முகப்பு...

Friday, 6 November 2020

மழைத்தோழன்..

 

மழையெனும் வார்த்தையே அத்தனை அழகு..! இந்த வார்த்தையை கேட்டவுடனே மனதில் ஒரு குளிர்ச்சியை/மகிழ்ச்சியை ஏற்படுத்தி செல்லும்.  மழை என்னுடன் என்னவாக இருந்து வருகிறது என யோசித்துப் பார்க்கையில், பால்யகால நட்பாக இருந்து தொடர்ந்து வருவதை உணர்கிறேன்

மழையுடன் ஆன என் உணர்வுகளையும், அனுபவங்களையும் வார்த்தையில் வர்ணிக்க இயலுமா எனில் கடினம்தான். சிறுவயதில் மழையை பலமுறை சந்தித்திருந்தாலும் அதை அவ்வளவு உணர்ந்ததில்லை.  எனது ஊர் சோழமண்டலம் தஞ்சையை அடுத்த நீடாமங்கலம்.  வெண்ணாறு, கோரையாறு, பாமினியாறு என மூன்று ஆறுகளும் மற்றும் அது சங்கமிக்கும் இடம் மூன்றாத்து தலப்பும் உள்ளது.  வீடு பக்கத்தில் வெண்ணாறு.  கிராமம் என்பதால் ஆற்றில் குளிப்பது துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது ஏன் பக்கத்தில் மாடும் குளிப்பாட்டிக் கொண்டிருப்பார்கள்.  இத்தனையும் நடந்தாலும் சளிப்பு ஏற்படாமல் ஆறு, மழை, கடல், அருவி என  நீர் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனுடன் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

மழைவருவது போல் இருந்தால், துணிதுவைக்க ஆற்றுக்கு கிளம்பிவிடுவேன்.  துணிதுவைத்து, குளிக்கும்போது எதிர்பார்த்தபடி மழையும் வரும். கழுத்தளவு ஆற்று நீரில் அமிழ்ந்திருக்கும் சமயம்,   உச்சியிலிருந்து வருணன் தன் காதல் வார்த்தையில் பூமகளுக்குக் கவிதை பாட, கவிதையை ரசிக்கும் என்மீதும் தோழமையாய் சில வார்த்தைகள்.  தோழமையின் வார்த்தையை நீரிலிருந்து அனுபவித்ததை இப்பொழுது நினைக்கையிலும் மகிழ்ச்சியில் மெய்சிலிர்க்கும், அந்த உணர்வை வெளிப்படுத்த இன்றுவரை வார்த்தைகளை தேடுகிறேன். (துவைத்து மழை ரசித்து குளிப்பதில் வீடு மறக்க,  ஆற்றுக்குப் போனவள் ஆற்றோடு போனாளோ என வீட்டிலிருந்து தேடிக்கொண்டு அம்மா வந்துவிடுவார்)

அன்றுமுதல் மழை என் மனம் நெருங்கிய தோழனானது.  எப்பொழுது மழை வந்தாலும், அதிகபட்ச நேரங்களில் குடை தவிர்த்தே மழையோடான நட்பை அனுபவித்து அளவளாவிச் செல்வேன்.  நட்பென ஏற்றதாலோ என்னமோ, நள்ளிரவில் மழையில் நனைந்தாலும், மழையினால் உடலுக்கு சுகமில்லாது போனதில்லை இதுவரை.  சென்னையில் பணிபுரிந்த காலத்திலும் ஐப்பசி மாத அடைமழைகூட எனக்கென்னமோ ரசிக்கும்படியாகவே இருக்கும். 

தில்லியில் அரிதாக மழை பெய்யும்.  மழை வரும் நேரம் அடுப்பில் உணவிருந்தாலும் நிறுத்திவிட்டு நானும், மகளும் வீட்டைப்பூட்டிக்கொண்டு மழையோடு உறவாட சென்றுவிடுவோம்,  மழை நின்றபிறகு வீடு வருவோம். மழையில் நனைந்தபடி ஆற்றில் குளிப்பது ஒரு சுகமெனில், மழையில் நனைந்தபடி பூங்காவில் ஊஞ்சலாடுவது அது ஒரு தனி சுகம்.  

2017 ல் குமிளிக்கு அருகில் உள்ள கண்ணகி கோயிலுக்கு சித்ராபுவுர்ணமி அன்று சென்றபொழுது, அன்று நிச்சயம் மழை வரும் என அங்கிருந்தவர்கள் கூற, தோராயமாக 5000 அடி உயரமலையில் இருந்து என் மழைத்தோழனை கண்டு ரசிக்க ஆர்வத்துடன் காத்திருந்த என்னை ஏமாற்றவில்லை. மதியம் 3 மணிக்கு வெண்மேகங்களை கரம் கொண்டு தொட்டுவிடலாமோ.  என எண்ணும்படி மலையின் உச்சியில் நின்றபடி என் மழைத்தோழனை இருகரம் நீட்டி வரவேற்க, உள்ளமும், உடலும் குளிர்ந்தது தனி சுகம்.  தனிவீட்டில் மழையை ரசிப்பது மட்டற்ற மகிழ்வைத் தரும்.  வீட்டு முற்றத்தில் ஓட்டின் ஒரு மூளையிலிருந்து தண்ணீர் அருவிபோல் வரும் அதில் அருவியில் குளிப்பதுபோல் குளிப்பது, பாத்திரம் வைத்து நீர் பிடித்து சில்லென்ற நீரை உபயோகிப்பது, முற்றத்திலிருந்து நீர் வெளியேறும் இடத்தைத் தற்காலிகமா அடைத்து காகித கப்பல் செய்து விட்டு மகிழ்வது இதெல்லாம் தனிவீட்டில் மட்டுமே கிடைக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில்  இத்தனை சுகம் இல்லையெனினும் இரண்டாவது மாடி என்பதால் மழை வரும்போதெல்லாம் மொட்டை மாடி சென்று என் நண்பனை காணச்சென்று விடுவேன்.  இரவானாலும், பகலானாலும்.  அக்கம் பக்கத்தினர் என்னை சற்றே வினோதமாக பார்த்து சுரம் வந்துவிடப்போகுது நனையாதீங்க எனக்கூற,  புன்னகைத்து மழையில் நனையத்தான் செல்கிறேன், மழை பிடிக்குமெனக் கூறிக் கடந்துவிடுவேன். மழைத்தோழன் மனம் நெருங்கிய நட்புமட்டுமல்ல, கவலையில் மனம் வெதும்பிக் கொண்டிருந்தாலும், மழையில் நனையும்போது கவலையில் வெளியேறும் கண்ணீரை தன் நீரால் இல்லாது கரையச்செய்து விடுவான்.  மனம் விட்டு அழ முடியாதவர்களுக்கு மழை ஒரு உற்ற நண்பனாய் விளங்கி ஆறுதல் அளிக்கும்.  மழையை வெளியில் மட்டும் உணர்ந்தால் போதுமா என்ன…? உள்வாங்கி அதன் குளிர்ச்சியை உணரவேண்டாமா..?? மாடியில் ஒரு அகல பாத்திரம் வைத்து நீர் பிடித்து வெள்ளைத்துணியில் வடிகட்டி சேமித்து வைத்து குடிக்கப் பயன்படுத்துவேன்.  உள்ளத்தைக் குளிர்வித்து, உடலை குளிர்வித்ததோடு குடலையும் குளிரச்செய்யும் அதன் சுவையே அலாதிதான்.  

என் தோழனின்   வரவு விரயமாகிறதே என ஒவ்வொருமுறையும் வருந்துவதுண்டு.  குடியிருப்பு வாசிகளிடம் பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்து பணம் சேகரித்து, இரண்டு வழியில் இரண்டு போர்களுக்கும், ஒரு வழியில் நீர்தேக்கத் தொட்டியிலும் என மூன்று வகையாக மழை நீர் சேகரிப்புக்கு  ஏற்பாடு செய்து என் நண்பனை வீட்டில் கொஞ்சம் சிறைபிடித்து வைக்கும் என் திட்டம் சென்றவருடம் நிறைவேறியது.   

நண்பனென்றால் மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கவேண்டுமா என்ன…? சற்று வலியையும் கொடுக்கத் தவறவில்லை.  ஒவ்வொரு முறை மழையின்போதும் ஆங்காங்கு எத்தனையோ சோகச்செய்திகளை கேட்டிருக்கிறோம்.  அந்த நேரம் வருத்தம் ஏற்பட்டு மனம் சற்று அவர்களுக்காய் வருந்தினாலும், ஏனோ நீங்கா வடுவாய் நிலைத்ததில்லை.  இயற்கைக்கு முன் நாம் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு அவ்வப்பொழுது கவலை பட்டு ஆறுதல் அடைவதுண்டு.

ஆனால் இந்த முறை என் தோழன் கொடுத்த வலி ஏனோ இன்றும் மறக்க முடியவில்லை.  சென்ற வருடம் செப்டம்பர் 17 அதிர்ச்சி செய்தி முகனூலில் அறிமுகமான  8 வருட பழக்கம் உடன்பிறவா அன்புத்தம்பி.  ஆனால் உள்ளத்தினுள் பாசத்தை விதைத்து, அக்காவென அன்பாய் பழகியவன்,.  ரசனைக்காரன், என்னை காணவரும் பொழுதெல்லாம் இவ்ளோ நல்லா சமைக்கிறியே ரெஸ்ட்டாரண்ட் துவங்கு, அல்லது யு ட்யூப் சேனல் துவங்கு, உன்னை எக்ஸ்ப்ளோர் செய்துகோக்கா என புரியவைப்பான்.  அன்று அவன் மழையில் சென்றபொழுது இடிவிழுந்து இறந்த செய்தி முகனூலில் பதிவாகக்கண்டு, நம்ப மறுத்து ஒவ்வொருவருக்காய் போன் செய்து உறுதி படுத்தி, இறுதியாக அவனை காணக்கூட முடியாமல் மனம் கலங்கிய அன்று, முதன் முறையாக மழைத்தோழன் மீது ஒரு வருத்தமும், பிணக்கமும் உண்டானது.  ஆனால் வெறுப்பில்லை. அன்று முதல் மழை வந்தால் ஓடிச்சென்று குதித்து ஆரவாரம் செய்யாது ஏனோ மனம் ஒருவித கலக்கத்துடன் முடங்கிக்கொண்டது.  இரண்டு மூன்று மாதங்கள் பிறகு அவன் இழப்பு மனதை தைத்துக் கொண்டிருந்தாலும், மழை மீதான வருத்தம் மெல்ல குறையத்தொடங்கியது.  அதன்பிறகு மழையும் இல்லை, என்றேனும் அரிதாக மழை வந்தாலும், நனைவதற்குத் தடை.  கொரானா காலத்தில் சளி சுரம் வந்தால் என்ன செய்வது என. எனவே ஒரு வருடமாக நான் கண்டு, கேட்டு, உணர்ந்து சுவைக்காது விட்ட என் மழைத்தோழனின் அன்பு வார்த்தைகளுக்காய் காத்திருக்கிறேன் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையில்.