரந்தத்தில் மூச்சையடக்கி..
சிறு துளியாய் நான் சேர்த்த
அத்தனையும்..
தீயிட்டு..
எனை விரட்டி...
உன்நலம் காண..
எனைக் கொல்லும் 
இரகசியம்தான் என்ன.? 

Wednesday, 4 January 2012

ஆண்கள் இல்லா உலகம்....!!



புயலை சந்தித்தப் பூமியாய்...
எங்கும் வெறுமை........:(

என் அழகை
இரசிக்க ஆளில்லாமல்..
அலங்கரிக்கவும் தோன்றாமல்...

ஆண்களைக் கண்டால்
வரும் அந்த கொஞ்சுமாங்கிலம்
பேசுவது எங்ஙனம்..??


விடியுமுன்னெழுந்து..
காஃபி போட்டுக் 
கவிதையாய் பேசி எழுப்புவது யார்,...??

யாரை வைத்து...
சமையல் கற்றுக்கொள்ள...

தோட்டத்தில் மலர்ந்தாலும்
அவன் சூட்டும் மல்லிக்கு
உள்ள வாசம் வருமா...??

இனி நொடிக்கொரு முறை
என்ன செய்கிறாய் என அன்பாய்
கண்காணிப்பது யார்..???

பக்கத்து வீட்டின் பெருமையைக்
கூறுவது யாரிடம்...??

தொலைக்காட்சித் தொடர்
விளம்பர நேரத்தை
கழிப்பதும் சாத்தியமா...??

வெங்காயம் நறுக்கிக்கொடுக்க..
பொழுதுபோகாத நேரத்தில்
பிறந்தவீட்டை வம்புக்கிழுக்க...
யாரிருப்பார்...??

சண்டையிட,
நகைக்கடை,புடவைக்கடையில்
குழந்தையுடன் காத்திருக்க
ஆளில்லாமல்..

நகைபட்டுப்புடவை கேட்பது
யாரிடம்..??

மங்கையரின் தங்கத்தைத் திருடி
பிழைப்பவன் வாழ்வது எங்ஙனம்...??

திருடனில்லா ஊருக்கு
காவல்நிலையமெதற்கு...??
காவல்துறையுமெதற்கு...??

சிகரெட்மதுபானக் கடைகள்
வெறிச்சோடி கிடக்க...

குற்றமில்லா இந்த பூமியில்..
மாற்றத்தை எதிர்நோக்கி
பூமித்தாயும்...

என் சுகம் பகிரவும்,
சோகத்திற்கு காரணமாயும்
யாரிருப்பார் இனி...??

ஆணில்லாத உலகம்..
அமானுஷ்யமாய்....
சோகமே வடிவாய்.....:(:(



Tuesday, 3 January 2012

அன்பெனும் வன்முறை....!!!

அன்பும் வன்முறைதான்..

நான் உன் மீது கொண்ட அன்பும்
வன்முறைதான்...

உனையே சுற்றிவரும் என் மனமும்

வன்முறையானதுதான்...

உன்னோடு பேச விரும்புவதும்
வன்முறைதான்...

உன் குறுந்தகவலில் கண்விழிக்க
நினைப்பதும் வன்முறைதான்...

செய்தி அனுப்புவதும்
வன்முறைதான்...

உன்னைக் காண விரும்புவதும்
வன்முறைதான்...

உனை என்னோடு
இணைத்துப் பார்ப்பதும்
வன்முறைதான்...

என்னுடனேயே.,
இருத்திப் பார்க்க நினைப்பதும்
வன்முறைதான்...

தள்ளியிருந்தாலும்.
தனதாய்ப் பார்ப்பதும் வன்முறைதான்...

நான் கொண்ட நம்பிக்கையும்
வன்முறைதான்...

வன்முறையால்
வன்முறையை
வன்முறையாக
வெளிப்படுத்தும் என் அன்பும்
வன்முறைதான்..

ஓ..!
நீ அஹிம்சாவாதியல்லவா..!!??

வன்முறைக்கு..,
வன்முறை பதிலாகாதே...

வன்முறையான என்
அன்பை நிராகரித்து
அஹிம்சையால் என்னன்பை
புறக்கணிக்கிறாயோ....???



Sunday, 1 January 2012

கடவுளின் வரம் 2012.....

கடவுள்
கனவில் தோன்றி

வரமொன்றளிக்கிறேன்..
வேண்டுவன கேளெனக் கூற...

வேண்டியவர் வேண்டியதை
வினவுவதல்ல வரம்..
வேண்டியதை வேண்டிய நேரத்தில்
வேண்டியவர் வேண்டாமலேயே
வேண்டியவர்க்கு
வழங்குவதே வரம்..

நல்லதுவெதுவோ அதையே
வரமாய் வழங்கிடுவென நானும் வேண்ட..

நாட்கள் பல நானும் சுமந்து..
நல்லவிதமாய் பிரசவித்து...

மூன்று கோடியே,
ஐந்து இலட்சத்து
முப்பத்து ஆராயிரம் நொடிகளான
நேரமென்றக் குழந்தையை
உனக்காய் பரிசளிக்கிறேன்..

நீயும்
அதை விரயமடிக்காமல்...
நல்வழியில் பயன்படுத்தி
பேரின்பத்தை அடைவாயென
கடவுளும் ஆசிர்வதிக்க...

கடவுள் தந்தக் குழந்தையாம்.,
நேரத்தை கச்சிதமாய்
காப்பாற்ற.,
காலமதை கணக்கிட்டு
வீணடிக்காமல்...
காரியத்தை காலத்தே செய்வேன்...

வரமென வந்த
குழந்தையோடு இணைந்து..

உலக மக்களுக்கு..,
இயற்கையழகை இனிதே
வழங்கிடுவேன்...

செயற்கையின் அடிமையான
நான் சிந்தனையை வளமாக்கி
இயற்கையோடு இயன்றவரை 
இணைய முற்படுவேன்...

நானும்
கண் விழிக்கிறேன்..
கடவுளுக்களித்த வாக்கை
காப்பாற்றவே...
கடுமையாய் உழைத்திடுவேனே....
நீங்கள்....?????